

இதயச் செயலிழப்புக்கு பைபாஸ் ஆபரேஷன் செய்துகொண்டு சிகிச்சை பெற்று வரும் ஒருவர் என்னைச் சந்தித்தார். சில நாள்களாகத் திடீர் மூச்சுத்திணறல், நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் என்று கூறினார். விசாரித்ததில் இதயச் செயல் திறனைக் கூட்டும் மாத்திரையையும் நீரை வெளியேற்றும் ‘டயூரிடிக்ஸ்’ வகை மாத்திரை யையும் மூன்று மாதங்களாக நிறுத்திவிட்டதாகக் கூறினார்.
இந்த மாத்திரைகள் பற்றித் திறன்பேசியில் ‘சாட்ஜிபிடி’யிடம் கேட்டுப் பக்கவிளைவுகள் குறித்து அறிந்ததால், நிறுத்திவிட்டதாக அவர் சொன்னதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இணையத் தேடல் மூலம் கிடைக்கும், மருத்துவ நிபுணரால் உறுதிப்படுத்தப்படாத மருத்துவத் தகவல்களை நம்பி அதிகப் பதற்றமும் அச்சமும் கொள்ளும் மக்கள் இன்று அதிகரித்துவருகின்றனர்.
திணறடிக்கும் செயலிகள்
லேசான தலைவலி, நெஞ்செரிச்சல், முதுகுப்பிடிப்பு, தொண்டை வலி போன்ற வற்றைச் செயற்கை நுண்ணறிவுச் (ஏஐ) செயலிகளிடம் கேட்டு, அவற்றுடன் மணிக்கணக்கில் உடல்நிலை குறித்து உரையாடும் போக்கு அதிகரித்துவருகிறது.
இதுபோன்று கேட்கப் படும் மருத்துவக் கேள்விகளுக்கு ஆதி முதல் அந்தம்வரை அனைத்துத் தகவல்களையும் கொடுத்து அவை திணறடிக்கின்றன. தலைவலி என்று தேடினால் மைக்ரேன் என்று தொடங்கி இறுதியில் மூளைப் புற்றுநோய் என்றும், தொண்டை வலியாக இருந்தால் டான்சிலைட் டிஸ் என்று தொடங்கி இறுதியில் தைராய்டு புற்றுநோயிலும் கொண்டுபோய் விடும்.
சிறு அறிகுறி குறித்துத் தொடங்கும் தேடல் எந்த முடிவும் தெளிவும் இன்றி, இறுதியில் மிகக் கொடுமையான நோயாக இருக்கலாம் என்கிற எண்ணத்தில் கொண்டு போய்விடுகிறது. சிறுசிறு நோய் அறிகுறிகளைக் கணினியிடம் கேட்டுப் பழகி, பிறகு அதுவே ஓர் உளவியல் சிக்கலாக உருவெடுக்கிறது.
இதற்குப்பெயர்தான் ‘சைபர்காண்ட்ரியா’ (Cyber chondria). இன்னும் மனநோயாக அங்கீகரிக்கப்படாமல் இருப்பினும்கூட, இணையத்தில் உறுதிப்படுத்தபடாத, அறிவியல் ஆதாரமற்ற தகவல்களை உண்மையென்று நம்பி, அதற்காகத் தங்களின் மனஅமைதியைக் கெடுத்துக்கொள்வோர் அதிகரித்துவரு கின்றனர். இது மிகவும் ஆபத்தான போக்கு.
பலரும் இணையத் தேடல் மூலம் அதிக மருத்துவ அறிவைப் பெற முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையன்று. அடிப்படையான மருத்துவக் கல்வி இல்லாமல் இணையத்தில் தேடப்படும்போது கிடைக்கும் அளவில்லாத தகவல்கள் ஒருவரைத் திக்குமுக்காட வைத்துவிடும்.
இத்தகைய கருத்துகளைத் தொடர்ந்து படிக்கும்போது, தேடும் நபரின் மனம் பேதலிப்பு நிலைக்கும் குழப்ப நிலைக்கும் ஆளாகும். ஏனெனில், அந்தத் தகவல்களின் நிகழ்தகவு சாத்தியக்கூறு, புள்ளியியல்ரீதியாக அந்தச் சிக்கல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு ஆகியவை பற்றி நமக்குத் தெரிந்திருக்காது.