

மனித உடலில் குறைந்தபட்ச மாக 650 தசைகள் உள்ளன. ஆனால், இன்றைய உட்கார்ந்திருக்கும் வாழ்க்கைமுறையால், அவை பயனற்றதாக மாறிவிட்டன. எட்டு மணி நேரம் நாற்காலியில் அமர்ந்து பணியாற்றும் சூழல், காலத்தால் நமக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. உட்கார்ந்திருக்கும் வாழ்க்கைமுறையின் காரணமாக நமது உடல் பல நோய்களை எதிர்கொள்கிறது.
நாற்காலியில் அமர்ந்து பணி செய்பவர்களின் மரண விகிதம், புகைப்பவர்களின் மரண விகிதத்தைவிட அதிகம். ஆம், புகையிலை பழக்கத்தைவிட, உட்கார்ந்திருக்கும் பழக்கம் மிகவும் ஆபத்தானது. இவை இணைந்தால் நம் வாழ்நாள் மட்டும் சூறையாடப்படாது; நம் வாழ்நாள் முழுமையும் பலதரப்பட்ட நோய்களின் கூடாரமாக மாறும்.
அதிர்ச்சியளிக்கும் ஆய்வுகள்: தொடர்ச்சியாக 11 மணி நேரத்துக்கு நாற்காலியில் அமர்ந்து பணிபுரிபவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த மூன்று ஆண்டுகளில் கடுமையான உடல்நல பாதிப்புக்கு உள்ளாவதாக சிட்னி பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது, நான்கு மணி நேரத்துக்குக் குறைவாக நாற்காலியைப் பயன்படுத்தியவர்கள் மட்டுமே இது போன்ற ஆபத்துகளிலிருந்து தப்பிக்கின்றனர்.
இஸ்ரேலின் டெல்அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியின்படி, அதிக நேரம் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிகின்றவர்களில் 50 சதவீதத்தினரின் இடுப்பு, தொடைப் பகுதியில் அதிக அளவிலான கொழுப்பு சேமிக்கப்படுகிறது. நாற்காலியில் 4 மணிநேரம் அமர்வதும், 8 மணி நேரம் அமர்வதும் மாரடைப்பு நோய் ஏற்படும் ஆபத்தை அதற்கேற்ப கூட்டவோ குறைக்கவோ செய்யும்.
தினமும் 1 மணி நேரம் செய்யப்படும் உடற்பயிற்சி அல்லது வாரம் ஒருமுறை செய்யப்படும் கடுமையான உடற்பயிற்சி மனிதர்களின் ஆயுள்காலத்தை நான்கு ஆண்டுக்காலம் அதிகரிக்கிறது என்பது ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தசை வலிமையூட்டும் பயிற்சி (Weight lifting), தசை நீட்சிப் பயிற்சி (Stretching), தசை எதிர்ப்பு விசைப் பயிற்சி (Muscles resistance Exercise) ஆகியவை கூடுதல் நன்மையளிக்கும்.
இருப்பினும், 12 மணி நேரம் நாற்காலியில் அமர்ந்திருக்கும் பணியில் இருப்பவர், உடற்பயிற்சி செய்தாலும், அப்பயிற்சியின் மூலம் கிடைக்கும் நன்மையைவிட நாற்காலி யில் அமர்வதால் ஏற்படச் சாத்தியமுள்ள மாரடைப்பின் ஆபத்தே அதிகம் என்று கொலம்பியா பல்கலைக்கழகம் எச்சரிக்கிறது.
அமெரிக்காவில் சாலை விபத்துகளில் இறந்த குழந்தைகளைப் பிரேதப் பரிசோதனை செய்த ஆய்வு அதிர்ச்சியூட்டும் முடிவைத் தந்தது. சாலை விபத்து சார்ந்த குழந்தைகளின் இதயத் தமனி குழாய்களில் கொழுப்பு அபரிமிதமாகப் படிந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி ஏற்பட்டது. நடுத்தர வயது மனிதர்களுக்கு மாரடைப்பு மரணம் திடீரென ஏற்பட இதுவே காரணம் என்பதை உணர்த்திய ஆய்வு அது.
நடைப்பயிற்சி: நடைப்பயிற்சியால் இதயத் துடிப்பு அதிக மாகும்; இதயத் தசைநார்கள் நீட்சியடையும், வலிமைபெறும், அதன் ஆரோக்கியம் மேம்படும்; ரத்தவோட்டம் பெருகும்; ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன், ஊட்டச்சத்து, உயிர்ச்சத்து, உப்புச்சத்து, நீர்ச்சத்து, ஹார்மோன்கள் போன்றவை அனைத்து உறுப்புகளுக்கும் கடத்தப்படும்.
