

தேர்வு நாள் என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல; அது நமது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. இருப்பினும், தேர்வுக் காலகட்டத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம் கவலையளிக்கும் விதமாகத் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்த அழுத்தம் மாணவர்களின் மீது திணிக்கப்படுவதற்கு மறைமுகமாகவோ நேரடியாகவோ நாம் அனைவரும் காரணமாக இருக்கிறோம்.
முடிந்தவரை, தேர்வு நாளை எல்லா நாளையும் போன்ற ஒரு நாளாக மாணவர்கள் கருதுவதற்கு நாம் துணை நிற்பதே சரியான அணுகுமுறை. முக்கியமாக, ஆண்டுத் தேர்வை வகுப்பில் எழுதும் மற்றொரு தேர்வு என்கிற ரீதியில் பெரியவர்கள் அணுக வேண்டும்; மாணவர்களையும் அணுகவைக்க வேண்டும். தேர்வு நாளை பதற்றமின்றி மாணவர்கள் அணுகுவதற்கு இந்த அணுகுமுறை உதவும்.
எப்படிக் கையாள வேண்டும்? - பரீட்சைக்குத் தயாராகும் எல்லாக் குழந்தைகளையும் நாம் ஒரே மாதிரி கையாளக் கூடாது. இயல்பிலேயே அதிகப் பதற்றம், பயம் உள்ள குழந்தைகளிடம் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் திறன் இருந்தாலும் 80 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தாலே போதும் என்று கூறினால், அவர்களின் பதற்றம், பயம் குறையும்; தங்கள் திறனுக்கும் அதிகமான மதிப்பெண்களை எடுப்பர்.
மாறாக, 95 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்று கூறி அழுத்தம் கொடுத்துவந்தால், உள்ளதும் போய்விடும். பயம், பதற்றத்தில் நன்கு படித்ததையும் மறந்து, எழுதுவதில் குழப்பம் ஏற்பட்டு 80 மதிப்பெண்கள் எடுப்பதற்குக்கூடத் தடுமாறும் நிலை ஏற்படும்.
இந்த அணுகுமுறை அனைவருக்கும் பலனளிக்காது; இயல்பிலேயே அலட்சிய மனப்போக்கு, படிப்பில் ஆர்வமில்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு இது ஒருபோதும் பலனளிக்காது. இத்தகைய மாணவர்களிடம், அவர்களின் திறமைக்கும் அதிகமான லட்சியத்தையோ மதிப்பெண்களையோ எடுக்க வேண்டும் என்று கூறி ஊக்கப்படுத்த வேண்டும்.
அதிக மதிப்பெண்களை எடுத்தால் பரிசுப் பொருள்கள் கிடைக்கும் என்று தூண்டுதலை ஏற்படுத்தலாம். இந்த அணுகுமுறை அவர்களின் அலட்சிய மனப்போக்கைக் களைய உதவும்; முக்கியமாக, படிப்பில் புதிய ஆர்வத்தை ஏற் படுத்தும். 60 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள்கூட, இந்த அணுகு முறையினால் 90 மதிப்பெண்கள் எடுக்கும் முயற்சியில் ஈடுபடுவர்.
நினைவில் வைத்துக்கொள்வது எப்படி? - எவ்வளவுதான் கஷ்டப்பட்டு நினை வில் வைத்துக்கொள்ள முயன்றாலும், ஒரு சில விஷயங்கள், குறிப்பாகப் பெயர்கள், எண்கள், ஆண்டுகள், சூத்திரங்கள் போன்றவை அடிக்கடி மறந்து போய்விடும். அதை நினைத்து மாணவர்கள் கவலைப்பட வேண்டிய தேவையில்லை.
இத்தகைய ஞாபக மறதி அனைவருக்கும் ஏற்படும் ஒன்றே. அடிக்கடி மறக்கும் இந்த விஷயங்களை ஒரு தாளில் எழுதி, எளிதில் கண்ணில்படும் விதமாகச் சுவரில் ஒட்டி, அதைத் தினமும் ஒருமுறையேனும் படித்து வருவது, நினைவு வைத்துக்கொள்வதில் இருக்கும் சிரமத்தைப் பெருமளவில் குறைக்க உதவும்.
தூக்கம் முக்கியம்: தேர்வு காலகட்டத்தில் சரியான நேரத்தில் சாப்பிடுவது, போதுமான அளவுக்குத் தூங்கு வதும் மிகவும் அவசியம். தூக்கத்தில்தான் மூளை, நாம் படித்ததைச் சரியான வகையில் ஒழுங்குபடுத்தி, தேவையான விஷயங்களைத் தகுந்த நேரத்தில் நினைவுக்குக் கொண்டுவரும் முன்னேற்பாடுகளைச் செய்யும்.
