

தடுப்பூசி குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, வயது, உடல்நிலை, வாழ்க்கை முறை, தொழில், பயணத் தேவைகள் போன்றவற்றைப் பொறுத்து, பெரியவர்களும் வாழ்க்கையின் பல கட்டங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். இன்றைய உலகளாவிய தொடர்புகள் மிகுந்துள்ள சூழலில், குறிப்பாகப் பயணங்களுடன் நெருக்கமான தொடர்புடைய பெரியவர்களுக்கான தடுப்பூசி குறித்த புரிதல் மிக முக்கியமானது.
‘தடுப்பூசிகள் குழந்தைகளுக்கே’ என்பது தவறான நம்பிக்கை. உண்மையில், பெரியவர் களுக்கும் தடுப்பூசிகள் தேவை. வயது, நீரிழிவு, இதய நோய், நுரையீரல் நோய், கல்லீரல் அல்லது சிறுநீரகக் கோளாறுகள் போன்ற இணை நோய்கள், மருந்துகளால் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் ஆகியவை இதைத் தீர்மானிக்கின்றன.
வாழ்க்கை முறை, தொழில், பயணம் போன்ற தனிப்பட்ட ஆபத்துக் காரணிகளைப் பொறுத்து, ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் தடுப்பூசி தேவைப்படலாம். தடுப்பூசிக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரம்பு இல்லை. எனினும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களில் சில ‘லைவ்’ தடுப்பூசிகளைக் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்.
வயது அதிகரிக்கும்போது, குறிப்பாக 50 வயதுக்குப் பிறகு, உடலின் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்துவிடும். இதனால் தொற்றுகள், அவற்றுடன் தொடர்புடைய சிக்கல்களுக்கு ஆளாகும் அபாயம் அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி தடுப்பூசிகள் பாதுகாப்பை வழங்குகின்றன.
குழந்தைப் பருவத் தில் பெற்ற தடுப்பூசிகளின் பாதுகாப்பு காலப் போக்கில் குறையக்கூடும். எனவே, ‘பூஸ்டர்’ தடுப்பூசிகள் அவசியமாகின்றன. நீரிழிவு, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரக நோயாளர் களுக்குத் தொற்றுகள் ஏற்படும் அபாயமும், அதன் தீவிர விளைவுகளும் அதிகமாகும். குறிப்பாக, சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு, அதிக வெளிப் பாட்டின் காரணமாகக் குறிப்பிட்ட தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.