

நொறுக்குத்தீனிகள் மீதான அலாதிப் பிரியம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; பெரியவர் களுக்கும் எல்லாக் காலத்திலும் உண்டு. சுவை, வண்ணத்தால் ஈர்க்கப்பட்டுக் குழந்தைகள் கொண்டாடவும், உடனிருப்போரால் ஈர்க்கப்பட்டு யுவன்கள் / யுவதிகள் மனம் குதூகலிக்கவும், அழுத்தும் மன உளைச்சலில் பெரியவர்கள் பொழுதுகளைத் தீர்க்கவும் நொறுக்குத்தீனிகளைத் தேடுகின்றனர். அந்தந்த வயதினருக்கான விளம்பரங்களைக் கொஞ்சம் உற்றுப்பார்த்தால், இந்த உளவியல் தொடர்பை வணிகப்படுத்தும் போக்கு நமக்குப் புரியும்.
எப்போது தொடங்கியது?
இந்தப் போக்கு இன்றைக்கானது அல்ல. சங்க இலக்கியமான ‘மதுரைக்காஞ்சி’யில் அப்பமும் மோதகமும் ஏகத்துக்கும் விற்றுத் தீர்ந்ததையும், ‘குறிஞ்சித்தினை’யில் வள்ளியும் முருகனும் தேனையும் தினைமாவையும் சுவைத்துக்கொண்டே காதலித்ததையும், ஒளவைக்கு அதியமான் கொடுத்த நெல்லிக்கனி மூலம் பாலினச் சமத்துவ நட்பை ரசித்தபோதும், கிருஷ்ணனுக்கு குசேலன் கொடுத்த அவல் கதையில் வறுமையை மீறிய நட்பைச் சிலாகித்தபோதும், சுவைமிகு தின்பண்டங்களுக்கான தேடல் நம் சமூகத்தில் எப்போதும் இருந்ததை உணர முடிகிறது.
“கார்த்திகைக்கு நேத்தி அவிச்சோம் சார். சாப்பிடுறீங்களா?” என அடுத்த நாள் காலையில் நண்பர் இலைக்கொழுக்கட்டையை கொடுத்தபோது நான் உண்மையிலேயே பரவசமானேன்; சட்டென்று டிரவுசர் போட்ட சின்ன பையனானேன். “ஏல மக்கா சாயங்காலம் டவுனுக்கு போவோமாலே..” எனக் கத்திக்கொண்டே ஓடலானேன்.
எங்களைப் போன்ற ‘ஜென் எக்ஸ்’ வகையறாக்களுக்கு இலைக்கொழுக்கட்டை மீதான பற்று அப்படியானது. கொழுக்கட்டை பிடிக்காதோர் பூவுலகில், அதுவும் ‘பூமர்'களில் அரிதினும் அரிது. சிறு வயதில் அடுப்புக்குப் போகும் முன்னர், அள்ளித் தின்ற வகைகளில் பிசைந்து வைத்த கொழுக்கட்டை மாவும் ஒன்று என்பது அநேகமாக எல்லாருக்கும் நினைவில் இருக்கும்.