

“கோ
பப்படுவதற்கு நாம் வெட்கப்படத் தேவையில்லை. நாம் நமது இலக்கை நோக்கிச் செல்வதற்கான ஆற்றலைத் தரும் நல்ல விஷயமே கோபம். கோபத்தைப் பல நேரங்களில் நாம் தவறாகப் பயன்படுத்துகிறோம் . அதற்காகத்தான் நாம் வெட்கப்படவேண்டும்” – இதைச் சொன்னவர் யார்?
அச்சத்தைப் போன்றே கோபமும் தேவையற்ற உணர்வு எனப் பலரும் நினைக்கின்றனர். கோபப்படாமலே இருப்பதுதான் நல்ல வழி என நாம் நினைக்கிறோம். உண்மையிலேயே கோபம் என்பது தேவையே இல்லாத ஒன்றுதானா?
கோபப்படுவது இயற்கையான உணர்வே. எதற்காக, எப்போது, எப்படி, யாரிடம் நமது கோபத்தை வெளிப்படுத்துகிறோம் என்பதில்தான் உள்ளது சூட்சுமம். கோபம் என்பது கொதிக்கும் நீராவியைப் போன்றது. சரியாக நெறிப்படுத்தினால் புகைவண்டியையே இழுக்கலாம். சரியாகக் கையாளப்படாவிட்டால் உருளைக் கிழங்கை வேகவைக்கக்கூடப் பயன்படாது.
முதலில் குறிப்பிட்டிருந்த பொன்மொழியைச் சொன்னவர் யாரெனக் கேட்டிருந்தேன் அல்லவா? அவரது பெயருடன் கோபம் என்கிற வார்த்தையை இணைத்து யோசித்திருக்கக்கூட மாட்டோம். ஆனால், அவர்தான் கோபம் தேவையான ஒன்று எனக் கூறியுள்ளார். அவர் வேறு யாருமல்ல. 1893-ம் ஆண்டு மே மாதம் பீட்டர் மார்ட்ஸ்பெர்க் என்ற தென்னாப்பிரிக்க நகர ரயில் நிலையத்தில் இரவில் கடுங்குளிரில் இறக்கிவிடப்பட்டு அவமதிக்கப்பட்ட மகாத்மா காந்தியேதான்.
அவர் கோபப்படாமல் இல்லை . ஆனால், அந்தக் கோபத்தைச் சரியான பாதையில் திசைதிருப்பியபோது சூரிய ஒளியைக் குவித்து நெருப்பு மூட்டும் லென்ஸ்போல மாறினார்.
அம்பேத்கர் , பெரியார் போன்ற தலைவர்களும் அப்படியே. சமூக அநீதிகளைக் கண்டு சீற்றம் அடைந்தபோது கோபப்படாமல் ஒதுங்கிச் செல்லவில்லை. தங்கள் கோபத்தால் வரும் ஆற்றலைத் தங்களுடைய இலக்கு நோக்கிச் செலுத்தினார்கள். ‘சிறுமை கண்டு பொங்குவாய்’ என பாரதி பாடியதும் இந்த அறச்சீற்றத்தைத்தான். உணர்ச்சிவசப்படாமல் இருப்பது என்பது வேறு. சுரணையில்லாமல் இருப்பது என்பது வேறு.
ஆங்கிலத்திலே ‘சப்ளிமேஷன்’ எனச் சொல்வார்கள், தமிழிலே பதங்கமாதல். கற்பூரம் போன்ற ஒரு திடப்பொருள் திரவ வடிவத்தை அடையாமல் நேரடியாக ஆவியாவதைக் குறிக்கும் இயற்பியல் சொல் அது. தங்களுடைய ஏமாற்றம், கோபம், அச்சம் , இயலாமை போன்ற நிலைகளைக்கூடச் சரியான முறையில் வழிமுறைப்படுத்தி உன்னதமாக்கும் ரசவாதத்தைக் குறிக்க உளவியலில் இச்சொல் பயன்படுகிறது.
நம்மைக் கோபப்டுத்தக்கூடிய சூழலை, சிறுமையை நமது செயலால் மாற்றியமைப்பதே கோபத்தைப் பதங்கமாக்குகிறது. வார்த்தைகளில் வெடிப்பதாலோ, பொருட்களை உடைப்பதாலோ, அருகில் இருப்பவர்களைத் தாக்குவதாலோ அல்ல.
ஷார்ஜாவில் 1998-ம் ஆண்டு நடந்த ஒரு கிரிக்கெட் போட்டி. இறுதிப் போட்டிக்கு முந்தையப் போட்டி ஒன்றில் ஜிம்பாப்வேயைச் சேர்ந்த ஹென்றி ஒலங்கா என்ற பந்துவீச்சாளர் சச்சின் டெண்டுல்கரைச் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆக்கிவிட்டார். உடனே மகிழ்ச்சியில் டெண்டுல்கரை அவமானப்படுத்துவது போன்ற உடல்மொழியை வெளிப்படுத்தினார். பதிலுக்கு சச்சின் அவரை முறைக்கவோ கத்தவோ செய்யவில்லை.
அடுத்த போட்டி, இறுதிப் போட்டி. அப்போது ருத்ரதாண்டவம் ஆடி ஒலங்காவின் பந்துகளைச் சிதற அடித்துச் சதமடித்துத் துவம்சம் செய்தார் சச்சின். அப்போதும் அவருடைய கோபத்தின் வெளிப்பாடு முகத்திலோ உடல்மொழியிலோ தென்படவில்லை. இதுதான் கோபத்தை நமது உயர்வுக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் முறை.
புதிய ஆத்திச்சூடியில் ‘ரௌத்திரம் பழகு’ என்று அழகாகக் கூறியிருக்கிறார் பாரதி. ‘ரௌத்திரம் கொள்’ என்றோ ‘ரெளத்திரம் கொள்ளாதே’ என்றோ சொல்லாமல், ‘ரெளத்திரம் பழகு’ என்கிறார். நம் வீட்டு விலங்குகள் ஒரு காலத்தில் காட்டு உயிரினங்களாக இருந்தவைதான். அவற்றை முறையாகப் பழக்கியதால்தான், அவை நம் கட்டுப்பாட்டுக்கு வந்தன.
கோபமும் நம்முடைய மனக் காட்டில் இருக்கும் ஒரு கட்டற்ற விலங்கே. அதைப் பழக்கி நமக்கு அடிமையாக்குவதே ‘ஆறுவது சினம்’ என்பதற்கும் ‘ரௌத்திரம் பழகு’ என்பதற்கும் இடையே உள்ள ‘சமநிலை’ என்னும் நலம்தரும் நான்கெழுத்து.
(அடுத்த வாரம்: பழையன கழிதலும் புதியன புகுதலும்)
கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com