

அறிதுயில் சிகிச்சையை (ஹிப்னாடிசம்) ஒரு முற்றுமுழுதான உளவியல் சிகிச்சை முறையாகக் கருத முடியாது. வெவ்வேறு உளவியல் சிகிச்சை முறைகளில், குறிப்பாக அறிதிறன் சார்ந்த சிகிச்சையில் (CBT), அறிதுயில் ஒரு கூறாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இருப்பினும் பொதுவெளியில், குறிப்பாக இணையதளங்களில், அறிதுயில் சிகிச்சை யின் பயன்பாடுகள் குறித்த செய்திகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவையாகவே இருக்கின்றன.
மூன்று வகை: அறிவியல் ஆராய்ச்சிகளின் அடிப்படையில், அறிதுயில் சிகிச்சை முறை மூன்று வகையான பிரச்சினைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. முதலாவதாக, அறிதுயில் சிகிச்சை ஒரு வலிபோக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. நாள்பட்ட நோய்களினால் உண்டாகும் வலி களைக் குறைக்க இந்தச் சிகிச்சை பயனளிக்கிறது.
இரண்டாவதாக, அறிதுயில் சிகிச்சையானது மனஅழுத்தத்துக்கு ஓரளவு பயனளிக்கிறது. மூன்றாவதாக, புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிடவும் தூக்கமின்மையை போக்கவும் அறிதுயில் சிகிச்சை பெரிதும் பயன்படுத்தப் படுகிறது.
குறிப்பாக, நீண்டகாலமாக உள்ள மூட்டு வலிகளுக்கும் குடல் எரிச்சல் நோய்க்கும் (Irritable bowel syndrome) அறிதுயில் சிகிச்சை ஓரளவு பயனளிக்கிறது. மகப்பேறு வலியைக் கட்டுப்படுத்தவும் மருத்துவக் காரணங் களுக்காக உடலில் ஏற்படும் வலிகளைக் குறைக்கவும் இது மிகவும் பயனுள்ளது. உடலில் ஊசி செலுத்தும்போதும், சிறுசிறு அறுவைச் சிகிச்சைகளின்போதும் ஏற்படும் வலியைக் கையாள சுய அறிதுயில் முறையைப் பயன்படுத்தலாம்.
உளவியலாளர்கள், மனநல மருத்துவர்கள், உளவள ஆலோனை வழங்கும் ‘கவுன்சலர்’ எனப்படுவோர் அறிதுயில் சிகிச்சையைப் பயன்படுத்தத் தகுதி உள்ளவர்கள். ஆனால், இவர்கள் அறிதுயில் சிகிச்சையில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
சுய அறிதுயில் (Self-hypnosis) - அறிதுயில் நிலையை வேறொருவரின் உதவியின்றித் தானாக எய்தவும் முடியும். இதில் இரண்டு கட்டங்கள் உள்ளன. ஒன்று உடலில் உள்ள தசைகளைத் தளர்த்துவது (Muscle relaxation), அடுத்தது மனதைக் கட்டுப்படுத்தி ஒரு குறிப்பிட்ட உடலின் செயல் மீது அல்லது ஓர் எண்ணத்தின் மீது குவியப்படுத்துவது.
சுய அறிதுயில் முறை எளிதானது, பிறர் உதவி தேவை இல்லாமல் அதைத் தானாகக் கற்றுக்கொள்ளலாம். தொடக்கத்தில் கடினமாகத் தோன்றினாலும் அதை நாளடைவில் படிப்படியாகக் கற்றுக்கொள்ள முடியும். ஆனால், இதற்காக ஒவ்வொரு நாளும் நேரத்தை ஒதுக்குவது முக்கியம்.
என்ன செய்ய வேண்டும்? - முதலில் ஓர் அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். இடைஞ்சல்கள் இல்லாதபடி குறைந்தபட்சம் அரை மணி நேரத்தை இதற்காக ஒதுக்கவும். முதலில் சற்று வசதியாக அமர்ந்துகொள்ளவும். பிறகு கண்களை மூடி, மூச்சை நன்றாக உள்ளே இழுத்து, சில விநாடிகள் நெஞ்சில் தக்கவைத்திருந்து, பின் சீராக மெல்ல வெளியே விடவும். இதே போன்று ஐந்து முதல் பத்துப் பதினைந்து நிமிடங்கள் வரை செய்யவும்.
அடுத்து, தலையிலிருந்து பாதம் வரை மெதுவாகக் கவனத்தைக் கொண்டு செல்லவும். முதலில் ஒவ்வொரு தசையும் இறுக்கிப் பின் மெதுவாகத் தளர்த்த வேண்டும். கண்களை இறுக்கி மூடிப் பின் இமைகளைத் தளர்த்தவும். தளர்ச்சியினால் ஏற்படும் நல்லுணர்வைக் கூர்ந்து கவனிக்கவும்.
இதேபோல அடுத்து கழுத்தை இறுக்கவும், பின் தளர்த்தவும். இதனால் உண்டாகும் தளர்ச்சியில் முழுக்கவனத்தையும் செலுத்தவும். சில நொடிகள் இதை அனுபவித்தபின் முகத்திலிருந்து ஆரம்பித்து முன் தலை, கழுத்து, தோள்பட்டை, தொடை, கால், பாதம், விரல்கள் என ஒவ்வொரு பாகத்திலும் ஓய்வாகக் கவனத்தைக் குவித்துப் பின் அவற்றைத் தளர்த்தவும்.
