தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடித்தால் போதுமா?
பசி எடுத்தால் மட்டுமே உணவு உண்ண வேண்டும் என்பது ஆரோக்கியத்துக்கான அடிப்படை விதி. அப்போது ‘தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும்’ என்பது தண்ணீர் குடிப்பதற்கான விதிமுறை என்று தானே மனதில் தோன்றும். இது சரியான அணுகுமுறையா?
வெளிவெப்பத்தைச் சமாளிக்கச் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டியது உடலுக்கு அவசியமாகிறது. அதற்கான வழிமுறைதான், உடல் வெளிப்படுத்தும் வியர்வை. சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உடல், வியர்வையை வெளித் தள்ளிக்கொண்டே இருக்கும்.
அது உடலின் வெப்பநிலை அதிகமாகாமல் தடுத்து சமநிலையில் வைத்திருக்க உதவும். கோடைக்காலத்தில் உடலில் நீர் குறையக்குறைய உடல் உள்உறுப்புகளின் செயல்பாடுகளுக்கும், உடல் வியர்வையை வெளிப்படுத்த வேண்டிய வேலைக்கும்-தேவைக்கும், உடலில் ‘தண்ணீர்ப் பஞ்சம்’ ஏற்படும்.
தாகம் என்பது உடலின் தண்ணீர்த் தேவைக்கான, முதல் அறிவிப்பு அல்ல; தாகம், உடலில் ஓர் அளவிற்குக் கீழ் தண்ணீர் குறையும் நிலையில் உடல் அடிக்கும் அபாய எச்சரிக்கைமணி. தாகம் எடுத்தால் மட்டும் தண்ணீர் குடிக்கும்பொழுது, உடலின் தண்ணீர்த் தேவையைச் சரிக்கட்ட மிக அதிக அளவு தண்ணீர் ஒரே சந்தர்ப்பத்தில் அல்லது குறைவான நேரத்தில் குடிக்க நேரிடும்.
அதற்கு பதிலாக நேரடியாகத் தண்ணீரோ அல்லது வேறு நீர் ஆகாரமோ குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அருந்திவருவது உடல் நலத்துக்கு நல்லது. மேலும் ‘தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் குடிப்பது’ எனும் கொள்கையை வைத்துக்கொண்டால், தாகம் எடுக்கும்போது தண்ணீர் கிடைக்காத சூழலில் நாம் அவதிப்பட நேரிடலாம். அல்லது நல்ல குடிநீர் கிடைக்காத சூழ்நிலையில் நாம் இருக்க நேரிடலாம்.
பாதிப்புகள்: பொதுவாகத் தண்ணீர் குறைவாக அருந்துவது சிறுநீரகக் கற்கள் உருவாவதை ஊக்குவிப்பதாக மருத்துவ அறிவியல் தெரிவிக்கிறது. அது மட்டுமல்லாமல்; கடுமையான கோடை வெயிலின் தாக்கத்தினால், உடல் தண்ணீரின்றி வறண்டு போகும்பொழுது வாந்தி வரும் உணர்வு, வாய் வறட்சி, தலைவலி, தலைச்சுற்றல், உடல் பலவீனம், நெஞ்சு எரிச்சல், தசைப்பிடிப்பு, இதயப் படபடப்பு, வேகமாக மூச்சுவிடுதல், சிறுநீர் உற்பத்தி குறைதல் போன்ற உடல் அறிகுறிகள் அதிகரித்து உடல் வியர்க்காத நிலை, நினைவு தவறுதல், மறதி, மயக்கம், வலிப்பு போன்றவற்றில் போய் முடியும் என்று மருத்துவ அறிவியல் எச்சரிக்கிறது.
பலவீனமான பிரிவினர்: குறிப்பாகப் பச்சிளம், இளம் குழந்தைகள், கர்ப்பிணிகள், ஏற்கெனவே நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, புற்றுநோய் போன்ற இணை நோய்கள் உள்ளவர்கள், மனநோயாளிகள், வெயிலில் வேலை செய்பவர்கள், குளிர் பிரதேசத்திலிருந்து வெயில் பிரதேசத்திற்குப் பயணம் செய்பவர்கள், முதியோர் ஆகியோர் வெயிலின் தாக்கத்தினால் வெகு எளிதில் பாதிக்கப்படக்கூடிய பலவீனமான பிரிவினராக உள்ளனர்.
