தேசிய அவமானத்தை எப்போது துடைக்கப் போகிறோம்?

தேசிய அவமானத்தை எப்போது துடைக்கப் போகிறோம்?
Updated on
2 min read

மூகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியா வானளவு சாதித்திருந்தாலும் நாட்டில் ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது இன்னமும் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையாகவே உள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டதுபோல ஊட்டச்சத்து குறைபாடு ஒரு தேசிய அவமானம்!

உலகளாவிய பசி குறியீடு (குளோபல் ஹங்கர் இண்டெக்ஸ்) 2016-ன் புள்ளி விவரப்படி 118 வளரும் நாடுகளில் இந்தியா 97-வது இடத்தில் உள்ளது. அதாவது இந்திய மக்கள் தொகையில் 15 சதவீதத்தினர் உணவு அல்லது ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நல்ல ஊட்டச்சத்தை ஒருவர் பெறுவதற்கு உணவு இருப்பு, உணவை வாங்கும் திறன், உணவை உட்கிரகிக்கும் திறன் ஆகிய மூன்று காரணிகள் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. விளைபொருட்கள், பொருளாதாரக் காரணிகள், தூய்மையான சுற்றுப்புறம் போன்றவையும் ஊட்டச்சத்து மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஊட்டச்சத்துள்ள உணவைத் தேடி நாம் அலைய வேண்டியதில்லை. அந்தந்தப் பருவங்களில், நம் சுற்றுப்புறத்திலேயே எளிதாகக் கிடைக்கும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகளிலிருந்து எளிதாக ஊட்டச்சத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மருத்துவம் வளர்ந்துவிட்ட இச்சூழலில் டெங்குக் காய்ச்சலுக்கு பப்பாளி இலையையும், நிலவேம்புக் குடிநீரையும் தேடிச் சென்று கொண்டிருக்கிறோம் இல்லையா? அதுபோல் உணவிலும் நம் மரபை நோக்கிய தேடல் அவசியம்.

அழகான, வண்ணமயமான பெட்டிகளில் வரும் ஊட்டச்சத்துப் பானங்கள் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களையும் கொடுக்கக்கூடியவை அல்ல. அந்தப் பானங்கள் அவற்றில் உள்ளடங்கியுள்ள ஊட்டச்சத்துப் பட்டியலை வெளியிட்டிருந்தாலும், அவற்றிலிருந்து நமக்குக் கிடைக்கும் சத்து மிக சொற்பமே. அதற்குப் பதிலாக பாரம்பரிய சத்துமாவு, முளைகட்டிய பயறுகள், கேழ்வரகு, நிலக்கடலை, பொட்டுக் கடலையிலிருந்து இன்னும் அதிகமான சத்துகளை எளிதாகப் பெறலாம்.

தேசிய ஊட்டச்சத்து வாரம் 1982-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மையக்கருத்து ‘தொடக்கத்திலிருந்து திறன்மிகு உணவூட்டல்’.

அண்மையில் ஜார்க்கண்டிலுள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 52 குழந்தைகள் இறந்ததாகச் செய்திகள் வெளியாகின. ஊட்டச்சத்துக் குறைபாட்டின் முக்கிய விளைவு ரத்த சோகை. இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். இதனால் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவதுடன், மனவளர்ச்சிக் குறைபாடும் ஏற்படுகிறது. பள்ளிப் படிப்பிலும் செயல்பாடுகளிலும் குறைவான பங்கேற்பு, தொடர்ச்சியான அசதி என இவர்களுடைய ஆற்றல் முடங்குகிறது.

அதேபோல வளரிளம் பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை கவனிக்கப்படாமல் போனால் அது கர்ப்பக் காலம்வரை நீடித்து, பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சியையும் பாதிக்கிறது.

இதிலிருந்து விடுபட முளைக்கீரை, சிறுகீரை , சுண்டைக்காய், சீத்தாப் பழம், அன்னாசி, கம்பு, கொள்ளு, சோயாபீன்ஸ், பட்டாணி , ஆட்டுக்கறி, ஈரல், முட்டை, மீன் போன்றவற்றை அதிகளவில் உட்கொள்ள வேண்டும். இவற்றிலிருந்து இரும்புச் சத்து அதிகம் கிடைக்கிறது . இவற்றோடு வைட்டமின் ‘சி’ அதிகமுள்ள நெல்லிக்காய், பழங்களையும் உட்கொள்ள வேண்டும். இரும்புப் பாத்திரங்களில் சமைத்த உணவை உண்பதால் உடலில் இரும்புச் சத்து சேருகிறது.

சரிவிகித உணவு, சுத்தமான குடிநீர், தூய்மையான சுற்றுப்புறம், உடற்பயிற்சி, மன அழுத்தம் அற்ற வாழ்க்கை முறை ஆகிய அனைத்தும் இன்றைக்கு அத்தியாவசியம். தாய்ப்பாலில் தொடங்கி செயற்கையாகப் பதப்படுத்தப்படாத ஊட்ட உணவுவரை குழந்தைகளுக்கு அளிப்போம். இல்லாவிட்டால் அளப்பரிய செயல்களைச் சாதிக்கும் மனித ஆற்றல் மருந்தகங்களிலும் மருத்துவமனைகளிலும் முடங்கிவிடும்!

கட்டுரையாளர்,

ஊட்டச்சத்தியல்

துணைப் பேராசிரியர்

தொடர்புக்கு: umathanvi@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in