வாசிப்பை நேசிப்போம்: படித்ததால் காலியான எண்ணெய்க் குப்பி!

வாசிப்பை நேசிப்போம்: படித்ததால் காலியான எண்ணெய்க் குப்பி!
Updated on
2 min read

எனக்குப் பத்து வயதிருக்கும். கோடை விடுமுறையில் என் பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்தோம். அது சிறிய கிராமம். ஒரே ஒரு பெட்டிக்கடை மட்டுமே அங்கு உண்டு. பாட்டி என்னிடம் மூடியில்லாத எண்ணெய் பாட்டிலைக் கொடுத்து 100 மி.லி. தேங்காய் எண்ணெய் யையும் 100 கிராம் பொட்டுக் கடலையையும் வாங்கிவரச் சொன்னார். வாங்கியாச்சு. பொட்டுக்கடலையை மடித்துத் தந்த தாளில் என்ன செய்தி இருக்கிறது என்பதைச் சுற்றிவளைத்து எப்படியோ படித்துவிட்டேன். ஆனால், வீடு வந்து சேர்ந்தபோது அதே காலி எண்ணெய் பாட்டில். வாசிக்கும் ஆர்வத்தில் எண்ணெய் முழுவதையும் கொட்டியிருக்கிறேன். பாட்டியிடம், ‘வாத்தியார் பிள்ளை மக்கு’ என்று பட்டம் வாங்கினேன்.

கல்கி, கல்கண்டு, சாவி, முத்தாரம், துக்ளக் தொடங்கி தி வீக், ஃப்ரன்ட்லைன் போன்றவற்றோடு பல தமிழ், ஆங்கில நாளிதழ்களையும் என் அப்பா வாங்கித் தந்து என் வாசிப்பை ரசித்தார். ஒவ்வொரு பத்திரிகை வரும்போதும் அப்பாவுக்கும் அம்மா வுக்கும் வாக்குவாதம்தான். ‘அ’னா, ‘ஆ’வன்னா சொல்லிக் கொடுக்கும் ஒரு வாத்தியார் இவ்வளவு ரூபாய் செலவழித்துப் புத்தகம் படிக்கணுமா? எல்.ஐ.சி.,யில் பணம் கட்டினால்கூட பிரயோஜனம் உண்டு’ என்பார். இருந்தாலும் என் படிப்பு ஆர்வம் தடைபடவில்லை.

திருமணத்துக்குப் பிறகும் வாசிப்பின் மீதான என் ஆர்வத்தைக் கண்டு என் கணவரும் பல புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கிறார். என் ஆறாம் வகுப்பு கணித ஆசிரியர் துரைச்சாமி அவர்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர்தான் எங்கள் பள்ளி நூலகத்துக்குப் பொறுபாசிரியர். கணக்குகளைச் சரியாகச் செய்து முடிக்கும் முதல் மூன்று மாணவர்களுக்குக் கதைப் புத்தகங்கள் தருவார். அம்புலிமாமா, ஜேம்ஸ்பாண்ட் போன்ற படக்கதைப் புத்தகங்களை நானும் என் தோழி ராஜேஸ்வரியும் போட்டி போட்டுக்கொண்டு படித்ததுண்டு. இதில் என்ன வேடிக்கை என்றால் ஐந்தாம் வகுப்பு வரை கணிதத்தில் நான் சுமார் ரகம்தான். வாசிப்பின் மீதான ஆர்வம் என்னைக் கணிதத்தையும் கற்க வைத்தது. வினாடி- வினா போட்டிகளில் வெற்றிபெறவும் உதவியது. பின்னாளில் அந்தச் சான்றிதழ்கள் வேலைவாய்ப்பில், நேர்முகத்தேர்வில் வெற்றிபெற உதவின.

அந்த அனுபவத்தில்தான் இப்போது என் மாணவச் செல்வங்களையும் வாசிப்பை ஊக்குவிப்பதற்காகவே அறிவியல் மற்றும் பல்துறை சார்ந்த வினாடி-வினா போட்டிகளுக்கு அழைத்துச் செல்கிறேன். பாடப்புத்தகங்களைத் தாண்டி, பல தன்னலமற்ற தலைவர்களைப் பற்றியும் அறிந்துகொள்வது அவசியம் என்பதற்காக ‘கோகுலம்’ முதல் ‘அக்னிச் சிறகுகள்’ வரை வாசிக்க மாணவர்களைப் பழக்கிக்கொண்டிருக்கிறேன். அதற்காகப் பள்ளி நூலகத்தையும் எங்கள் ஊர் பொது நூலகத்தையும் பயன்படுத்த வழிகாட்டுகிறேன்.

- ஜெ.பி.சிந்தா, பணகுடி, திருநெல்வேலி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in