Published : 05 Aug 2017 11:14 AM
Last Updated : 05 Aug 2017 11:14 AM

டிஜிட்டல் கொலை காலம்

“எ

ன்னால் திங்கள்கிழமை பள்ளிக்கு வர முடியாது. நான் புளூவேல் (Blue Whale) இணைய விளையாட்டு விளையாடுகிறேன்” – இதுதான் தன் பள்ளி நண்பனிடம் மன்பிரீத் சிங் கடைசியாகக் கூறிய வார்த்தைகள். அவன் சொன்ன விளையாட்டை விளையாடிய கடந்த திங்கள்கிழமை, ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலைச் செய்துகொண்டான் மன்பிரீத்.

பதினாங்கு வயதே ஆன மன்பிரீத் சிங்கின் தற்கொலைக்குக் காரணம் இணையத்தில் விளையாடப்படும் புளூவேல் எனும் பயங்கர விளையாட்டு. இதுவரை உலகம் முழுவதும் சுமார் 130 சிறுவர்கள், இளைஞர்களின் தற்கொலைக்கு காரணமான விளையாட்டு இது.

எளிதாகத் தொடங்கும்

புளூவேல் என்பது இணையத்தில் குழுவாக ஆடப்படும் ஒரு விளையாட்டு (பலரை காவு வாங்கும் இதை விளையாட்டு என்று சொல்வது முட்டாள்தனம்). முதலில் மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு ஓர் அழைப்பு வரும். மின்னஞ்சலில் ‘புளூவேல் சேலஞ்சை எதிர்க்கொள்ளத் தயாரா ?’ என உங்களை அழைக்கும். ‘ஆம்’ என்று நீங்கள் பதில் அனுப்பினால், விளையாட்டின் விதிமுறைகளை உங்களுக்கு அனுப்புவார்கள். முதலில் பார்ப்பதற்கு மிக எளிதான விதிமுறையாகவே தோன்றும்.

நீங்கள் 50 சாவால்களை எதிர்கொண்டு செய்து காட்ட வேண்டும். சவாலை நீங்கள் செய்து முடிப்பதை வீடியோவாகவோ அல்லது படமாகவோ எடுத்து அந்தக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். இறுதியான சவாலை நீங்கள் எதிர்க்கொண்டு செய்துவிட்டால் நீங்கள் வெற்றியாளார். அதிபயங்கரமான விஷயம் என்னவென்றால், அந்த இறுதி சவால் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

விடுபட முடியாத வலை

ஆரம்பக் கட்டத்தில் சவால்கள் மிக எளிதாகவே இருக்கும். ஒரு நீலத் திமிங்கிலத்தை வரைய வேண்டும், தனியாக இரவு பன்னிரெண்டு மணிக்கு சுடுகாட்டுக்குச் செல்ல வேண்டும், இனிப்புகளை அள்ளி வாய் நிறைய சாப்பிட வேண்டும். இவற்றில் ஒவ்வொன்றையும் நீங்கள் செய்து முடிக்க முடிக்க, உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். மெல்ல படிநிலைகள் ஏறஏற சவால்கள் கடினமாகிக்கொண்டே போகும்.

இரவில் தனியாகப் பேய்ப் படம் பார்ப்பது, கையில் பிளேடால் வரைவது, கண்ணை மூடிக்கொண்டு மிக வேகமாக சைக்கிளில் பயணிப்பது என்று நீளும். இறுதியாக நீங்கள் வெற்றி பெறுவதற்கான கடைசி சவாலுக்காக காத்திருக்கும்போது, இறுதி சவால் உங்களை தற்கொலை செய்துக்கொள்ளச் சொல்லும்.

நீங்கள் தற்கொலை செய்துக்கொள்ள முடியாது என மறுத்தால், ஆட்டத்தில் இருந்து விலக முடியாது என்பதுதான் இதில் இருக்கும் பேராபத்து. நீங்கள் மிக ஆபத்தான நிலையில் சிக்கி கொண்டிருக்கிறீர்கள் என்பதே, அப்போதுதான் உங்களுக்குப் புரிய ஆரம்பிக்கும். ஆரம்ப நாளில் இருந்து நடந்த மின்னஞ்சல் போக்குவரத்தில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் கணினியிலோ, செல்போனிலோ ‘ட்ரோஜன் வைரஸ்’ அனுப்பப்பட்டு, உங்கள் அந்தரங்கத் தகவல்கள் குழுவின் கையில் சிக்கி இருக்கும்.

