பற்களை நேசிப்போம்!

பற்களை நேசிப்போம்!
Updated on
3 min read

உணரப்படும் வலிகளிலேயே பற்கள் சார்ந்த நோய்களால் உண்டாகும் வலி மிகக் கொடியது! உணர்ந்தவர்களுக்கே அந்த வலியின் தீவிரம் புரியும். பற்களின் ஆரோக்கியத்தில் நாம் முழு அக்கறை கொண்டிருக்கிறோமா என்றால், ‘நிச்சயமாக இல்லை’ என்பதே பதில்.

பற்களுக்கு மருத்துவம் பார்த்த பிறகு ஒரு பல் மருத்துவர் தனது நோயாளியிடம் கண்ணாடியைப் பார்க்கச் சொல்லி இருக்கிறார். நோயாளியோ கண்ணாடியில் தனது பற்களைப் பார்க்காமல், முகத்தைப் பல முறை பார்த்து தலைமுடியைக் கோதிக்கொடுத்துச் சீர்படுத்தி இருக்கிறார். இப்படித்தான் இருக்கிறது, பற்களின் மீது பலர் கொண்டிருக்கும் இன்றைய நேசம்.

நேரம் ஒதுக்குங்கள்: விளம்பரங்களைப் பார்த்து வாங்கும் பற்பசை களை நாம் முறையாகப் பயன்படுத்துவதில்லை என்பதே உண்மை. பற்பசைகளின் அட்டையில் அச்சிடப்பட்டிருக்கும் விஷயங்களைப் படிக்கவும் நாம் நேரம் ஒதுக்குவதில்லை. துரித உணவு வகைகளோடு துரித வாழ்க்கை வாழ்வதைப் போல, நேரமின்மை காரணமாகப் பற்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் துரித கதியில் அவற்றைச் சுத்தம் செய்கிறோம்.

பல் துலக்குவதும் மலம் கழிப்பதைப் போல உணர்ந்து செய்யப்பட வேண்டிய ஒரு செயல்பாடு. நடந்து கொண்டே பல் துலக்குவது, கைப்பேசியில் பேசிக் கொண்டே பல் துலக்குவது, இன்னும் உச்சக்கட்டமாகச் சிலர் இரு சக்கர வாகனத்தில் பயணித்துக்கொண்டே பல் துலக்குவதைக்கூடச் சில நேரம் பார்க்க முடிகிறது. அவர்களுடைய பற்களின் நிலைமையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

நமது முக அழகைப் பல முறை கண்ணாடியில் பார்த்து ரசிக்கும் நாம், பற்கள் ஆரோக்கியமாக இருக்கின்றனவா, அவற்றில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா, சொத்தைக்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா, பல் ஈறு அமைப்பு வலுவாக இருக்கிறதா, பல் பிரச்சினைகளின் காரணமாக வாய் நாற்றம் ஏற்படுகிறதா என்பனவற்றை அறிவதற்கு எனத் தினமும் பற்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். ‘பற்கள் தானே, அவற்றில் என்ன பாதிப்பு வந்துவிடப் போகிறது, நாம்தான் பற்பசைகளைக் கொண்டு பாத்திரம் கழுவுவதைப் போலத் தினமும் அவற்றைத் தேய்க்கிறோமே’ என்கிற உதாசீனம் பற்கள் சார்ந்த நோய்களில் கொண்டுபோய் நிறுத்திவிடும்.

முன்னெச்சரிக்கை அவசியம்: ஞெகிழி பல்துலக்கியைக் கொண்டு பல் துலக்குகிறோம்; அதன் முனையில் நிறையப் பற்பசையைப் பிதுக்கி வரைமுறையில்லாமல் வலமும் இடமும் மேலும் கீழும் எனப் பற்களைத் தேய்க்கிறோம்; நுரைப் பொங்கத் தேய்த்த பிறகு, பற்பசையின் சுவையும் செயற்கை சுகந்தமும் வாயிலிருந்து முழுமையாக வெளியேறும்வரை சிலர் வாய் கொப்பளிப்பதில்லை. லேசான வலி ஏற்பட்டாலும் பற்களைப் பலர் கவனிப்பதில்லை.

பற்களில் லேசான கறுப்புப் புள்ளி தோன்றிய வுடனே, பல் சொத்தை ஏற்பட்டுவிட்டது என்கிற முன்னெச்சரிக்கையுடன் பல் மருத்துவரிடம் செல்லும் விழிப்புணர்வு தேவை. இல்லையென்றால், அந்தப் பல் சொத்தையாகி, அதன் உட்புற அமைப்பு வரை சிதைந்து, மற்ற பற்களுக்கும் கரும்புற்றுப் போலப் பரவி, பற்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும்.

