

கவனச் சிதறலுக்கு யாராவது அடிமை ஆவார்களா? கேட்கவே அபத்தமாக இருக்கிறதுதானே. ஆனால், அதுதான் உண்மை. இத்தொடரைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு இரண்டு விஷயங்களைப் பற்றியே அடிக்கடி பார்த்துவருகிறோம் என்பது தெரியும்.
கவனம், அடிமையாதல். நம் கவனம் எப்படிக் குவிகிறது, சிதறுகிறது என்பதைப் பார்த்தோம். டோபமின் போன்ற வேதிப்பொருள்கள் அதற்கு எப்படிக் காரணமாகின்றன என்பதையும் பார்த்தோம். போதைப் பொருளுக்கு அடிமையாகும்போது இதேபோல் விளைவுகள் ஏற்படுகின்றன என்றும் பார்த்தோம்.
ஒரே செயலைத் தொடர்ந்து செய்தால் மூளை சலிப்படைகிறது. புதிதாக, ஆர்வமூட்டும் ஒரு செயலைச் செய்தால் மூளையில் டோபமின் சுரக்கிறது. மீண்டும் மீண்டும் அதைச் செய்கிறோம். ஒவ்வொரு முறையும் நம் கவனத்தை ஒரு செயலில் இருந்து திசைதிருப்பி வேறொன்றில் ஈடுபடுத்தும்போது, நம் மூளையில் இந்த டோபமின் அதிகமாகச் சுரக்கிறது.
சலிப்படைவது என்பது டோபமின் தூண்டுதலை மூளை விரும்புவதுதான். தூண்டுதல்கள் அதிகமில்லாத நிலையில் கவனச் சிதறலுக்கான வாய்ப்பு குறைவே. ஆனால் இணையதளங்கள், திறன்பேசிகள் போன்றவை ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான தூண்டுதல்களோடு வரு கின்றன. இது இமயமலை உயரத்துக்கு வாழைப்பழங்களைக் குவித்து வைத்தி ருக்கும் இடத்துக்கு ஒரு குரங்கு செல்வதைப் போன்றது.
தொலைக்காட்சி யுகம்: நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமானது, தொலைக்காட்சி. திறன்பேசிகளுக்கு முன்பு மக்கள் அதிகம் அடிமையாகியிருந்த விஷயம் தொலைக்காட்சிதான் (அமெரிக்க ஆய்வுகளில் தினமும் ஆறு மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பதாகச் சிலர் தெரிவித் திருந்தனர்).