

துரித உணவு (fast food) நம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துவிட்டது. கிராமம், நகரம் என்கிற பேதம் இல்லாமல் பொதுவான உணவுக் கலாச்சாரமாக மாறிவருகிறது. துரித உணவு வகைகளின் சுவையில், அதன் பின்விளைவுகளைப் பொதுவாக யாரும் கருத்தில் கொள்வதில்லை. தொடர்ந்து துரித உணவு வகைகளையே சாப்பிடுபவர்களுக்குப் பல்வேறு நோய்கள் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இது குறித்து சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் நிக்கிதா அபிராமியிடம் கேட்டோம்.
“இளைஞர்கள்தாம் துரித உணவை விரும்பிச் சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். தொடர்ந்து துரித உணவு வகைகளைச் சாப்பிடும்போது, சில நோய்களும் வந்து சேரும். சத்தான உணவைச் சாப்பிடாததால் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, வைட்டமின் போன்றவை கிடைக்காமல் போய்விடும். உடல் எடை அதிகரிப்பதாலும் உடல் செயல்பாடு அதிகம் இல்லாததாலும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.”
குழந்தைகளுக்கு எந்த மாதிரி பாதிப்புகள் ஏற்படும்?
“இரைப்பை அழற்சி, ஊட்டச்சத்துக் குறைபாடு, உடல் பருமன் போன்றவை ஏற்படலாம். படிப்பு, விளையாட்டு போன்றவற்றில் ஆர்வம் குறையும். தாழ்வு மனப்பான்மை ஏற்படும். இதயம் தொடர்பான நோய்களும் வரலாம். குழந்தைகளோ இளைஞர்களோ வாரத்துக்கு ஓரிரு முறை துரித உணவைச் சாப்பிடுவதில் தவறு இல்லை. துரித உணவு வகைகளில் கொழுப்புச்சத்து அதிகமாகவும் ஊட்டச்சத்துக் குறைவாகவும் காணப்படுகின்றன. அதனால்தான் இவற்றை அடிக்கடி சாப்பிடக் கூடாது என்கிறோம். எதிர்காலத் தலைமுறை நோயின்றி இருக்க வேண்டுமென்றால், இன்றே குழந்தைகளின் உணவு முறையை மாற்ற வேண்டியது அவசியம்.”
- ஸ்ருதி பாலசுப்ரமணியன், பயிற்சி இதழாளர்