உதாசீனம் வேண்டாம்: ‘நீங்கள் பேசும்போது வாயில் துர்நாற்றம் வருகிறது’ என்று எதிரில் இருப்பவர் சொன்ன பிறகும் மருத்துவரைப் பார்க்க முயலாமல், என்ன பற்பசைக்கு மாறலாம் எனத் தொலைக்காட்சி விளம்பரங்களில் தேடுவது பற்களைப் பாழாக்கிவிடும்.

வாய் துர்நாற்றத்திற்கான காரணம் பற்களா, செரிமான உறுப்புகள் சார்ந்த பிரச்சினையா என்பதை முதலில் கண்டறிவது அவசியம். விலை உயர்ந்த பற்பசைகளைப் பயன்படுத்தினாலும், வேறு மருத்துவக் காரணங்களுக்காக வாய் துர்நாற்றம் ஏற்படுமாயின், அடிப்படையைச் சரிசெய்யாமல் வாய் துர்நாற்றத்தை அகற்றிவிட முடியாது.

என்ன செய்ய வேண்டும்? - இளம் வயதிலேயே பற்களின் மேற்பரப்பிலும், இடுக்குகளிலும் ஒட்டும் தன்மையுள்ள உணவுப் பொருள்களை (Sticky food substances) தவிர்ப்பது அவசியம். எவ்விதமான உணவுப் பொருளைச் சாப்பிட்டாலும், குறிப்பாக சாக்லேட், ஐஸ்கிரீம் போன்ற பற்களில் ஒட்டக்கூடிய ரகங்களை வாய்ப் பகுதிக்குள் அனுமதித்ததும் உடனடியாக வாய்கொப்பளிப்பது முக்கியம். தினமும் இரண்டு முறை பல் துலக்குவது அத்தியாவசியம்.

தினமும் பற்பசை, பல்துலக்கி கலாச்சாரத்திற்கு முழுமையாக மாறிவிடாமல், வாரயிறுதி நாள்களிலாவது இயற்கை முறை தூய்மைக்குச் சிறிது அனுமதி கொடுக்கலாம். வேப்பங் குச்சிக்கா நம்மிடம் பஞ்சம்! கருவேல மரக்குச்சிகளின் சுவையையும் பல் துலக்குவதன் மூலம் உணர்ந்து பார்க்கலாம்!

சித்த மருத்துவம்: சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் திரிபலா சூரணம், தந்த தாவனப் பொடி, தனிக் கடுக்காய் பொடி போன்றவற்றைப் பல் துலக்கப் பயன்படுத்தலாம். ஆலம் விழுது, நாயுருவி வேர், புங்கன் வேர், விளா, நாவல், மருதம் போன்ற மூலிகைத் தாவரங்களையும் பற்குச்சிகளாகப் பயன்படுத்தலாம். ஓமம், சீரகம், கடுக்காய், லவங்கப்பட்டை, நெல்லிக்காய், தான்றிக்காய், மிளகு ஆகியவற்றை முறையாகப் பொடித்து, பற்பொடியாகப் பயன்படுத்தலாம்.

நல்லெண்ணெய், ஓமத்திநீர், ஆலம் பால் ஆகியவற்றைக் கொண்டு வாய்கொப்பளிக்க நல்ல பலன் கிடைக்கும். பற்களோடு சேர்த்து ஈறுகளின் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொள்வது அவசியம். தினமும் ஈறுகளோடு நமது விரல்களை மெதுவாக உறவாட விட, அதன் வலிமை அதிகரிக்கும். ஈறுகளிலிருந்து ரத்தக் கசிவு ஏதேனும் இருக்கிறதா, வீக்கம் இருக்கிறதா என்பதைக் கவனிப்பதும் முக்கியம்.

பற்களுக்கெனத் தினமும் காலையும் இரவும் நேரம் ஒதுக்கி நமது நேசத்தை வெளிப்படுத்தினால், பற்களும் நம் மீதான நேசத்தை ஆயுள் முழுவதும் வெளிப்படுத்தும்; வலிமையாக! அதனால், பற்களை நேசிப்போம் முழு மனதுடன்!

- கட்டுரையாளர்,அரசு சித்த மருத்துவர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in