டிஜிட்டல் போதை 05: தூண்டுதல் எனும் தூண்டில்

டிஜிட்டல் போதை 05: தூண்டுதல் எனும் தூண்டில்
Updated on
2 min read

ஜி

.டி.பி., அதுதான் கேம் டிரான்ஸ்ஃபர் பினாமினா என்றால் என்ன?

ஒரு பதின் வயதுச் சிறுவன் எந்நேரமும் வீடியோ பைக் ரேஸ் விளையாடுகிறான் என வைத்துக்கொள்வோம். அந்த ரேஸில் முந்துவதற்காக, சாலையில் தடையாக இருக்கும் வண்டியை அல்லது சக போட்டியாளரின் பைக்கை உதைத்து அவர்களைத் தாக்கிவிட்டு முன்னேறுவதாக அந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்தக் கற்பனை உலகில் இப்படி உதைத்து உதைத்து விளையாடியே பழக்கப்பட்டிருப்பான் அந்தச் சிறுவன்.

இப்போது நிஜ உலகத்துக்கு வருவோம். உண்மையான சாலையில், அந்தச் சிறுவன் நிஜமாகவே பைக்கில் செல்கிறான். பைக்ரேஸ் கேம் விளையாடி விளையாடி, அதுவே அவனுடைய மூளையில் தங்கியிருக்கும். எனவே நிஜ உலக சாலையையும் பைக்ரேஸுக்கான களமாக நினைத்து அவன் வண்டியை ஓட்டுவான். கற்பனை பைக்ரேஸ் போட்டியில், மற்றவர்களை முந்திச் செல்வதற்காக இதர ரேஸர்களை உதைத்துப் பழகிய அந்தச் சிறுவன், நிஜ உலக சாலையிலும் மற்றவர்களை முந்திச் செல்வதற்காக வீடியோ கேமில் விளையாடியதுபோல இதர வாகன ஓட்டிகளை உதைத்துவிட்டுச் செல்லும் நிலை ஏற்படலாம். அப்படி உதைப்பதால் அவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்புகள் உண்டு. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் இது. இந்த நிலையைத்தான் ஜி.டி.பி. என்கிறோம்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூண்டுதலின் (Stimulus) காரணமாகத்தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும். சிறிது நேரத்திலேயே அவர்கள் நிஜ உலகுக்கு வந்துவிடுவார்கள். முழுவதுமாக கற்பனை உலகுக்கு மாறிவிட மாட்டார்கள்.

இந்த மனநிலையை உலகுக்கு அறிமுகம் செய்தவர் மருத்துவர் மார்க் கிரிபித். அவருடைய விளக்கத்தைப் புரிந்துக்கொள்ள ரஷ்ய மருத்துவர் பாவ்லாவின் நாயைச் சந்திக்க வேண்டும்.

உலகின் மிகப் பழமையான பரிசோதனை, ஆனால் இன்றளவும் மூளையைப் புரிந்துகொள்ள உதவும் பரிசோதனை… ரஷ்யாவின் மனநல மருத்துவர் பாவ்லாவ் மேற்கொண்ட ‘நாய் பரிசோதனை’. இதைப் பற்றிப் பலர் கேள்விப்பட்டிருக்கலாம்.

பாவ்லாவ், நாய் ஒன்றை வளர்த்துவந்தார். அந்த நாய்க்குக் குறிப்பிட்ட நேரத்தில் உணவு கொடுத்துவிடுவார். சரியான நேரத்துக்கு உணவு கொடுப்பதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். அந்த நேரத்தில் அவர் மணி அடிப்பார். மணி அடித்தவுடன் நாய் உணவருந்த வந்துவிடும். இது தொடர் நிகழ்வாக இருந்ததால், எப்போதெல்லாம் மணி அடிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் சரியாக நாய்க்கு வாயில் எச்சில் ஊற ஆரம்பித்தது. இதைச் சில நாட்கள் கழித்து அவர் கவனித்தார்.

இதை மேலும் ஆய்வு செய்த பாவ்லாவ், மிக முக்கியமான கோட்பாட்டை உலகுக்கு அளித்தார். அது: ஒரு நிகழ்வு (Event) என்பது ஒரு தூண்டுதலினால் (Stimulus) நடக்கும். அந்த நிகழ்வால் ஒரு செயல் நடக்கும் (Action). இங்கு நாயின் வாயில் எச்சில் ஊறுவது நிகழ்வு என்றால், அந்த எச்சில் ஊறத் தூண்டுதல், மணி ஓசை!

அதிகமாக வீடியோ கேம் விளையாடும்போது, சில வினைகளுக்கு நாம் எதிர்வினை புரிவோம். வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் பைக் ரேஸில், குறுக்கே வரும் வண்டியை உதைத்துவிட்டுச் சென்றுவிடுவோம். மேடான பகுதியில் வண்டியைச் செலுத்திப் பறப்போம். குறுக்கே வரும் வண்டி, எதிரில் வரும் மேடான இடம் போன்றவை எல்லாம் தூண்டுதல்கள். இவை நம் மூளையில் பதிய ஆரம்பித்துவிடும்.

வீடியோ கேம் அதிகமாக விளையாடுபவர்கள், நிஜ உலகில் பைக்கில் செல்லும்போது இதே தூண்டுதல்களை எதிர்கொண்டால், அவர்கள் மூளை சற்றும் சிந்திக்காமல் அதற்கு என்ன வினை புரிய வேண்டும் என்று பழகி இருக்கிறதோ அதைச் செய்துவிடும். ஒரு நொடியில் நிஜ உலகிலிருந்து மூளை வீடியோ கேம் உலகுக்கு மாறிவிடும்.

பிறகு, நாம் கீழே விழுந்து அடிபட்டவுடன் நிஜ உலகுக்கு வந்துவிடுவோம். மரணம்கூட நேரிடலாம். ஆகவே, வீடியோ கேமை அதிகம் விளையாடாதீர்கள். ஏனென்றால் வீடியோ கேம்போல் வாழ்க்கை, நமக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை வழங்கிக்கொண்டே இருப்பதில்லை. இருப்பது ஒரே ஒரு உயிர். அதுதான் இதில் நிஜம்!

கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in