

‘சார்,திருப்பூர் திரு.வி.க. நகரைச் சேர்ந்த கார்த்திக் என்ற 32 வயது இளைஞரிடம் இருந்து இரண்டு கண்களைத் தானமாகப் பெற்று அரவிந்த் மருத்துவமனைக்குச் சமீபத்தில் அளித்துள்ளேன். அந்தக் கண்கள் விழி இழந்த இருவருக்குப் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் 90 பேரிடம் கண்களைத் தானமாகப் பெற்று 180 பேருக்குப் பார்வை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளேன். இப்படிக்கு, சுந்தரராஜன்.' இப்படியொரு குறுஞ்செய்தி திருப்பூர், பல்லடம் பகுதிகளில் பலருக்குச் சமீபத்தில் வந்திருக்கலாம்.
இந்தக் குறுஞ்செய்தியை அனுப்பியவரை இமைகள் சுந்தரராஜன் என்றால்தான் பலருக்கும் தெரியும். இமைகள் கண்ணைக் காப்பது போல், கண் தானம் என்ற உன்னத விஷயத்தைக் கண்ணெனப் போற்றி வருகிறார் இவர். இதுவரை 90 பேரிடம் கண்களைப் பெற்று 180 பேருக்கு விழிகளைப் பொருத்த ஏற்பாடு செய்திருக்கிறார்.
பொதுச்சேவை
“என் சம்பாத்தியத்துக்கு ஒர்க் ஷாப் இருக்குங்க. ஏழைபாழைக குறிப்பா அனாதரவுக் குழந்தைகளைக் கண்டா, உடனே ஏதாவது செய்யணும்னு தோணும். அப்படித்தான் 2000-த்துல திருப்பூர்ல ஒரு பக்கம் வேலையா இருந்தப்ப, காதுகேளாத வாய்பேச முடியாத குழந்தைகள் பள்ளில என் பையன் பிறந்த நாளுக்குக் கறி விருந்து போட்டேன். அதைச் சாப்பிட்ட அந்த அனாதரவு குழந்தைகளோட சந்தோஷத்தைப் பார்த்தவுடனே இன்னும் இன்னும் ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அப்ப இருந்து பொதுச்சேவை என் வாழ்க்கைல ஒரு பாகமா ஆகிப் போச்சு.
திருப்பூர்ல சிவப்பிரகாசம்னு ஒருத்தர் கண் தான சேவை செஞ்சுட்டிருந்தார். அப்ப என் 80 வயது பாட்டி படுத்த படுக்கையா இருந்தாருங்க. நம்ம ஊருக்கு ஏதாவது செய்யோணும்னு பாட்டி ஆசைப்பட்டாங்க. "ஏம் பாட்டி, நீ கண் தானம் செய்றீயா?" னு கேட்டதும் சம்மதிச்சாங்க. எங்க தாத்தாவும் சரீன்னுட்டார். சிவப்பிரகாசத்தை கேட்டபோது, பாட்டி காலமானவுடனே தாமதிக்காம சொல்லுனு சொன்னாருங்க. 2004வது வருஷத்துல அரவிந்த் ஆஸ்பத்திரில இருந்துவந்து உடனே எடுத்துகிட்டாங்க. 2 வருஷம் கழிச்சு தாத்தாவும் இறந்துட்டார். அவருடைய கண்ணையும் தானம் கொடுத்தோம்.
தனிப்பட்ட முறையில் அன்ன தானம், கண் தானம் செய்றதுல நிறைய கஷ்டம் இருப்பது தெரிஞ்சது. இதை ஒரு அமைப்பு மூலமா சொன்னா ஜனங்க கேப்பாங்கன்னு முடிவு செஞ்சேன். இமைகள் கண் தானக் கழகத்தை ஆரம்பிச்சேன். அத்தோட ரோட்டரி அமைப்புல சேர்ந்து, 6 பேர்கிட்ட கண் தானம் வாங்கியிருந்தேன். 2012-2013ல அந்த அமைப்பின் நான் தலைவரான அடுத்த நாள், என் நண்பரோட அம்மா இறந்துட்டாங்க. முந்தின நாள் மீட்டிங்ல பேசினதை வச்சு, கண் தானம் செய்ய உடனே என்னைக் கூப்பிட்டார். அவங்க கண்கள் கிடைச்சுது. அந்த வருஷத்தில் மட்டும், இப்படி 21 பேர் கண் தானம் செஞ்சாங்க” என்கிறார் சுந்தரராஜன்.
