

ஒரு புகழ்பெற்ற திரைப்பட நகைச்சுவைக் காட்சியில் (வரும் ஆனா வராது) வடிவேலுவை வைத்துக்கொண்டு, என்னத்த கண்ணையா குத்துமதிப்பாக கார் ஓட்டிக்கொண்டு போவார். அப்போது சித்திரை வெயில் கண்ணைக் கூசும்படி பளீரென அடிக்கும். ஆனால், என்னத்த கண்ணையாவோ கண்களை இடுக்கியபடி “ஒரே பனி மூட்டமாக இருக்குல்ல!” என்பார்.
வடிவேலு திகைத்துப் போவார். அநேகமாக என்னத்த கண்ணையா கதாபாத்திரத்தின் கண்களில் புரை (காட்டராக்ட்) இருந்திருக்கலாம். அதனால் பார்வை புகைமூட்டமாகி இருக்கிறது என இக்காட்சியைப் பார்க்கும்போது என்னைப் போன்ற மருத்துவர்களுக்குத் தோன்றலாம்.
அதுபோல் சமீபகாலமாக மூளையில் ஏற்படும் பனி மூட்டம் அதிகம் பேசப்படுகிறது. இது தட்பவெப்ப நிலை மாறாட்டத் தால் ஏற்படுவதில்லை. மூளையின் செயல் பாட்டில் ஏற்படும் மந்த நிலை.
இதனை ‘Brain Fog’ என்கின்றனர். அதாவது, மூளையின் பனிமூட்டம். குறிப்பாக கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு அதிகமாகி இருப்ப தாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வேறு சில உடல்ரீதியான காரணங்கள் இருந்தாலும், திறன்பேசிகளின் அதீதப் பயன்பாடு இதற்கு ஒரு முக்கியக் காரணம். இதனால் ஏற்படும் விளைவுகள் கவனம், நினைவுத்திறனை அதிகம் பாதிக்கின்றன. எளிதில் கவனச் சிதறல் ஏற்படுவது இதில் முக்கிய அறிகுறி.
வரிசைக்கட்டும் மறதி: ஓர் அறைக்கு வந்த பிறகு ஏன் வந்தோம் என மறந்துபோவது, ஒருவரை அழைக்கக் கைபேசியை எடுத்துவிட்டு, யாரை அழைக்க வேண்டும் என மறப்பது, பழகிய விஷயங்களின் பெயர் சட்டென்று மறந்துபோவது போன்றவை இதன் அறிகுறிகள். மேலும் பொறுமையாக ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல் போவது, இதன் இன்னொரு முக்கிய அறிகுறி.