இந்தப் பலவீனமான பிரிவினர் கோடை வெயிலை மென்மையாகக் கருதிச் செயல்பட்டால் விளைவுகள் மோசமானதாக இருக்கும். அதே நேரம் தீவிர இதய நோய், சிறுநீரகப் பாதிப்பு, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பாதிப்புகளைக் கொண்டவர்கள் தங்கள் மருத்துவருடைய ஆலோசனைப்படி நீர் அருந்துவது சிறந்தது.
குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை தாய்ப்பாலே போதும். வேறு எதுவும் தேவையில்லை. இத்தகைய குழந்தைகள் கோடைக்காலத்தில் அழுதுகொண்டே இருப்பது பசியினால் மட்டுமல்ல; உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைவினாலும்கூட. எனவே, இத்தகைய குழந்தைகளுக்கு அவ்வப்போது தாய்ப்பால் கொடுத்து வருவது கோடைக்காலத்தில் நலம் பயப்பதாக இருக்கும்.
பாதுகாக்கும் கேடயம்: வெயிலின் தாக்கத்தினால் நமது உடலும் மனமும் பாதிக்கப்படாமல் இருக்கத் தண்ணீரும் இதர நீர் ஆகாரமுமே நமக்கு உதவும். மோர், இளநீர், பழச்சாறு போன்றவை இதர நீர் ஆகாரங்களில் அடங்கும். பொதுவாக திரவ உணவாக மட்டுமல்லாமல்; நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய், முள்ளங்கி, நூல்கோல் போன்ற காய்கறிகளையும், ஆரஞ்சு, திராட்சை, தர்ப்பூசணி போன்ற பழங்களையும் அவ்வப்போது உண்பதும் பலன் அளிக்கும். தேநீர், காபி, மது, குளிர்பானங்கள், புகைபிடித்தல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவை உடலில் நீர் இழப்பைத் தூண்டும்.
உடலின் ஒவ்வொரு செல்லும், அனைத்து உறுப்புகளும் தங்குதடையின்றித் தனது செயல்பாடுகளை முழுமையாக நிறைவேற்ற, குறைந்தபட்சம் அரை மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் அருந்துவது நல்லது; இதர நீர் ஆகாரங்களையும் அருந்தலாம். இதுவே கோடையிலிருந்து நம்மைக் காக்கும் சிறந்த பாதுகாப்பு கேடயம்.
குளிர்பதனப் பெட்டியிலிருந்து சில்லென்ற தண்ணீரை அப்படியே குடிப்பது தாகத்தை உடனடியாகத் தீர்ப்பது போலிருக்கும். ஆனால், இதில் குறைந்த அளவு தண்ணீர் குடித்தாலே தாக உணர்வு தணிந்துவிடும். எனவே ஐஸ் தண்ணீர் குடிப்பவர்கள் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல், தவறவிடும் சாத்தியம் அதிகம். மேலும் ஏற்கெனவே சூடாக உள்ள உடலை, சட்டென்று செயற்கையாகக் குளிர்ச்சிப்படுத்துவது தவறு. எனவே, குளிர்ச்சியான தண்ணீர் அருந்துவதைத் தவிர்ப்பதே நல்லது.
இந்த உலகம் மட்டுமல்ல; நமது உடலும்கூட 70% நீரினால் ஆனது. நமது மூளை அதைவிடச் சற்று கூடுதலாக 85% வரை நீரினைக் கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் இதனை உணர்ந்து, சரியான முறையில், சரியான அளவில் நீர் அருந்துவது நலமான வாழ்விற்கு வழிவகுக்கும்.
- செ.கீர்த்தனா | கட்டுரையாளர், உணவுத் தொழில்நுட்ப வல்லுநர்