வரவேற்பு எப்படி?
‘ஒரு இறப்பு நிகழ்ந்திருக்கும்போது கண்களைக் கேட்பது பலருக்குக் கோபமூட்டலாம். பல்லடம் போன்ற கிராமப்புறங்களை உள்ளடக்கிய பகுதியில் இதை எப்படிச் செய்ய முடிகிறது?’ என்றபோது, “அதையேன் கேக்கறீங்க. பல இடங்களில் அடிச்சுத் துரத்தாத குறைதான்! ஒரு வீட்டில இறப்பு நடந்துட்டாலோ, இறப்பு நடக்கும் சூழ்நிலை இருந்தாலோ அந்த வீட்டுக்குத் தனியாகவே போவேன். எனக்குப் பரிச்சயமானவர்கள் மூலமாக இறந்தவரின் நெருக்கமான உறவுக்காரரிடம் பேசுவேன். இறப்பு ஈடு செய்யமுடியாததுதான், அதேநேரம் அவங்க கண்களைத் தானம் செய்யச் சம்மதிச்சா இரண்டு பேருக்குப் பார்வை வெளிச்சம் தரமுடியும்னு பக்குவமா எடுத்துச் சொல்லுவேன்.
ஒரு முறை பூ மார்க்கெட்டில மலர்வளையம் வாங்குவதைப் பார்த்து ஒருவரிடம் பேசி, அவர் என்னைத் துரத்திவிட்டு, அவரையே பின்தொடர்ந்து போய் இறப்பு நடந்த வீட்டில் உள்ளவர்களிடம் பேசி, சுடுகாட்டுக்கே உடல் சென்ற பின் கண்களைத் தானம் பெற்று இரண்டு பேருக்குக் கொடுத்த அனுபவம் எனக்கு உண்டு.
பல்லடம் சித்தம்பாளையம் என் சொந்த ஊர். என் தாத்தா கண் தானம் செஞ்சது அங்கேதான். இப்போ வரை அந்த ஊர்ல 100 சதவீதம் - அதாவது இதுவரை இறந்த 25 பேரிடமும் கண் தானம் பெற்றிருக்கிறோம். அதேபோல் திருப்பூர் பூம்புகார் கிராமத்தில் என் நண்பர் ரத்தினசாமி கொடுத்த தகவலின் அடிப்படையில் 90 சதவீதம் பேர் கண் தானம் செய்திருக்கிறார்கள்!" என்கிறார் சுந்தரராஜன்.
‘விழிகளை உலகுக்கு ஈந்து விடைபெற்ற அன்னாரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்' என்று எழுதி கண் தானம் கொடுப்பவரது பெயர், புகைப்படம் பொறித்த பிளெக்ஸ் பேனரைத் துக்க வீட்டுக்கு முன்பு கட்டுவது இமைகள் அமைப்பின் வழக்கம். காரியம் அல்லது பதினாறாம் நாளன்று உறவினர் சூழ்ந்திருக்கும் வேளையில், விழி தந்தவர் வீட்டுக்குத் தன் அமைப்பினருடன் சென்று சான்றிதழும் வழங்குகிறார் சுந்தரராஜன்.
கோவை கண் மருத்துவமனைகளில் பார்வையிழந்த 550 பேர் கண் தானம் கேட்டுக் காத்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் பார்வை தந்துவிட வேண்டும் என்று இவர் விரும்புகிறார்.