நலம், நலமறிய ஆவல் 5: கழுத்து வலிக்கு மன அழுத்தம் காரணமா?

நலம், நலமறிய ஆவல் 5: கழுத்து வலிக்கு மன அழுத்தம் காரணமா?
Updated on
2 min read

எனக்கு நீண்ட நாட்களாகக் கழுத்து, பின் கழுத்து, இடது தோள்பட்டை, இடது கை விரல்கள் எல்லாமே கடுமையாக வலிக்கின்றன. என்னால் எந்தப் பொருளையும் தூக்க முடியவில்லை. எந்த ஒரு வேலையையும் கவனித்துச் செய்ய முடியவில்லை. அவ்வளவு வலி. அத்துடன் இடது கண் இமைக்கு மேல் நரம்பு துடிக்கிறது. இது எதனால்? மன அழுத்தம் காரணமாக இருக்குமா?

- சரண்யா, மின்னஞ்சல்

உங்கள் பிரச்சினைகளைக் கவனித்தால். ‘செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்’ (Cervical Spondylitis) என்று அழைக்கப்படும் கழுத்து வலி இருக்கலாம் எனத் தெரிகிறது. கால் நூற்றாண்டுக்கு முன்புவரை இந்த நோய் வயதானவர்களுக்கு மட்டுமே வருகிற நோயாக இருந்தது. இப்போதோ இது வளரிளம் பருவத்தினருக்கும்கூட வந்துவிடுகிறது.

கழுத்து வலிக்கு முக்கியக் காரணம், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்துபோவதுதான். அப்போது கழுத்தை அவற்றால் தாங்கிப் பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் கழுத்து வலி. அதிக சுமையைத் தலையில் தாங்குவது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்துக்கொண்டிருப்பது போன்றவை இந்த மாதிரியான கழுத்து வலிக்கு அடித்தளம் அமைக்கும்.

கழுத்து எலும்புகளில் தேய்வு, இடைச்சவ்வு விலகுவது அல்லது அது வீங்கி அருகிலுள்ள நரம்பை அழுத்துவது போன்ற காரணங்களால் கழுத்து வலி ஏற்படலாம். பொதுவாக 40 வயதில் இந்த சவ்வு தேயத் தொடங்கும். ஆனால், இப்போதோ இளம் வயதிலேயே இது தேயத் தொடங்கிவிடுகிறது. காரணம், பலரும் உட்கார்ந்துகொண்டே வேலை செய்வது இப்போது அதிமாகிவிட்டதுதான். கணினி முன்னால் அதிக நேரம் தொடர்ந்து வேலை செய்வதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

இதுபோல் தொடர்ந்து பல மணி நேரத்துக்குத் தொலைக்காட்சி பார்ப்பது, படுத்துக்கொண்டே படிப்பது, படுத்துக்கொண்டே தொலைக்காட்சி பார்ப்பது, கழுத்தைக் கோணலாக வைத்துக்கொண்டு உறங்குவது. தலையணைகளைத் தலைக்கு அடுக்கிவைத்து உறங்குவது, வேலைக்குச் செல்லப் பல மணிநேரம் பயணிப்பது, பயணங்களில் உட்கார்ந்துகொண்டே உறங்குவது போன்றவையும் கழுத்து வலிக்குப் பாதை அமைப்பவைதான்.

இப்போதெல்லாம் பலரும் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் செல்போனில் பேசுகிறார்கள். அப்போது கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்துக்கொண்டு பேசுகிறார்கள். இந்தத் தவறான பழக்கம் நாளடைவில் கழுத்து வலியை ஏற்படுத்துகிறது. குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணிப்பதும் கழுத்து வலியைச் சீக்கிரத்தில் கொண்டுவந்துவிடும்.

கழுத்தை எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்து நோயைப் புரிந்துகொள்ளலாம். ஆரம்ப நிலையில் உள்ள கழுத்து வலியைச் சாதாரண வலி மாத்திரைகள், களிம்புகளால் குணப்படுத்திவிடலாம். நோய் நீடிக்கிறது என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி கழுத்தில் பட்டை அணிந்துகொள்வது, கழுத்துக்கு ‘டிராக்ஷன்’ போட்டுக்கொள்வது, பிசியோதெரபி போன்றவை பலன் தரும். நோயின் தன்மையைப் பொறுத்து சிலருக்கு அறுவைசிகிச்சையும் தேவைப்படலாம். நீங்கள் எலும்பு நலச் சிறப்பு மருத்துவரையோ, நரம்பு நலச் சிறப்பு மருத்துவரையோ நேரில் பார்த்து ஆலோசிக்க வேண்டும்.

உங்களுக்கு மன அழுத்தம் இருப்பதாகத் தெரிந்தால் ஏற்கெனவே இருக்கும் எந்த ஒரு வலியும் அதிகமாகவே உணரப்படும். புதிதாகவும் வலி தோன்றலாம். எனவே, கழுத்து வலிக்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டு, தேவைப்பட்டால் உளவியல் சிகிச்சையும் எடுத்துக்கொள்ளலாம். இது குணப்படுத்தக் கூடியதே.

‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in