தளர்ச்சியை மிகைப்படுத்த ஒரு மின்தூக்கி கீழே போவதுபோல கற்பனை செய்து கொள்ளலாம். பத்திலிருந்து ஒன்று வரை எண்ணிக்கொண்டே மேலிருந்து கீழ் நோக்கி, மின்தூக்கி மூலமாக இறங்குவதாகக் கற்பனை செய்யவும். ஒவ்வொரு எண்ணை எண்ணும் போதும் இன்னும் ஆழமாக, இன்னும் ஆழமாக என்று கூறிக்கொண்டே இறங்கவும்.
ஒவ்வொரு கட்டத்திலும் கீழே போகும்போது உடல் தளர்ச்சி அதிகரிப்பதாக உணருங்கள். தேவையானால், 'அமைதி, அமைதி' என்று தனக்குத் தானே மனதுக்குள் கூறிக்கொள்ளலாம். மத நம்பிக்கை உள்ளவர்கள் மந்திரங்கள், தோத்திரங்கள் போன்றவற்றை மனதுக்குள் கூறிக்கொள்ளலாம்.
இந்தக் கட்டத்தில் மனதில் வேறு எண்ணங்கள் தோன்றக்கூடும். அவற்றை எதிர்த்துப் போராடத் தேவை இல்லை. வானில் மிதக்கும் மேகங்கள் தோன்றி மறைவதைப் போல, அவை வந்துபோகட்டும். இந்தக் கட்டத்தில் கூடியவரை கவனத்தைச் சுவாசத்தின் மீது செலுத்துங்கள். பத்துப் பதினைந்து நிமிடங்களில் இந்த நிலையை அடையலாம். உடல் தளர்ச்சியையும் மன அமைதியையும் அடையப் பலருக்கு இதுவே போதுமானதாக இருக்கும். இதுவே சுய அறிதுயில் நிலை.
சுயகருத்தேற்றம்: சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் தமக்குள்ள உளவியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு அறிதுயில் நிலையைப் பயன்படுத்த விரும்பலாம். இப்பொழுது, உங்கள் குறிக்கோளைக் கற்பனை செய்யத் தொடங்கலாம். அந்தக் குறிக்கோளைக் கற்பனைக் காட்சியாகவோ, செயலாகவோ, வார்த்தை வடிவாகவோ இப்போது சிலமுறை கற்பனை செய்து பார்க்கவும்.
உதாரணத்துக்கு, ஒரு மேடைப் பேச்சுக்கு நீங்கள் தயாராகிறீர்கள் அல்லது ஒரு முக்கியமான நேர்முகத் தேர்வுக்குப் போக வேண்டியுள்ளது; அதனால், உங்கள் மனதில் ஒருவகை பதற்றம் உருவாகி, உங்களால் இதைச் சமாளிக்க முடியுமா என்ற அச்ச உணர்வு தோன்றி, உங்களைத் துன்புறுத்துகிறது என்றால் அந்தக் குறிக்கோளை அடைவதற்குச் சில வாசகங்களைத் தனக்குத்தானே கூறிக்கொள்ளலாம்.
“என்னால் இதைச் சமாளிக்க முடியும், அதற்கான மனவலிமை எனக்கு உண்டு” என்று உறுதி பூணலாம். இது சுயகருத்தேற்றம் (Self-suggestion) என்று அழைக்கப்படுகிறது. பயிற்சியை முடிந்தபின் அந்த வாசகங்களை நினைவுபடுத்திக்கொண்டு கண்களைத் திறக்கவும்.
தொடக்கத்தில் இந்தப் பயிற்சியைத் தனியாக அமைதியான இடத்தில் செய்ய ஆரம்பித்து, பின் பயணம் செய்யும்போதோ, கிடைக்கும் நேரத்திலோ சில நிமிடங்களில் இதைச் செய்துகொள்ளலாம். இந்த எளிய பயிற்சி மூலம் விரக்தி, மன அழுத்தம் ஆகியவற்றை வெற்றிகொள்ளலாம். குறிப்பாக இரவில் தூக்க மின்மைக்கு சுய அறிதுயில் முறை நல்ல பலன் அளிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மனந்தெளிந்த நிலை: சுய அறிதுயில் பயிற்சி மனநலத்தை நிலைபெறச் செய்வதால் பல மனநல மையங்களில், இப்பொழுது இது முறையாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மனப்பதற்றம், மிகைஅச்சம், மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது கற்றுக் கொடுக்கப்படுகிறது. தற்போது மேலை நாடுகளில் பெருமளவில் பயன்படுத்தப்படும் மனந்தெளிந்த நிலை, மனஒருமை (Mindfulness) என்ற பயிற்சி முறையும் சுய அறிதுயில் நிலையின் நீட்சியே.
சுய அறிதுயில் நிலை பற்றிப் பேசும்போது யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். எல்லா நாடுகளிலும் ஏதோ ஒரு வகையான மனப் பயிற்சி காலங்காலமாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. யோகா, தியானம் மட்டுமல்லாமல்; சீனத்தில் டாய்ச்சி (Tai chi), மந்திரம் ஓதுதல், தொழுகை, இறை வழிபாடு, பிரார்த்தனை ஆகியவற்றிலும் சுய அறிதுயில் நிலை கலந்துள்ளது.
- டாக்டர் எம்.எஸ். தம்பிராஜா | கட்டுரையாளர், மனநல மருத்துவர், முன்னாள் பேராசிரியர்; ibmaht@hotmail.com