

அவர் ஒரு வாகன ஓட்டுநர். அவருக்குப் பார்வையில் பிரச்சினை இருப்பதுபோல் தெரிந்தது. வாகனம் ஓட்டும்போது பார்வையில் அசெளகரியத்தை உணர்ந் தார். வீட்டில் இருந்த பழைய சொட்டுமருந்தை இட்டுப் பார்த்தார். எந்த முன்னேற்றமும் இல்லை.
கண்ணாடி லென்ஸ் பவர் மாறியிருக்குமோ என்று எண்ணி, நேரம் கிடைக்கும்போது மருத்துவமனை செல்லலாம் என்று இருந்துவிட்டார். அவருக்குச் சர்க்கரை நோய் இருந்தது; சர்க்கரை கட்டுப்பாட்டிலும் இல்லை.
ஒருநாள் வாகனம் ஓட்ட முடியாத அளவுக்குப் பார்வை பாதிப்பு. வேறு வழியில்லாமல் கண் மருத்துவமனைக்குச் சென்றார். கண்ணுக்குள் லேசாக ரத்தக்கசிவு இருப்பதாகவும் அதனால் கண்ணில் ஊசி போடவேண்டும் என்றும் சொல்லிவிட்டார்கள். சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்காததால் அவருடைய கண்ணின் விழித்திரை (Retina) பாதிப்புக்கு உள்ளாகிவிட்டது.
இதனால், ஏற்கெனவே ஏற்பட்ட பார்வை பாதிப்பைச் சரிசெய்ய முடியாது; சிகிச்சையின் மூலம் தற்போதுள்ள பார்வையை மட்டுமே காப்பாற்ற முடியும் என்று மருத்துவர் சொன்னதைக் கேட்டு அவருக்கு உலகமே இருண்டுவிட்டது.
அவரைப் போலவே சர்க்கரை நோய் விழித்திரைப் பாதிப்பால் இன்று பலரும் துன்பப்படுகிறார்கள். இதன் தாக்கத்தைத் தெரிந்துகொள்ள அருகில் இருக்கும் கண்மருத்துவமனையின் விழித்திரை பிரிவுக்குச் (Retina Section) சென்றால் தெரியும்.
ஒலிபெருக்கியில் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்குக் கூட்டம் இருக்கும். கண்ணில் ஊசிபோடும் இடத்தில் கூட்டம், விழித்திரை படம் எடுக்கக் கூட்டம், லேசர் சிகிச்சை செய்யும் இடத்திலும் கூட்டம் என்று எங்கும் கூட்டம்தான். சர்க்கரை நோய்க்கு முறையாக சிகிச்சை பெற்று, அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் கண்ணில் ஏற்படும் இதுபோன்ற தேவையில்லாத துயரங்களைத் தவிர்க்க முடியும்.
பார்வை பாதிப்புக்கான காரணம்
சர்க்கரை நோய் இருப்பது பெரும்பாலும் தொடக்க நிலையிலேயே கண்டறியப்படுவதில்லை. தாமதமான நிலையில் கண்டறியப் படும்போது, கண்ணில் ஏற்கெனவே பார்வை பாதிக்கப்பட்டுவிடுகிறது. பாதிப்பின் தொடக்க நிலையில் எந்த அறிகுறிகளும் வெளிப் படுவதில்லை.