

கோடைக் காலம் தொடங்கிவிட்டது. கோடை வெப்பமும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. பொதுவாக, வெப்பத்தின் பாதிப்பை நன்றாக எதிர்கொள்ளும் திறனைக் கொண்டதாக நமது சருமம் உள்ளது. வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும்போது, அது விரைந்து எதிர்வினையாற்றி, வியர்வையை வெளியேற்றி உடலைக் குளிரவைத்துவிடும்.
சருமமே நமது உடலின் மிகப்பெரிய உறுப்பு. இந்தச் சருமத்துக்கு இணையாக, அதனடியில் ‘திசு படலம்’ (Interstitial Tissues) உள்ளது. இது பல கோடித் திசுக்களை உள்ளடக்கியது. இந்தத் திசுக்களுக்கு இடையே ‘இடைநிலை திரவம்’ (Interstitial Fluid) உள்ளது. நமது சருமம், திசுப் படலத்தையும், அதற்கிடையில் இருக்கும் இடைநிலை திரவத்தையும் பயன்படுத்தி வெளிப்புற வெப்பம் நம்மைத் தாக்காமல் காக்கிறது.
கோடை வெயிலில் ஏற்படும் பாதிப்புகள்:
l வெப்பத் தசைப்பிடிப்பு (Muscle Cramp): உடலைக் குளிர்விப்ப தற்காகச் சருமம் வியர்வையை வெளியேற்றுகிறது. வியர்வை அதிகமாக வெளியேறும்போது, சோடியம் உப்பும் அதிகமாக வெளியேறி தசைப்பிடிப்பை ஏற்படுத்தும். கை, கால், தசைகளே இந்தத் தாக்குதலுக்கு அதிகம் உள்ளாகும். அந்த நேரத்தில், வயிற்றின் முன்தசைகளில் ஏற்படும் தசைப்பிடிப்பு கடுமையான வலியை ஏற்படுத்தும்.
உப்புக் கரைசல் நீரை அருந்துவதன்மூலம் இந்த வலி பெருமளவில் குறையும். வெப்பத் தசைப்பிடிப்பு ஏற்படாமல் தடுக்க நிழல், நீர், மெல்லிய பருத்தி ஆடை, காற்றோட்டமான சூழல் உதவும்.
l வெப்பத் தளர்ச்சி (Heat Exhaustion): வெப்பத் தளர்ச்சி, வெப்பப் பாதிப்பின் கடுமையான வடிவம். இது ஒரு மருத்துவ அவசர நிலை. வெப்பத் தளர்ச்சியால், சருமத்தில் கூச்ச உணர்வு, குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல், எரிச்சல், தலைவலி, தாகம், பலவீனம், அதிக வியர்வை, குறைவான சிறுநீர் கழித்தல், மலம் கழிக்கும் உணர்வு, மயக்கம் வந்து கீழே விழுதல் போன்றவை ஏற்படும். ரத்த அழுத்தம் குறைந்து மயக்கமும் ஏற்படலாம்.
பாதிப்புக்கு ஆளானவரை உடனடியாக நிழல் பகுதிக்கு அழைத்துச் சென்று, உப்பு நீர் கரைசலைக் குடிக்க வைத்து, காற்றோட்டச் சூழலில் படுக்க வைத்தால் அவர் முற்றிலும் நலமாவார்.
l வெப்ப மயக்கம் (Sun Stroke): வெப்பத் தாக்கம் அதிகரித்து உடல் வெப்பம் 106 டிகிரியைத் தாண்டும்பட்சத்தில் வெப்ப மயக்கம் ஏற்படும். சருமம் சூடாக இருக்கும். தலைவலி, தலைச்சுற்றல், சோர்வு, குழப்பம், சுவாசிக்கும் வேகம் அதிகரிப்பு, எங்கு இருக்கிறோம் என்று புரியாத நிலை போன்றவை ஏற்படும். பாதிக்கப்பட்டவர் நிற்கமுடியாமல் மயங்கி விழுந்து, சுயநினைவையும் இழக்க நேரிடும். தசைகள் வலு இழக்கும்; இதயம் வேகமாகத் துடிக்கும்; ரத்த அழுத்தக் குறைவு ஏற்படும். இது ஓர் ஆபத்தான சூழல்.
பாதிக்கப்பட்ட நபரை வெயிலிலிருந்து நிழலுக்குக் கொண்டுசென்று, உடைகளைத் தளர்த்தி காற்றோட்ட வசதிசெய்து, குளிர்ந்த நீரை உடலில் ஊற்றி சருமத்தைக் குளிரவைக்க வேண்டும். ஈர உடலைத் தேய்த்து, அழுத்தி, மசாஜ் செய்வதன் மூலம் உடலின் சூட்டைத் தவிர்க்கலாம்.