இனி நீங்கள் சவாலை ஏற்கவில்லை என்றால், உங்கள் அந்தரங்கத் தகவல்கள் கசியவிடப்படும் என மிரட்டுவார்கள். பெரும்பாலான சிறுவர்கள், இளம் வயதினரை அந்தக் கும்பல் குறிவைக்கிறது. சிறுவர்கள் விபரீதம் தெரியாமல் பயந்துபோய் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ரஷ்யாவை மையமாகக்கொண்டு ஆரம்பித்த இந்த விளையாட்டு, இணையம் மூலம் உலகம் முழுவதுமாக சுமார் 130 சிறுவர்களை தற்கொலைக்குத் தூண்டியுள்ளது.

மீண்டும் பீதி

சில மாதங்களுக்கு முன் உலகம் முழுவதும் இந்த விளையாட்டு பெரும் சர்ச்சையானது. ரஷ்ய அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டு விசாரணை மேற்கொண்டது. உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இந்த விளையாட்டை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதுவரை இந்தியாவில் இந்த விளையாட்டின் தாக்கம் இல்லை என்று பெற்றோர்கள் நிம்மதியாக இருந்தனர். ரஷ்யா அரசின் தீவிர விசாரணை காரணமாக இந்த விளையாட்டின் முக்கிய சூத்ரதாரியான இலியா சிட்ரோவ் (26) எனும் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

உலகின் பல பகுதிகளில் வசிக்கும் பெற்றோரும் ஆசிரியர்களும் நிம்மதி பெரு மூச்சுவிட்டனர். இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த சிறுவன் மன்பிரீத் சிங்கின் தற்கொலை, அவன் நண்பர்களின் வாக்குமூலம் போன்றவை மூலம் புளூவேல் விளையாட்டு தொடர்பான பீதி மீண்டும் உலகம் முழுக்கவும் உருவாக்கியுள்ளது. புளூவேல் என்றால் நீல நிறத் திமிங்கலம் என்று அர்த்தம். அமெரிக்காவில் உள்ள ஒரு கடற்கரையில் திமிங்கலங்கள் திடீரென தண்ணீரை விட்டு வெளியே தாமாக வந்து இறந்தன.

அதைப் பார்க்க திமிங்கிலங்கள் தாமாகத் தற்கொலைச் செய்துகொண்டதைப் போலிருந்தது. இதை அடிப்படையாக வைத்துத் தான் இந்த விபரீத விளையாட்டுக்கு புளூவேல் சேலஞ்ச் எனப் பெயரிட்டுள்ளனர்.

பணம்தான் உயிர்

இந்தியாவில் இணையத் தொடர்பு மிக வேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க அளவுக்கு சிறுவர்களுக்கும் இணையத் தொடர்பு எளிதாகக் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக நகரில் வாழும் சிறுவர்களுக்கு. இணையத்தில் தங்கச் சுரங்கம்போல அறிவுத் தகவல்கள் கொட்டி கிடந்தாலும், சிறுவர்களும் இளைஞர்களும் விட்டில் பூச்சிகளாய் இதுபோன்ற விளையாட்டுகளில் சிக்கிக்கொண்டு தங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிகொள்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன் உலகை அதிர வைத்த ‘ரான்சம்வேர் வைரஸ்’ இதே மாதிரியை கொண்டது. ஒரு சிறுவன்தான் அதை உருவாக்கியவன். உங்களுக்குக் கவர்ச்சிகரமான மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி, அதை நீங்கள் ‘க்ளிக்’ செய்தால், உங்கள் கணினியில் மின்னஞ்சல் மறைந்து ட்ரோஜன் வைரஸ் இறங்கி கணினியை மூடிவிடும். உங்கள் கணினியை இயக்க பாஸ்வோர்டு கொடுக்க வேண்டும். பாஸ்வோர்டைக் கொடுக்க பணம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் உங்கள் அந்தரங்கத் தகவல்கள் அழிக்கப்படும் அல்லது இணையத்தில் பகிரப்படும் என மிரட்டுவார்கள். அதாவது பணம்தான் இங்கே உயிர்.

