தொற்றா நோய்களை வெல்வது எப்படி?

தொற்றா நோய்களை வெல்வது எப்படி?
Updated on
2 min read

இன்றைய நவீன உலகில், மக்களின் வாழ்க்கைமுறை அதிவேகமாக மாறுபட்டு வருகிறது. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், உடல் உழைப்பின்மை, புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கவழக்கங்களும் இன்று பரவலாகப் பின்பற்றப்படுகின்றன.

இத்தகைய வாழ்க்கை முறை மாற்றங்களால், எண்ணற்ற பிரச்சினைகளை இன்றைய தலைமுறையினர் எதிர்கொள்ள நேரிடுகிறது. இந்தப் பிரச்சினைகளை அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் போராடி வெற்றிகொள்ள வேண்டும். இல்லையென்றால், அவற்றின் பாதிப்புகள் மிகவும் தீவிரமானதாக மாறிவிடும்.

உணவுப் பழக்கம்: இன்றைய நாகரிக உலகில் உணவுப் பழக்கவழக்கங்களில் தீவிர மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. என்ன உண்கிறோம்? எவ்வளவு உண்கிறோம்? எதற்காக உண்கி றோம் என்கிற தெளிவும் விழிப்புணர்வும் இன்றி, நோயை வரவழைக்கும் துரித உணவு வகைகளைப் பலரும் பின்பற்றுகின்றனர்.

இதன் காரணமாக, உணவே நஞ்சாகி உயிரோடு விளையாடுகிறது. உணவைவிட மருந்து மாத்திரைகளை உண்பது இன்று அதிகமாகிவிட்டது. செயற்கை உரங்களைப் பயன்படுத்திய பின்னர், விளைச்சல் பெருகியது போலவே வியாதிகளும் பெருகிக்கொண்டே வருகின்றன.

ரசாயனக் கலப்பும், சாயமேற்றிகளின் கலப்பும் துரித உணவு வகைகளின் அங்கமாக இருக்கின்றன. இவை நமது உடல் நலனுக்கு மிகுந்த கெடுதல் விளைவிக்கும் தன்மை கொண்டவை. இருப்பினும், தீங்கு விளைவிக்கும் துரித உணவு வகைகளே இன்றைய தலைமுறையினரின் விருப்பமாக இருக்கிறது.

இவற்றுடன் உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறையால் அதிகரிக்கும் உடல் எடையும், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற காரணிகளும் சேர்வதால், தொற்றா நோய்கள் எனும் Non Communicable Disease (NCD) நோய்களின் பாதிப்பு இன்று அதிகமாக உள்ளது.

எவையெல்லாம் தொற்றா நோய்கள்?

தொற்றா நோய்கள்: தொற்றா நோய் என்பது எவ்விதத் தொற்றும் இல்லாது உடலில் ஏற்படும் நோய். நுண்கிருமிகள் (Micro Organisam), வைரஸ், பாக்டீரியா உள்ளிட்ட நுண்கிருமிகளின் துணையின்றி மனிதனைத் தாக்கும் இந்தத் தொற்றாத நோய்களின் பாதிப்பு இன்று அதிகமாக இருக்கிறது. 2030இல் தொற்றா நோய்களின் காரணமாகச் சுமார் 2.5 கோடி பேர் இறக்க நேரிடும் என உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித் துள்ளது. ஆனால், இது குறித்த

விழிப்புணர்வு இல்லாமல் நாம் இருக்கிறோம். எனவே, அது குறித்து மேலும் அறிந்துகொள்வோம்:

தவிர்ப்பது எப்படி?

# புகைபிடித்தலையும் குடிப் பழக்கத்தையும் முற்றிலும் கைவிட்டாக வேண்டும்.
# தினமும் உடற்பயிற்சி முக்கியம். உடல் உழைப்பையும் அதிகரிக்க வேண்டும்.
# உணவில் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும்.
# கொழுப்புள்ள எண்ணெய் பொருள்களைத் தவிர்க்க வேண்டும்.
# போதிய அளவு தண்ணீர் அருந்துவது அவசியம்.
# சரியான தூக்கம் மிகவும் முக்கியம்.
# ரசாயனக் கலப்புள்ள உணவையும் பதப்படுத்தப்பட்ட உணவையும் தவிர்ப்பது நல்லது.
# உடலில் மந்தத்தை ஏற்படுத்தும் மைதா உணவு வகைகளையும், மேற்கத்திய உணவு வகைகளான பர்கர், பீட்ஸா, பப்ஸ், சிக்கன் 65, பன்னீர் 65, காளான் 65 போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
# ஊட்டச்சத்துள்ள ஆரோக்கிய உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்.
# வெள்ளை சர்க்கரைக்குப் பதில் நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம், பனங்கற்கண்டு ஆகியவற்றைச் சேர்க்கலாம்.
# 80% ரசாயனக் கலப்புள்ள பாக்கெட் பாலைத் தவிர்த்து நாட்டு மாட்டுப் பாலைப் பயன்படுத்தலாம்.
# சாதத்தை வடித்துச் சாப்பிடுவது நல்லது.
# பழுப்பு நிறத்தில் உள்ள கல் உப்பு (அ) இந்துப்பைச் சேர்த்துக் கொள்ளலாம்.
# உடலில் சூரிய ஒளி படும்படி தினமும் குறைந்தது 10 நிமிடம் இருக்க வேண்டும்.
# வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் நல்லது.
# குளிர் பதனப்பெட்டியில் வைத்த உணவுப் பொருள்களைத் தவிர்க்க வேண்டும்.
# குளிர்பானங்களையும் ஐஸ்கிரீம்களையும் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
# நிதானமாக, நன்கு மென்று சாப்பிட வேண்டும் (நொறுங்க தின்றால் நோயில்லை).
# ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது.
# பதப்படுத்தப்படாத எண்ணெய்யைப் பயன்படுத்தலாம்.
# வாரம் ஒருமுறை, ஒருவேளையாவது உண்ணா நோன்பிருக்கலாம்.

மேலே கூறிய வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது, தொற்றா நோய் ஏற்படும் சாத்தியத்தைப் பெருமளவு குறைக்கும். வரும்முன் காப்பதுதானே நோயின் பாதிப்பைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி!

- கட்டுரையாளர், சித்த மருத்துவர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in