

2022 டிசம்பரில் 16 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் கடுமையான ரத்த சோகை, எடையிழப்பு, வயதுக்கு ஏற்ற உயரமின்மை போன்ற பாதிப்புகளுடன் ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வந்தார். அவர் மூச்சு வாங்குதல், அசிடிட்டி, ரத்த சோகை ஆகியவற்றால் அவதிப்பட்டார். அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில், இரண்டு சிறுநீரகங்களும் சிறியதாக இருந்தது தெரியவந்தது; அவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதையும் அது உறுதிப்படுத்தியது.
ரெயின்போ மருத்துவமனையின் மருத்துவர் குழு அவருக்கு ஹீமோ டையாலிசிஸ் செய்யத் தொடங்கினர். அடுத்த 4, 5 நாட்களில் குழந்தையின் உடல்நிலை சீரானது. இருப்பினும், ஹீமோ டையாலிசிஸ் ஒரு தற்காலிகத் தீர்வு என்பதால், அந்தக் குழந்தைக்குப் பராமரிப்பு டயாலிசிஸ் தொடர்ந்தது. பராமரிப்பு டயாலிசிஸ் என்பது தொடர்ச்சியான செலவு மட்டுமல்ல, வாரத்திற்கு மூன்று முறை மருத்துவமனைக்கும் வர வேண்டும். ஒவ்வொரு அமர்வும் நான்கு மணி நேரம் நீடிக்கும்.
பராமரிப்பு டயாலிசிஸ் அந்தக் குழந்தையின் உளவியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. மருத்துவர்கள் அவருடைய பெற்றோருக்கு நிலைமையை விளக்கினர்; சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையே அவர்களின் குழந்தைக்கு ஒரு சிறந்த வழி என்றும் பரிந்துரைத்தனர். பெற்றோர்களும் அதற்குச் சம்மதித்தனர்.
அந்தச் சிறுமியின் பெற்றோர் சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்தனர். ஆனால், அந்தக் குழந்தையின் ரத்தமோ ஓ பாசிட்டிவ்; அவருடைய தாயாரின் ரத்தம் பி பாசிட்டிவ். ரத்த க்ரூப் இணக்கமற்றதாக இருப்பதால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, குழந்தைகளுக்கு இது அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், பெரும்பாலான மருத்துவமனைகள் ரிஸ்க் எடுக்காது. ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் தகுந்த வசதிகள் இருந்ததால், அந்தச் சவாலை அது துணிவாக எதிர்கொண்டது.
குழந்தையின் ரத்தமும், தாயின் ரத்தமும் வெவ்வேறு க்ரூப் என்பதால், பொருந்தாமை ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, சில மருந்துகள் கொடுக்கப்பட்டன; மாற்று அறுவை சிகிச்சைக்கு 3 முதல் 4 நாட்களுக்கு முன்பு சிறப்பு டயாலிசிஸ் செய்யப்பட்டது. தாயின் சிறுநீரகம் லேப்ராஸ்கோப்பி மூலம் அகற்றப்பட்டு குழந்தைக்குப் பொருத்தப்பட்டது. மூன்று மணி நேரத்தில் முழு அறுவை சிகிச்சையும் முடிந்தது.
குழந்தை சிறுநீரகவியல் மருத்துவர்களான என்.பிரஹலாத், பலராமன், குழந்தைகள் அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரகவியல் மருத்துவர் ஜி. மூர்த்தி, பொது அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரகவியல் மருத்துவர் அருண்குமார், சிறுநீரகவியல் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் முத்து வீரமணி ஆகியோர் அடங்கிய குழு இந்தச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அனுபவம் வாய்ந்த இந்த மருத்துவக் குழுவும், அந்த மருத்துவமனையின் நவீன வசதிகளும், இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்படுவதை உறுதிசெய்தன.
மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அந்தக் குழந்தை தற்போது நோயெதிர்ப்புத் தடுப்பு சிகிச்சையில் உள்ளார். சிகிச்சைக்குப் பின் குழந்தையின் உயரம் 2 செமீ கூடியுள்ளது; உடல் எடை 3 கிலோ அதிகரித்துள்ளது. முக்கியமாக, இயல்பான சிறுநீரகச் செயல்பாட்டை அந்தச் சிறுமி கொண்டுள்ளார். இந்த அறுவை சிகிச்சை, அந்தக் குழந்தைக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளித்துள்ளது. இனி ரத்த க்ரூப் இணக்கமின்மை, குழந்தைகளுக்கான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரு தடையாக இருக்காது என்பதையும் இந்த வெற்றிகரமான அறுவைசிகிச்சை உறுதி செய்துள்ளது.