அதிகரிக்கும் மரணம்

இணையத்தில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய குழுக்கள் அதிகமாக உள்ளன. தற்கொலையைத் தூண்டும் குழுக்கள், தங்கள் உறுப்பினர்களை தற்கொலைக்குத் தூண்டி, அவர்கள் தற்கொலை செய்துகொள்வதை நேரலையில் ஒளிபரப்பி ரசிப்பார்கள். ஒரு ஆய்வின்படி உலகம் முழுவதும் தற்கொலையைத் தூண்டும் இணையதளங்களின் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதும், அதனால் சுமார் 51 சதவீதம் சிறுவர்களின் மரணம் அதிகமாகி இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன் ஒரு இளம் பெண் உயரமான கட்டிடத்தின் முனைக்கு ஏறிக் கீழே இறங்க முடியாமல் சிக்கிக்கொண்டாள். அவளை மீட்ட தீயணைப்புத் துறையினர் முதலில் பயந்துவிட்டனர். இதுவும் ஒரு வேளை புளூவேல் சேலஞ்சாக இருக்குமோ என்று? நல்ல வேளையாக இது புளூவேலின் வேலை இல்லை. மாறாக, மற்றொரு இணையக் குழுவின் வேலை. அதாவது ‘கூரை மேல் ஏறும் குழு’ என்று ஒரு குழு உள்ளது. இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள், உயரமான கூரைகள் மேல் நின்று செல்ஃபி எடுத்து பகிர்ந்துக்கொள்வார்கள். அப்படியாக ஒரு செல்ஃபி எடுக்கப் போய், இந்த இளம்பெண் சிக்கிகொண்டிருக்கிறாள். இதைக் கேட்ட போலீசார் வாயடைத்துப் போய்விட்டனர்.

என்ன செய்ய வேண்டும்?

இணையத்தால் இன்று நமக்குப் பல நன்மைகள் இருந்தாலும். மெய் உலகைப் பிரதிபலிக்கும் மெய்நிகர் உலகான இணையத்துக்கும் கறுப்பு பக்கங்கள் உள்ளன. துடிப்பு,வேகம், கோபம், ஆர்வம், சோகம், தனிமை, ஏக்கம், மனக் குழப்பம், ஏக்கம் நிறைந்த இளம் ரத்தங்களை விபரீதங்களை நோக்கி இணையமும் அழைத்துச் சென்றுவிடுகிறது. பெற்றோரின் கவனமும். ஆசிரியர்களின் பொறுப்பும், நண்பர்களின் அக்கறையும்தான் இளைய சமுதாயத்தை காக்கும். இந்த கறுப்புத் தளங்களை ஒழிக்க அரசு முறையான சட்டத்தை இயற்ற வேண்டும். பள்ளியில் மாணவர்களுக்கு வரும் மன அழுத்தம், மன உளைச்சலைப் போக்க மன நல ஆலோசகர்களின் உதவி கொடுக்கப்பட வேண்டும்.

இணைய விளையாட்டுகளைப் பொறுத்தவரை நடந்து முடிந்த பின் வருந்தி எந்தப் பயனும் இல்லை, வரும் முன் காப்பது மட்டுமே இதற்கு சரியான தீர்வு.

உலை வைக்கும் விளையாட்டுகள்!

சில ஆண்டுகளுக்கு ஏ.எல்.எஸ். எனும் நரம்பியல் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’ பிரபலமானது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் விளையாட்டை ஆரம்பித்து, அடுத்ததாக மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸை இந்த சவாலுக்கு அழைத்தார். அப்படியே இந்த ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’ உலகம் முழுவதும் பரவியது. ஒரு பக்கெட் முழுவதும் ஐஸ் கட்டிகளைக் கொண்ட தண்ணிரை ஒரே வீச்சில் தலையில் கொட்டிக்கொள்ள வேண்டும் என்பதே இந்த சவால். உங்கள் உடல் ஒரு நொடி உறைந்துப் போகும். அடுத்தாக மூன்று பேரை இந்த சவாலுக்கு நீங்கள் அழைக்க வேண்டும்.

ஆனால், இதுபோன்ற விபரீதமான சவால்கள் இணையம் முழுவதும் விளையாட்டாக உலாவுவதுதான் ஆபத்தில் முடிகிறது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

05CHVAN_Choking_challenge.jpg

சோகிங் சேலஞ்ச் (மூச்சு திணறல் சவால்): இந்த சாவலில் ஒருவர் கைகளை கொண்டு கழுத்தை நெரித்து மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனைத் தடுக்க வேண்டும். அப்படி மயக்கம் வரும்வரை தடுப்பதை வீடியோவாக எடுத்து ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.

