

சமூக ஊடகங்கள் சூதாட்டம் போல் நம்மை ஈர்ப்பதற்குக் காரணம் அவற்றில் இருக்கும் எதிர்பாராததன்மை எனப் பார்த்தோமல்லவா? இன்னொரு முக்கியமான பண்பு, அவற்றில் கிடைக்கும் சமூக அங்கீகாரம்.
மனிதன் ஒரு சமூக விலங்கு. பிற விலங்குகள் அநேகமாகத் தங்களது எல்லாத் தேவைகளையும் பெரும்பாலும் சுயமாகவே பூர்த்தி செய்துவிடும். ஆனால், மனிதன் மட்டும்தான் எல்லாத் தேவைகளுக்கும் யாரையாவது நம்பி இருக்கிறான்.
குறிப்பாக, நாகரிகம் வளர்ந்த பிறகு மனிதன் சமூகத்தை மிகவும் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. நாம் உபயோகிக்கும் பற்பசை நமக்குக் கிடைக்க, பற்பசை தயாரிக்கும் நிறுவனத்திலிருந்து பெட்டிக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சி வரை பலரது கூட்டு முயற்சி தேவை.
ஆக, சமூக அங்கீகாரம் என்பது மிக முக்கியமான ஒன்று. ஒரு குழுவாக இயங்குவது மிக அத்தியாவசியமான பங்காக இருக்கும் போது குழுவினரால் நாம் மதிக்கப்பட வேண்டியது இன்றியமையாததாகிறது.
ஐந்து அடுக்குகள்: பிரபல சமூக உளவியலாலர் அபிரஹாம் மாஸ்லோ, மனிதனின் தேவைகள் ஒரு பிரமிட் போல ஐந்து அடுக்குகளாக இருப் பவை என்கிற கருத்தை முன்வைத்தார். கீழே இருக்கும் தேவைகள் நிறைவேறினால், அடுத்த கட்டமாக மேலே இருக்கும் தேவைகளுக்குச் செல்கிறோம். பசி, காமம் போன்ற அடிப்படைத் தேவைகள் அந்த பிரமிட்டின் அடிமட்டத்தில் இருப்பவை.
அதற்கு மேல் வேலை, உறைவிடம் போன்ற பாதுகாப்புத் தேவைகள். பின்னர் அன்பு, பாசம் போன்றவை. அதற்கு மேலே நான்காவது அடுக்கில் சமூக அங்கீகாரம், புகழ் போன்றவை. இறுதியாக, நம் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பன போன்ற தத்துவார்த்தத் தேவைகள்.