

அக்னிக் குஞ்சுகள்
(இந்திய விஞ்ஞானிகளின் வரலாறு)
- மூன்று தொகுதிகள்,
l வ.மு.முரளி,
அருட்செல்வர் நா. மகாலிங்கம்
மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு,
தொடர்புக்கு: 91 4259 237787
பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிந்தனையாளர்கள் முதல் சமகாலத்தில் உலகளாவிய தாக்கத்தைச் செலுத்திய நவீன இந்திய அறிவியல் சிற்பிகள் வரை 120 அறிவியலாளர்களின் வாழ்க்கைத் தொகுப்பே இந்நூல். மூன்று தொகுதிகள் கொண்ட இந்நூலை வ.மு.முரளி எழுதியுள்ளார். இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் அறிவியல் உலகுக்கு இந்திய விஞ்ஞானிகள் அளித்துள்ள பங்களிப்பைக் கூறி மலைப்பில் ஆழ்த்துகின்றன. ஆசிரியர்களும் மாணவர்களும் படிக்க வேண்டிய தொகுப்பு.
அறிவியல் அடுத்தது என்ன?
l ஆயிஷா இரா.நடராசன்
பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு: 91 87780 73949
நவீன அறிவியல் தொழில் நுட்பத்தின் வேகம் அபாரமானது. இதை நீங்கள் வாசித்து முடிக்கும் தருணத்திற்குள் ஒரு நூறு மாற்றங்கள் தொழில்நுட்பத்தில் நிகழ்ந்திருக்கும். இது ஒரு புறம்; மற்றொருபுறம் இந்தியாவில் அறிவியல் வளர்ச்சிக்கான வழிகளை மடமடவென்று மூடிக்கொண்டிருக்கும் ஓர் அரசியல் சூழல். இந்தச் சூழலில் அறிவியலின் பயணம் இனி எப்படி அமையும் என்பது குறித்த பார்வையை இந்நூல் அளிக்கிறது.
அறிவியல் கலைஞர் இராசேசுவரி 1906
l கோ. ரகுபதி,
தடாகம் வெளியீடு,
தொடர்புக்கு: 9840070870
இளங்கலை, முதுகலைப் பட்டங்களில் சென்னை மாகாணத்திலேயே முதலிடத்தைப் பிடித்ததன் மூலம் சாதிய ஆணாதிக்கத்தின் ’பெண்ணுக்குப் பின் புத்தி’ எனும் கட்டுக்கதையை வீழ்த்தி, பெண்ணுக்கு முன் புத்தி உண்டென்ற உண்மையை அழுத்தமாகப் பறைசாற்றியவர் இராசேசுவரி,. பௌதிகப் பேராசிரியராகப் பணியாற்றிய இராசேசுவரியின் அறிவியல் கட்டுரைகள் தனித்துவமானவை. தமிழறிஞர்கள் பலரின் கட்டுரைகள் வெளியான ‘தமிழ்த் தென்றல்’ இதழில் அவர் எழுதிய அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
மாக்கடல் மர்மங்கள்
l அலெக்ஸாந்தர் கோந்தரதோவ், சிந்தன் புக்ஸ்,
தொடர்புக்கு: 94451 23164
சோவியத் அறிஞர் அலெக்ஸாந்தர் கோந்தரதோவ், அறிவியல் துறைகளில் மிகுந்த ஈடுபாடுள்ளவர். தொல்லிலக்கிய செய்யுள் வடிவங்களைக் கணித அடிப்படையில் அளந்தறியும் நோக்குடன் தொடங்கிய இவரின் பணி, அவ்விலக்கியங்களைப் படித்து ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் அளவுக்கு விரிவடைந்தது. இவரின் ஆய்வுக் கட்டுரைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. மாக்கடலின் மர்மங்கள் குறித்து அறிவியல் ஆதாரத்தின் அடிப்படையில் இவர் எழுதிய Riddles of Tree Ocean எனும் நூலின் தமிழாக்கமே இது.
BIOTER: உயிருள்ள கணினி,
ஈ. கோலை,
வாலறிவன் பதிப்பகம்,
தொடர்புக்கு: 9791581009
இன்றைய உலகம் தரவுகளால் நிறைந்துள்ளது. அபரிமித வேகத்தில் பெருகும் தரவுகள் அவற்றின் சேமிப்பைப் பெரும் சவாலானதாக மாற்றியுள்ளன. இந்தச் சூழலில், எதிர்காலத்தில் தரவுகளின் சேமிப்பு எப்படி இருக்கும் என்பதை இந்நூலாசிரியர் ஈ.கோலை கோடிட்டுக் காட்டுகிறார். மெமரி கார்டு, பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றிற்குப் பதிலாக எதிர்காலத்தில் டி.என்.ஏ. மெமரி வரப் போகிறது என்று இந்நூல் தெரிவிக்கிறது. ஒரே ஒரு காபி கப் அளவிலான டி.என்.ஏ-வில் இவ்வுலகின் ஒட்டுமொத்தத் தரவுகளையும் சேமிக்க முடியும் என்பது போன்ற தகவல்கள் வியப்பில் ஆழ்த்துகின்றன.