கோடைக்காலச் சரும நோய்கள்
l வெப்ப வியர்க்குரு (Heat rase): சருமத்தில் சிவப்பு நிறம் தோன்றி, அரிப்பு உண்டாகி முள் குத்துவதுபோல் இருப்பதே வியர்க்குருவின் அறிகுறி. இது வரகரிசி அளவில் சருமத்தில் தடித்து ஊறலை உண்டாக்கும். நைலான், பாலியெஸ்டர் உடைகள், வியர்வை போன்றவற்றால் வியர்க்குரு ஏற்படலாம்.
மெல்லிய பருத்தி ஆடை, காற்றோட்டம், நிழல், அடிக்கடி நீர் பருகுதல் உள்ளிட்டவை வியர்க்குரு வராமல் தடுக்க உதவும். கோடையில் மூன்று வேளை குளியல் சருமப் பாதுகாப்புக்கு நல்லது.
l சீழ் கொப்பளம் (Boul): சருமத்தின் வியர்வையில் தூசி படியும் இடத்தில் கிருமிகள் வளரக்கூடும். இதனால் ஏற்படும் ஊறலைச் சொரிவதால், சருமத்தில் கீறல் விழுந்து அதன் வழியாகக் கிருமி நுழைந்து, சரும ரோமத்தின் வேர்ப் பகுதியில் சிறுசிறு சீழ் கொப்பளங்கள் ஏற்படலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இந்தக் கொப்பளம் தோலின் பல பகுதிகளில் ஏற்படும்.
இதைக் குணப்படுத்த ஆன்டிபயாடிக் மருந்து தேவைப்படும். முறையான சரும பராமரிப்பும், அதன் சுத்தமுமே நோயைத் தடுக்கும்.
l படர்தாமரை: நீண்ட நாள் வியர்வையின் ஈரத்தில், பூஞ்சை, காளான் வளர்வதால், படர்தாமரையும் சரும நோய்களும் ஏற்படலாம். கால்விரல் இடுக்கு, அக்குள், தொப்புள், தொடை பின்புறம், முதுகு, மார்பு, உடல் இடுக்குகளில் வெப்பக் காலத்தில் படர்தாமரை ஏற்படும் சாத்தியம் அதிகம். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகளுக்கு. மூன்று வேளை குளியலும், சரும பராமரிப்பும் அவசியம்.
l தோல் அக்கி: சருமத்தில் நெருப்பு எரிவதுபோல் எரிச்சல் தோன்றிப் பின் அங்கே சிவந்து, நீர்க் கொப்பளங்கள் தோன்றும். இது வலி மிகுந்ததாக இருக்கும். நரம்பு சம்பந்தமான பகுதியில் இதன் தாக்கம் இருக்கும். அக்கி அம்மை வைரஸால் ஏற்படும் இதனைத் தடுக்கத் தடுப்பூசி (Vaccine) கிடைக்கிறது.
இந்த வைரஸ் குழந்தைகளைச் சின்னம்மை நோயாகத் தாக்கி, உடல் முழுவதும் கொப்பளம், அம்மைபோட்டு இரண்டு வாரத்தில் சரியாகிவிடும்.
l உதடு அக்கி (எர்பிஸ் சிம்ப்ளெக்ஸ்): இது ஒரு வைரஸ் தொற்றால் ஏற்படும் சரும நோய். மேல், கீழ் உதடுகளில் ஏற்படும். இந்தத் தொற்று ஒரு முறை வந்தால் வைரஸ் கிருமி அந்த உடலில் ஆயுள் முழுக்க உயிர் வாழும். இதனால், ஒவ்வொரு கோடைக் காலத்திலும் உதடுகளில் வலிமிகுந்த கொப்பளத்துடன் கூடிய எரிச்சல் ஏற்படும். இது பல்லி சிறுநீரால் வருவதாகப் பாமர மக்கள் நம்புகிறார்கள், ஆனால் அது தவறு.
இதற்கு வைரஸ் எதிர்ப்பு மருந்தும், அக்கி மீது தடவக் களிம்பும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. வெயிலைத் தவிர்ப்பது மட்டுமே உதட்டில் அக்கி வராமல் தடுக்கும் வழி.
கட்டுரையாளர், முதியோர் மருத்துவர்; dr.e.subbarayan53@gmail.com