

வா
ருங்கள் மனநல மருத்துவர் நிக்கலஸ் கரடராசிடம், புதிதாக வந்துள்ள மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனைச் சந்திக்கலாம். அந்தச் சிறுவனின் பெயர் டான். அவன் தன்னுடைய பதின் வயதுகளின் அடையாளமான துறுதுறுப்பைச் சுத்தமாக இழந்திருந்தான். பல நாள் தூக்கமில்லாத சிவந்த கண்கள். உலர்ந்த தோல், மெலிந்த தேகம்.
டான், மருத்துவர் அறையை வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறான். அவன் குழம்பிப் போய் இருப்பதை முகம் அப்பட்டமாகக் காட்டியது. டான், பள்ளிக் கல்வியின் இறுதியாண்டில் இருப்பவன். என்றாலும் பள்ளிக்குச் செல்வதை சுத்தமாக நிறுத்திவிட்டான். அவனுக்கு அப்பா இல்லை. அம்மா வேலைக்குச் செல்கிறார். பையன் எது கேட்டாலும் வாங்கிக் கொடுப்பார். அப்படி அவர் டானின் மகிழ்ச்சிக்காக வாங்கிக் கொடுத்த வீடியோ கேம்தான், இப்போது அவரின் தலைவலிக்குக் காரணமாகிவிட்டது.
கேமில் மூழ்கி… தன்னிலை மறந்து
முதலில் பொழுதுபோக்காக ஆரம்பித்த வீடியோ கேம், ஒரு கட்டத்தில் எல்லை மீற ஆரம்பித்தது. டான் பள்ளிக்குச் செல்வதில்லை, நேரத்துக்கு உண்பதில்லை. விளையாடும் ஆர்வத்தில் சிறுநீர் கழிக்கக் கழிவறைக்குச் செல்வதையே நிறுத்திவிட்டான், கணினிக்குப் பக்கத்திலேயே காலி பிளாஸ்டிக் பாட்டில்களில் சிறுநீர் கழித்து வைத்து விடுவான்.
அவன் அம்மா மாலை வீட்டுக்கு வந்து பார்த்தால், காலை செய்து வைத்த உணவு மேஜையில் அப்படியே இருக்கும். வீடியோ கேம் சத்தம் இல்லம் முழுவதையும் ஆக்கிரமித்திருக்கும். குளிக்காமல் அழுக்கேறிய உடலுடன் டான் மும்முரமாக வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருப்பான். அறை துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும்.
ஒரு கட்டதில் டான் மெலியத் தொடங்கினான். இரவில் தூங்காமல் விளையாடிக் கொண்டிருப்பான். தூங்கும்போது திடீரென விழித்துக்கொண்டு அலறுவான். ஒரு நாள் வலிப்பு வந்தபடி மயங்கி விழுந்துவிட்டான். மருத்துவர்கள் பரிசோதித்ததில் உடல் ஊட்டசத்துக் குறைபாட்டால் மோசமாக பாதிக்கபட்டிருப்பது தெரியவந்தது. அப்போதுதான் அவன், மருத்துவர் நிக்கலஸ் கரட்ராஸை பார்க்கப் பரிந்துரைக்கப்பட்டான்.
‘ஜி.டி.பி.’யால் ஏற்பட்ட பாதிப்பு
கரடராஸ் ஒரு குறிப்பிட்ட பழக்கத்துக்கு அடிமையானவர்களை விடுவிப்பதில் தேர்ந்த நிபுணர். மதுப் பழக்கம், போதைப் பழக்கம் போன்ற மிகவும் ஆபத்தான பழக்கங்களைக் கொண்ட நோயாளிகளை அவர் ஏற்கெனவே பார்த்திருக்கிறார். ஆனால் டானின் பிரச்சினை அவருக்குச் சற்றே புதிது. டான் மிதமிஞ்சி வீடியோ கேம் விளையாடுகிறான். அவன் வீடியோ கேமுக்கு அடிமையாகிவிட்டான். அவனிடம் பேசியதிலும் சில பரிசோதனை முடிவுகளிலும் அது தெளிவாகிவிட்டது.
டான் ஒரு நாளைக்கு 17 மணி நேரம்கூட வீடியோ கேம் விளைடுவான். நிக்கலஸ், சமீபத்தில் பார்த்த வேறொரு சிறுவனோ ஒரு நாளைக்கு 7 மணி நேரம்தான் வீடியோ கேம் விளையாடுவான். அவனை சீர்செய்து பழைய நிலைக்குக் கொண்டுவரவே அவருக்குப் பெரும்பாடாகிவிட்டது. டானின் நிலைமை கொஞ்சம் மோசம்தான். டானின் விஷயத்தைச் சிக்கலாக்கியது, அவனுக்கு வந்திருக்கும் பிரச்சினை. அது, அளவுக்கு அதிகமாக வீடியோ கேம் விளையாடியதால் ஏற்பட்ட ஜி.டி.பி. அதாவது, ‘கேம் டிரான்ஸ்ஃபர் பினாமினா’ (Game Transfer Phenomena) வந்திருந்தது.
இதை மனநோய் என்று கூற முடியாது. காரணம், டிஜிட்டல் பாதிப்புகள் இன்னும் ஆய்வு நிலையில் இருக்கின்றன. மனநோய்க்கான சர்வதேசக் கழகம், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை ஆராய்ந்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் பல ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டன. அது மனநோயாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அதுவரை டிஜிட்டல் பாதிப்புகளை நாம் மனநோய் என்று கூறிவிடமுடியாது. அதனால் அவற்றை ‘விளைவுகள்’ என்றே வகைப்படுத்துவோம்.
இந்த ஜி.டி.பி. பற்றி தெரிந்துகொள்ள ரஷ்யாவைச் சேர்ந்த பாவ்லாவின் நாய்க்குட்டியைச் சந்திக்க வேண்டும்!
(அடுத்த வாரம்: தூண்டுதல் எனும் தூண்டில்)
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com