இதையே ஒருவர் இன்னொருவரின் கழுத்தை நெரிப்பது இன்னொரு சவால்! யாரை முதலில் மயங்கி விழ வைக்கிறாரோ, அவரே வெற்றிபெற்றவர். அமெரிக்காவில் பிரபலமான இந்த விளையாட்டு இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர்களை பலி வாங்கியுள்ளது.

சால்ட் ஐஸ் சேலஞ்ச் (உப்பு ஐஸ்கட்டி சவால்):

05CHVAN_Salt-and-Ice-challenge.jpg

உங்கள் உடலின் மீது உப்பை கொட்டிக்கொண்டு அதன் மீது ஐஸ் கட்டியை வைக்க வேண்டும். உப்பின் மேல் இருக்கும் ஐஸ் மேலும் மைனஸ் டிகிரி வெப்பநிலையை உருவாக்கும்.

இதனால் தோலில் காயங்கள் ஏற்படும். இதையே ஒரு சவாலாகச் செய்து பதிவேற்ற வேண்டும்.

கையை கீறிக்கொள்ளும் சேலஞ்ச் 

இதுதான் மிகவும் ஆபத்தான விளையாட்டு, காரணம் சம்பந்தப்பட்டவர் கையைக் கீறிகொள்ளுவது இதில் புகழப்படும். அதனால் குறிப்பிட்ட குழுவினரின் மத்தியில் அந்தஸ்து கிடைக்கிறது. இது ஆபத்தான மேலும் பல சவால்களுக்கு சம்பந்தப்பட்டவர்களை உந்தித் தள்ளுகிறது. 

நெருப்பு சவால்

உடலில் தீ வைத்துக்கொண்டு, மேலும் (எரியும் தன்மையுள்ள) வாசனை திரவியத்தை அதன் மீது தெளித்து, அந்த நெருப்புடன் இருப்பதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.

05CHVAN_fire-challenge.jpg

இவை மட்டுமல்ல, இதுபோல் ஆணுறையில் நீரயை நிரப்பி தலையில் போடும் காண்டம் சேலஞ்ச், காரின் மேல் படுத்தபடி இருக்க வேகமாக காரை ஓட்டும் ‘கார் சர்பிங் சேலஞ்ச்’, நண்பர்கள் ஒருவரின் உடல் முழுவதும் அட்டை பெட்டி ஒட்டும் டேப்பால் ஒட்டிவிட, அதில் இருந்து தப்பிக்கும் ‘டேப் டக்டு சேலஞ்ச்’ - இதுபோன்ற இன்னும் பல ஆபத்தான விளையாட்டுகள் இருக்கின்றன.

இதுபோன்ற மிகவும் ஆபத்தான விளையாட்டுகளை குழந்தைகள் விளையாடுகிறார்களா என கண்காணித்துத் தடுக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. 


 

யார் ஈடுபடுகிறார்கள்?

இணையத்தில் விளையாடப்படும் இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுகள் குறித்து உளவியல் மருத்துவரான டாக்டர் கீர்த்தி பாய் கூறுகையில் “தங்கள் உணர்வுகளை முறையாகக் கட்டுபடுத்த முடியாமல், தவிக்கும் சிறுவர்களுக்கு பெற்றோர்கள் உறுதுணை இல்லாமல் போகும்போது, இது போன்ற ஆபத்தான விளையாட்டுகளில் தங்கள் கவனத்தைச் செலுத்துகிறார்கள்,” என்றார்.

05CHVAN_Dr_Keerthi_Pai.jpeg கீர்த்தி பாய்

நண்பர்களின் உந்துதல், மன அழுத்தம், மன உளைச்சல், தனிமை போன்றவற்றால் தவிக்கும் இளைஞர்கள், இந்த மாதிரியான சவால்களில் தங்களையே காயப்படுத்திக் கொள்கிறார்கள் என்கிறார் உளவியல் நிபுணரான வந்தனா.

தங்கள் குழந்தைகள மீதும், அவர்களின் மனநலன் மீதும் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.

கேட்டதை வாங்கி கொடுப்பது எப்படித் தவறோ, அதுபோலவே குழந்தைகள் செய்ய நினைக்கும் செயல்களில், அது விளையாட்டாக இருந்தாலும், அதில் உள்ள பிரச்சினைகள் பற்றி பெற்றோர் எடுத்துரைக்க வேண்டியது அவசியம். 

 

கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: Write2vinod11@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x