பல் சொத்தை கற்பிதங்களும் உண்மை நிலையும்

பல் சொத்தை கற்பிதங்களும் உண்மை நிலையும்
Updated on
3 min read

பல்லின் மேற்பரப்பில் (Enamel) ஏற்படும் சேதமே பற்சிதைவு. நம் வாயில் உள்ள நுண்ணுயிரிகள் பற்களின் எனாமலைத் தாக்கும் அமிலங்களை உருவாக்கும்போது பற்சிதைவு ஏற்படுகிறது.

பற்சிதைவு பல் சொத்தைக்கு வழிவகுக்கும். பற்சிதைவுக்குச் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அது வலி, தொற்று, ஏன் பல் இழப்பைக்கூட ஏற்படுத்தலாம்.

காரணங்கள்: நமது வாய் நுண்ணுயிரிகளால் நிறைந் துள்ளது. சில நுண்ணுயிரிகள் நமக்கு உதவியாக இருக்கும். ஆனால், சில தீங்கு விளைவிக்கும்; பற்சிதைவுக்கும் காரணமாகவும் இருக்கும். இந்த நுண்ணுயிரிகள் உணவுடன் இணைந்து பிளேக் (Plaque) எனப்படும் மென்மையான, ஒட்டும் படலத்தை உருவாக்குகின்றன. இதை உடனே அகற்றாவிட்டால், பற்சிதைவு ஏற்படும் சாத்தியம் அதிகமாகும்.

அறிகுறிகள்: பொதுவாக, ஆரம்ப காலப் பற்சிதைவுகளில் அறிகுறிகள் இருக்காது. பற்சிதைவு மோசமாகும் போது தென்படும் அறிகுறிகள்:

# பல் வலி

# இனிப்பு, சூடான, குளிரானவற்றுக்குப் பல் கூச்சம்.

# பல்லின் மேற்பரப்பில் வெள்ளை அல்லது பழுப்பு நிறக் கறைகள், குழிகள்.

# இதன் மூலம் ஏற்படும் தொற்று, சீழ்க் கட்டி உருவாக வழிவகுக்கும். இதன் விளைவாக வலி, முக வீக்கம், காய்ச்சல் ஏற்படக்கூடும்.

பிறருக்குப் பரவுமா? - பல் துவாரங்கள் (குழிகள்) பொதுவாகப் பற்களைச் சேதப்படுத்தும் சர்க்கரையின் காரண மாக ஏற்படுகிறது. இருப்பினும், பல் துவாரங்கள் நபருக்கு நபர் பரவும். மோசமான வாய் சுகாதாரம் உள்ள மற்றொரு நபருடன் நெருங்கிய தொடர்பு மூலமும் துவாரங்கள் பரவக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வைரஸ் ஒருவரிடமிருந்து அடுத்தவருக்குப் பரவுவதுபோல், பல் குழிகளை உண்டாக்கும் பாக்டீரியாக் களும் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகின்றன. இந்தப் பாக்டீரிய வகைகளில் மிகவும் பொதுவான ஒன்று ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் (Streptococcus mutans).

இதனால், குறிப்பாகக் கைக்குழந்தைகளும் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான குழந்தை களுக்கு அவர்களின் பெற்றோர்கள் மூலமாகவோ அல்லது அவர்களைக் கவனித்துக்கொள்பவர்கள் மூலமாகவோ இந்தப் பாக்டீரியா பரவுகிறது.

பற்சிதைவை நிறுத்த முடியுமா? - பற்சிதைவு ஆரம்பக் கட்டத்தில் கண்டறியப் பட்டால், அதை எளிதில் தடுத்து நிறுத்திவிட முடியும். இந்தக் கட்டத்தில், பற்களில் உள்ள தாதுக்களை மீட்டெடுக்கவும், சிதைவை நிறுத்தவும் நல்ல வாய் சுகாதாரம் அவசியம். வழக்கமான பல் துலக்குதல், நூல் இழை கசடு அகற்றுதல், ஃபுளூரைடு (fluoride) உள்ளிட்டவை பற்களின் மேற்பரப்பை வலுப்படுத்த உதவும்.

இருப்பினும், ஒரு சில நபர்களுக்கு மேம்பட்ட வாய் சுகாதாரம் மூலம் மட்டும் பற்சிதைவைத் தடுக்க முடியாது. இந்தச் சந்தர்ப்பங்களில், சிகிச்சை அவசியம். அந்தச் சிகிச்சையின் அளவு பற்சிதைவு எவ்வளவு ஆழமாகச் சென்றுள்ளது என்பதைப் பொறுத்து அமையும்.

யார் எளிதில் பாதிக்கப்படலாம்?

# மருந்துகள், சில நோய்கள் அல்லது புற்றுநோய் சிகிச்சைகள் காரணமாகப் போதுமான உமிழ்நீர் இல்லாதவர்கள்.

# போதுமான ஃபுளூரைடு (fluoride) இல்லாதவர்கள்.

# புட்டிகள் மூலம் பால் அருந்தும் இளம் குழந்தைகள்.

# பல வயதானவர்களுக்கு ஈறுகள் வலுக் குறைந்து, பற்களில் அதிகத் தேய்மானம் இருக்கும். இது அவர்களுக்குப் பற்சிதைவு அபாயத்தை ஏற்படுத்தும்.

