

கர்ப்பம் என்பது சற்றே சிக்கலான உயிரியல் நடைமுறை. இது குறித்துப் பல கற்பிதங்களும் தவறான எண்ணங் களும் பரவலாக உள்ளன. இவற்றில் சில தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வருகின்றன; மற்றவை ஊடகங்கள் அல்லது இணையம் மூலம் பரப்பப்படுகின்றன.
இதன் விளைவாக, குழந்தையை எதிர்பார்க்கும் பெற்றோருக்கு எந்தத் தகவலை நம்புவது, எதை நம்பக்கூடாது என்கிற தெளிவைப் பெறுவது கடினமாகிறது. கர்ப்பம் பற்றிய கற்பிதங்களின் உண்மைநிலையை அறிவதே தெளிவைப் பெறுவதற்கு அவர்களுக்கு உதவும்.
கற்பிதம் 1
கர்ப்ப காலத்தில் இருவருக்கான உணவைச் சாப்பிட வேண்டும். வளரும் குழந்தைகளுக்கும் சேர்த்து கர்ப்பிணிப் பெண்களுக்குக் கூடுதல் ஊட்டச்சத்துக்கள் தேவை என்பது உண்மைதான் என்றாலும், அதற்காகச் சாப்பிடும் உணவின் அளவை அவர்கள் இரட்டிப்பாக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையில், கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு நாளைக்கு 300-500 கிராம் கூடுதல் கலோரிகளை மட்டுமே உட்கொண்டால்போதும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கற்பிதம் 2
கர்ப்ப காலத்தில் அனைத்து வகையான உடற்பயிற்சிகளையும் தவிர்க்க வேண்டும். உண்மையில், கர்ப்ப காலத்தில் வழக்கமான உடற்பயிற்சி மிக முக்கியமானது. இது கர்ப்பகால நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், குறைப்பிரசவத்தின் அபாயத்தைக் குறைக்க உதவும். இருந்தாலும், கர்ப்பிணிப் பெண்கள் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும் உடற்பயிற்சிகளையும் உடலுடன் தொடர்புடைய குழு விளையாட்டுகளையும் தவிர்க்க வேண்டும்.
கற்பிதம் 3
உங்கள் வயிற்றின் வடிவத்தின் அடிப்படையில் குழந்தையின் பாலினத்தை நீங்கள் கணிக்க முடியும். இதை நிரூபிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. ஒரு பெண்ணின் வயிற்றின் வடிவம் என்பது வயிற்றுக்குள் குழந்தை இருக்கும் நிலை, தாயின் உடல் அளவு, அம்நியோட்டிக் திரவத்தின் (பனிக்குட நீர்) அளவு உட்படப் பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.
கற்பிதம் 4
கர்ப்ப காலத்தில் அனைத்துக் கடல் உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும். சுறா, வாள்மீன் போன்ற சில கடல் உணவு வகைகளைக் கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டும் என்பது உண்மைதான். இருப்பினும், பல கடல் உணவு வகைகளை மிதமான அளவில் உட்கொள்வது பாதுகாப்பானதே. மீன், மட்டி ஆகியவை புரதம், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களுக்கும், கருவின் வளர்ச்சிக்கு அவசியமான பிற முக்கிய ஊட்டச்சத்துக்களுக்கும் சிறந்த ஆதாரங்களாகத் திகழ்கின்றன.
கற்பிதம் 5
அனைத்து வகை காஃபின் பொருள்களையும் தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்தில் அதிக அளவு காஃபின் தீங்கு விளைவிக்கும் என்பது உண்மைதான். என்றாலும், மிதமான அளவில் அதை நுகர்வது (ஒரு நாளைக்கு 200 மில்லிகிராமுக்குக் குறைவாக) பொதுவாகப் பாதுகாப்பானதாகவே கருதப்படுகிறது.
கற்பிதம் 6
கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ள முடியாது. மருத்துவர் தவிர்க்க அறிவுறுத்தியிருந்தால் தவிர, கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானதே. உடலுறவு குழந்தையைப் பாதிக்காது அல்லது கருச்சிதைவுக்கும் வழிவகுக்காது. பிராக்ஸ்டன் ஹிக்ஸ் சுருக்கங்கள் போன்றவை சாதாரணமானவை; அது சிறிது நேரம் சங்கடத்தை ஏற்படுத்தும். ஆனால், அது ரொம்ப நேரம் நீடிக்காது.
மருத்துவர்களை நம்புங்கள்: கர்ப்பம் என்று வரும்போது, கற்பிதங்களிலிருந்து உண்மையைப் பிரித்து அறிவது எதிர்காலப் பெற்றோர்களுக்கு மிக முக்கியமானது. கர்ப்பத்தைப் பற்றிப் பல கற்பிதங்களும், தவறான கருத்துக்களையும் புறந்தள்ளுவதே சிறந்த அணுகுமுறை. குழந்தை பிறப்பதற்கு முந்தைய பராமரிப்பு பற்றித் தெளிவான முடிவுகளை எடுப்பதற்கு, மருத்துவர்கள் தரும் தகவல் ஆதாரங்களை மட்டும் நம்புவது எப்போதும் நல்லது; பாதுகாப்பானது.
- டாக்டர் அமுதா ஹரி | கட்டுரையாளர், மகப்பேறு - மகளிர் நோயியல் மருத்துவர்