தேர்வுக்கு முதல் நாள் இரவில் தூக்கம் கெட்டுப்போனால், இந்த முன்னேற்பாடுகள் பாதிப்படையும்; வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படலாம்; நினைவுத் திறனும் பெரிதும் குறைந்துவிடும். முக்கியமாக, அதிகமாகக் காபி, தேநீர் அருந்துதல் இரவுத் தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்; கைகளில் நடுக்கத்தையும் ஏற்படுத்தும். தேர்வு நாளன்று காபி, தேநீரைத் தவிர்ப்பது நல்லது.
மூச்சுப் பயிற்சி: ஆழமாக மூச்சை உள்வாங்கி, பின்னர் மெதுவாகச் சுவாசத்தை வெளிவிடுவதே மூச்சுப் பயிற்சி. இதைத் தொடர்ந்து 20 முதல் 30 தடவை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது மனதை லேசாக்கும்; மூளைக்கும் புத்துணர்வு அளிக்கும்.
தேர்வைத் தொடங்குவதற்கு முன்னரும், தினமும் படிக்க அமரும் முன்னரும் இந்தப் பயிற்சியை 5 முதல் 10 நிமிடங்கள் செய்துவந்தால், மனம் தெளிவடையும்; பதற்றம் குறையும்; மன அழுத்தம் நீங்கும்; படிப்பதும் இலகுவாகும்; எழுதுவதும் தெளிவாகும்.
இடைவெளி முக்கியம்: தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்கக் கூடாது. 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை படிப்பதை நிறுத்த வேண்டும்; அதுவரை படித்ததை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்; பின்னர் மீண்டும் படிப்பைத் தொடர வேண்டும். இது குறுகிய கால நினைவில் (ஷார்ட் டெர்ம் மெமரி) இருக்கும் விஷயங்களை, நெடுங்கால நினைவுக்கு (லாங் டெர்ம் மெமரி) மாற்றும் எளிய முறை. இந்த எளியமுறையைத் தொடர்ச்சியாகச் செயல்படுத்துவது வெற்றியை உறுதிசெய்யும்.
திட்டமிடல்: தேர்வு காலகட்டத்தில் வெற்றி, தோல்வி என்கிற பரிதவிப்பில் சிக்கிக்கொள்ளாமல், நமது ஆற்றலைத் திட்டமிடல் சார்ந்து கவனம் குவிக்க வேண்டும். தேர்வு நாளில் ஏற்படச் சாத்தியமுள்ள கடைசி நேரக் குளறுபடிகளைத் தவிர்க்கச் சரியான திட்டமிடல் மட்டுமே உதவும்.
வீட்டிலிருந்து வழக்கமாகப் புறப்படும் நேரத்துக்கு முன்கூட்டியே புறப்பட்டுச் செல் லுங்கள். சீக்கிரமாகத் தேர்வறையை அடைவது பதற்றத்தைத் தவிர்க்கும். நேரம் அதிகமாக இருந்தால், காலாறச் சிறிது நடைபோடுங்கள்.
முயற்சியே முக்கியம்: அடுத்தவர்களோடு நம்மை ஒப்பீடு செய்து பார்க்கக் கூடாது. ஒவ்வொருவரின் செயல் திறனும், ஞாபகத் திறனும் வெவ்வேறாகவே இருக்கும். நமது திறமையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மாறாக, அடுத்தவரின் திறமையைப் பார்த்து ஏங்குவதோ பொறாமைப்படுவதோ கூடாது. இத்தகைய எதிர்மறையான மனப்போக்கு நம்மை மோசமான நிலைக்கே இட்டுச் செல்லும்; குறிப்பாக, நமது தன்னம்பிக்கையை முற்றிலும் குலைத்துவிடும்.
நமது திறமையில் நம்பிக்கைவைத்து, இயன்றவரை சிறப்பாகப் படிப்பது சிறந்த முறையில் தேர்வு எழுத உதவும். நமது கவனம் எப்போதும் முயற்சியில் மட்டுமே இருக்க வேண்டும்; முடிவுகளில் இருக்கக் கூடாது. இங்கே முயற்சி என்பது, பரீட்சைக்குப் படிப்பதும், தேர்வு நாளில் சிறப்பாக எழுதுவதும். இந்த முயற்சி சிறப்பாக இருந்தால், தேர்வின் முடிவுகளும் நமக்குப் பிடித்த விதமாகவே அமையும்.
மன அழுத்தமும் மனப் பதற்றமும் அளவுக்கு அதிகமாக இருந்தால் தூக்கம், பசி, இயல்பு நிலை போன்றவை பாதிக்கப்படும். மேற்கூறிய எளிய முயற்சிகள் பலன் அளிக்காத பட்சத்தில் கால தாமதமின்றி மன நல மருத்துவரை அணுகித் தகுந்த சிகிச்சை பெற்றுக்கொள்ளுதல் அவசியம். தகுந்த நேரத்தில் தயக்கமின்றிச் சிகிச்சை பெறுதல் வாழ்க்கையையே மாற்றக்கூடும்.
- டாக்டர் ஜி.ஆர்.குறிஞ்சி | கட்டுரையாளர், மனநல மருத்துவர்; kurinjimd@gmail.com