# பற்சிதைவை ஏற்படுத்தும் உணவு வகைகள்

# மாவுச்சத்துள்ள சிற்றுண்டி உணவு வகைகள்

# அமில உணவு வகை, பானங்கள்

# சர்க்கரை அதிகம் உள்ள உணவு வகைகள், பானங்கள்

# ஒட்டும் தன்மையுள்ள உணவு வகைகள்

பாதுகாக்கும் உணவுக் காரணிகள்

# குடிநீரில் ஃபுளூரைடு (fluoride) சேர்ப்பது குழந்தைகளின் பல் சொத்தையை 20% முதல் 40% வரை குறைக்கிறது.

# பசுவின் பாலில் (பாலாடைக்கட்டி) உள்ள கால்சியம், பாஸ்பரஸ், போன்றவை பல் சொத்தையைத் தடுக்கும்.

# முழுத் தானிய உணவு வகைகளுக்கு அதிக மெல்லுதல் தேவைப்படுகிறது. இது உமிழ்நீர் ஓட்டத்தைத் தூண்டும்; சொத்தையிலிருந்தும் பாதுகாக்கும்.

# வேர்க்கடலை, கடினப் பாலாடைக்கட்டிகள் ஆகியவை உமிழ்நீர் ஓட்டத்தைத் தூண்டி, பல் சொத்தையிலிருந்து பாதுகாக்கிறது.

# பிளாக் டீ பற்களில் ஃபுளூரைடு செறிவை அதிகரிக்கிறது. இது சர்க்கரை நிறைந்த உணவுடன் தொடர்புடைய சொத்தையை உருவாகும் ஆபத்தைக் குறைக்கிறது.

# தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குப் பல் சொத்தை குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கண்டறியும் முறைகள்: பொதுவாக, பல் மருத்துவர்கள் உங்கள் பற்களைப் பார்த்து, அவற்றைப் பல் கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்வதன் மூலம் பற்சிதைவு, துவாரங்களைக் கண்டறிவார்கள். உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருக்கின்றனவா என்றும் பல் மருத்துவர் கேட்பார். சில நேரம் பல் எக்ஸ்ரே தேவைப்படலாம்.

தடுக்கும் வழிமுறைகள்: அடிக்கடி சிற்றுண்டி சாப்பிடுவதையும், பானங்கள் அருந்துவதையும் தவிர்ப்பது நல்லது. ஃபுளூரைடு கொண்ட பற்பசையைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் துலக்க வேண்டும். பற்களுக்கு இடையில் சுத்தம் செய்ய, பல் நூலிழையைப் பயன்படுத்தவும். பல் மருத்துவரைத் தவறாமல் பார்ப்பது பற்சிதைவைத் தடுக்கவும், அவற்றை முன்கூட்டியே கண்டறியவும் உதவும்.

சிகிச்சைகள்:

பற்சிதைவுக்கும் துவாரங் களுக்கும் பல சிகிச்சைகள் உள்ளன. நீங்கள் எந்தச் சிகிச்சையைப் பெறுவீர்கள் என்பது பிரச்சினை எவ்வளவு மோசமானது என்பதைப் பொறுத்தது:

ஃபுளூரைடு சிகிச்சைகள்:

பற்சிதைவின் ஆரம்ப நிலையில் எனாமல் தன்னைத் தானே சரிசெய்து கொள்வதற்கு ஃபுளூரைடு சிகிச்சை உதவும்.

பல் அடைப்பு:

உங்களது பற்களில் குழி இருந்தால், உங்கள் பல் மருத்துவர் சிதைந்த பல் திசுக்களை அகற்றி, நிரப்பும் பொருளைக் கொண்டு பல்லை மீட்டெடுப்பார்.

வேர் சிகிச்சை:

பல்லின் சேதமும், நோய் த்தொற்றும் பற்கூழ் வரை பரவினால் (பல்லின் உள்ளே) வேர் சிகிச்சை தேவைப்படலாம். பற்கூழை அகற்றி, பல், வேரின் உள் பகுதிவரை பல் மருத்துவர் சுத்தம் செய்வார். அடுத்ததாகத் தற்காலிக நிரப்புதல் பொருளுடன் பல் நிரப்பப்படும். இறுதியாக பற்சிகரம் (dental crown) வைக்கப்படும்.

பல் எடுத்தல்:

மிகவும் கடுமையான சந்தர்ப்பங்களில், பற்கூழ் சேதத்தைச் சரிசெய்ய முடியாத போது, பல்லை எடுக்க நேரிடும். அதன் பிறகு செயற்கைப் பற்களைப் பொருத்திக் கொள்ளலாம்.

- டாக்டர் ஹெச்.தமிழ்ச்செல்வன் | கட்டுரையாளர், வாய்வழி நோயியல் நிபுணர்; தொடர்புக்கு: hthamizh@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in