

விபத்தில் காயமடைந்தவர், மாரடைப்பால் உயிருக்குப் போராடுபவரை அவசரக்கால முதலுதவி சிகிச்சை கொடுத்து, ஒரு மணிநேரத்துக்குள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுவிட வேண்டும். அந்த ஒருமணி நேரம்தான் `கோல்டன் ஹவர்' என்று மருத்துவர்களால் குறிப்பிடப்படுகிறது. அண்மையில் அம்பத்தூர் ரோட்டரி மருத்துவமனையில் அவசரக்கால சூழ்நிலைகளில் தேவைப்படும் உயிர்காக்கும் அடிப்படை மருத்துவத்துவக்கான பயிற்சி முகாம் திருநங்கைகளுக்காக நடத்தப்பட்டது.
ரோட்ராக்ட் கிளப் ஆஃப் டெக்ஸ்டெரஸ் உடன் இணைந்து மெடிக்மோட் நடத்திய இந்த முகாமில் தோழி திருநங்கைகள் சமூக அமைப்பைச் சேர்ந்த 22 திருநங்கைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். அவசரக்கால சூழ்நிலைகளில் உயிர் காக்கும் அடிப்படை மருத்துவ அறிவையும் திறன்களையும் திருநங்கைகள் சமூகம் அணுகுவதை உறுதி செய்வதற்கான முயற்சியாக இந்தப் பயிற்சி இருந்தது.
பயிற்சியில் பங்கெடுத்த தோழி அமைப்பைச் சேர்ந்த காவ்யா, "மகளிர் தின விழாவையொட்டி எங்களுக்கு மாரடைப்பின்போது நோயாளிகளை எப்படிக் கையாளவேண்டும், அவர்களுக்கு எப்படிப்பட்ட முதல் உதவியை அளிக்க வேண்டும், மூச்சுத் திணறலால் அவதிப்படும் அவர்களுக்கு எப்படி சுவாசத்தைக் கொடுக்கவேண்டும் என்பது போன்ற உயிர் காக்கும் முதல் உதவி பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதோடு, விபத்துகளினால் ஏற்படும் காயம், ரத்தப்போக்கு, பக்கவாதம், விஷப் பூச்சிகள் கடி, வலிப்பு போன்ற பாதிப்புகளின்போது எதைச் செய்ய வேண்டும், எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதை விளக்கினர். முதல் உதவி சிகிச்சைத் துறையில் நீண்ட காலம் அனுபவம் கொண்டவர்களால் எங்களுக்கு வழங்கப்பட்ட இந்தப் பயிற்சி எங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையிலிருந்தது" என்றார்.
உலகில் நிகழும் பெரும்பாலான மரணங்களுக்குக் காரணமாக இருப்பது மாரடைப்பு. அந்த வகையில் மாரடைப்பு பாதிக்கப்பட்டவரை எவ்வாறு அடையாளம் காண்பது, சரியான நேரத்தில் பயனுள்ள சிபிஆர் முறையை எவ்வாறு தொடங்குவது என்பது பற்றிய முக்கிய தகவல்களை உள்ளடக்கிய இந்தப் பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்தது.
பொதுச் சமூகத்தில் திருநங்கைகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவும் ஊக்குவிக்கவும் உதவும் தளமாக இந்தப் பயிற்சி முகாம் அமைந்தது; முக்கியமாக, திருநங்கைகள் எதிர்காலத்தில் இது போன்ற படிப்புகளைப் படிப்பதற்கு ஒரு நல்வாய்ப்பையும் இது ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.