

பெரும்பாலும் கால்நடைகளைப் பாதிக்கும் வைரஸ் என்று இதுநாள் வரை அறியப்பட்ட ஷமொண்டா வைரஸ் (Shamonda virus), பிரான்ஸில் மனிதரிடம் கண்டறியப்பட்டிருப்பது உலக அளவில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதரிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்ட முதல் ஆவணப்படுத்தப்பட்ட தொற்று இது.
மனிதர்களையும் விலங்குகளையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. மனிதர்கள் வாழும் சுற்றுச்சூழலில் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகளும் இருக்கின்றன. அவற்றில் சில மனிதர்களுக்கு நன்மை செய்கின்றன; சில நோய்களை ஏற்படுத்துகின்றன.
விலங்குகளின் உடலில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்த சில வைரஸ்கள், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மனிதர்களிடமும் தொற்றத் தொடங்குகின்றன. இதைப் பரவும் தொற்று அல்லது விலங்குவழித் தொற்று (Zoonotic spillover) என்கிறோம்.
ஷமொண்டா வைரஸ்
சாதாரணமாக விலங்குகளைத் தாக்கும் வைரஸ்களால், மனிதர்களை தாக்க இயலாது. வைரஸ்கள் குறிப்பிட்ட செல்களின் மேல் மட்டுமே செயல்பட்டு, தனது மரபணுக்களை செல்களுக்குள் செலுத்தி திறம்படப் பெருகி, அந்த உயிரினங்களுக்குள் நோய்களை உருவாக்கும்.
ஆனால், தற்போது இந்த விதி மாறிவிட்டது. ஆடு, மாடு, குதிரைகளில் பாதிப்புகளை ஏற்படுத்திவந்த ஷமொண்டா வைரஸ் ஆட்டைக் கடித்து, மாட்டை கடித்து கடைசியில் மனிதர்களைக் கடிக்க வந்திருக்கிறது. பிரான்ஸில் பதிவாகியிருக்கும் ஷமொண்டா வைரஸ் தொற்று அதற்கு சமகால எடுத்துக்காட்டு.
விலங்குகளில் மட்டுமே அறியப்பட்ட இந்த வைரஸ், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைந்த நபரிடம் கண்டறியப்பட்டது. அந்த நபர் பின்னர் உயிரிழந்தார்.
வைரஸ் அவரது உடல்நலப் பாதிப்பில் பங்களித்திருக்கலாம் எனக் கருதப்பட்டாலும், தொற்றுக்கும் மரணத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவம் ஒரு முக்கியக் கேள்வியை எழுப்பு கிறது. விலங்குகளைப் பாதிக்கும் வைரஸ்கள் ஏன் மனிதர்களையும் பாதிக்கின்றன?
தடையைத் தாண்டும் வைரஸ்கள்
விலங்கின் உடலில் ஒரு வைரஸ் பெருகுவதற்குத் தேவையான உயிரியல் சூழல், மனித உடலிலிருந்து வேறுபடலாம். வைரஸ் ஒரு செல்லுக்குள் நுழைய, அந்தச் செல்லின் மேற்பரப்பிலுள்ள குறிப்பிட்ட ஏற்பி மூலக்கூறுடன் (Receptor) பொருந்த வேண்டும்.