இது அந்த உறுப்புகளை உயிர்ப்பிக்கும். ரத்தத்தில் உள்ள புரதம், கொழுப்பு, சர்க்கரை உள்ளிட்டவை 650 தசைகளிலும் பாய்ந்து வளர்சிதை மாற்றம் அடைகின்றன. இதன் காரண மாக ரத்தத்தில் அவற்றின் அளவுகள் குறைகின்றன; இன்சுலின் செயல்பாடும் இரட்டிப்பாகிறது. மனிதன் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சமாகப் பத்தாயிரம் அடிகள் எடுத்துவைத்தால் மட்டுமே மேற்கூறிய நன்மைகள் கிடைக்கும், மின்தூக்கியைத் தேவையின்றிப் பயன்படுத்தக் கூடாது,
தசைகளும் குட்டி இதயமே: ரத்தக் குழாயில் வேகமாக ஓடும் ரத்தத்தைத் தசைகள் உள்வாங்கி. ஒவ்வொரு தசையும் குட்டி இதயமாக, தமனி வழியாகப் பெற்ற ரத்தத்தை மீண்டும் இதயத்துக்குச் சிரை குழாய் வழியே உந்தித்தள்ளும். குறிப்பாகக் கை, கால் பகுதித் தசைகள் புவியீர்ப்பு விசைக்கு எதிர்த் திசையில் ரத்தம் மேல்நோக்கிப் பாய்ந்து, மீண்டும் இதயத்தை வந்தடைய, குட்டி இதயங்களாக (Pumping Station) ஒட்டுமொத்தத் தசைகளும் செயல்படும்.
உடற்பயிற்சியின்போது மூளையும் புதுப் பிக்கப்பட்டு ஞாபகமறதி (‘டிமென்சியா') நோய் வராமல் தடுக்கப்படுகிறது. உடற்பயிற்சி, உடலில் உள்ள பல கோடிக் கணக்கான அணுக்களையும் அதனுள்ளே இயங்கும் குரோமோசோம்களையும் புதுப்பித்து, அவற்றில் ஆயுளை அதிகரிக்கும். இதன் காரணமாக நமது ஆயுளும் அதிகரித்து. மேம்பட்ட நலமும் கிடைக்கிறது.
நடைப்பயிற்சியின் பயன்: நடைப்பயிற்சியில் நன்மை செய்யும் கொழுப்பு (HDL) உடலில் அதிகரிக்கிறது. ரத்தக் குழாயில் தேங்கிய கெட்ட கொழுப்பை (LDL) தசைகளுக்கு அனுப்பி எரியாற்றலாக மாற்ற நடைப்பயிற்சி உதவும், பக்கவாதம், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன், மாரடைப்பு, ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்தத்தில் அதிகக் கொழுப்புத் தேக்கம், தொப்பை, மூட்டு வலி, இடுப்பு வலி, உடல் வலி, மூட்டு இறுக்கம், எலும்பு பலவீனம், தசைநார் பலவீனம், கூன் விழுதல், மூச்சிரைத்தல், தோல் சுருக்கம், முதுமை வேகம் அதிகரிப்பு, முதுமையில் கீழே விழுதல், திடீர் மரணம் ஆகிய அனைத்தையும் தடுத்து நிறுத்த நடைப்பயிற்சி உதவும்.
சீரற்ற உணவு, கல்விச் சுமை, போட்டித்தேர்வு, வேலை அழுத்தம், மனஉளைச்சல், கைபேசி, தொலைக்காட்சி, துரித உணவு, குளிர்பானம் போன்றவை இளமைக் கால மாரடைப்புக்கான ஆபத்துக் காரணிகள். திடீர் மாரடைப்புக்கும், மருத்துவமனை வரை கொண்டு செல்ல அவகாசம் இல்லாமல் மரணம் நிகழ்வதற்கும் உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறையே காரணம். உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை கொண்டவர்களுக்குக் கண்சிமிட்டும் நொடியில் மரணம் நிகழ்கிறது.
தசைகள் ஒவ்வொன்றும் ஒரு தனி இயந்திரம். ஓடும்போது, ஆடும்போது, ஒட்டு மொத்த 650 தசைகளும் இயங்கினால் அது ஒரு தொழிற்சாலையாக மாறும்; கலோரியை எரியாற்றலாக மாற்றும்; கொழுப்பை முழுமை யாகச் செலவழிக்கும். இது நிகழ்ந்தால், உடல் பருமனுக்கோ மாரடைப்புக்கோ வேலை ஏது?
- டாக்டர் இ.சுப்பராயன் | கட்டுரையாளர், முதியோர் நல மருத்துவர்; dr.e.subbarayan53@gmail.com