

ஐம்பது வயதுப் பெரியவர் ஒருவர் தன் கண் பார்வை சிறிதுசிறிதாகக் குறைந்துவருவதாக என்னிடம் பரிசோதனைக்கு வந்தார். அவரை பரிசோதித்ததில், அவர் கண்ணில் கண் நீர் அழுத்தம் (Intra ocular Pressure) அதிகமாகி கண் நரம்பு (Optic Nerve) பாதிப்படைந்து தொண்ணூறு சதவீதம் பார்வை பாதிக்கப்பட்டுவிட்டது தெரியவந்தது. ஏதாவது மாத்திரை சாப்பிட்டீர்களா என்று கேட்டபோது, பத்து ஆண்டுகளாகக் கால் வலிக்குச் சாப்பிட்டு வரும் மாத்திரைகளை என்னிடம் காட்டினார். அவை ஸ்டீராய்டு மாத்திரைகள்.
இன்னொரு நோயாளிக்கு 40 வயது இருக்கும். இறகுப்பந்து விளையாடும் போது தன் கண்ணில் அடிபட்டதாகவும் நான்கு நாள்களாக வேலைப்பளு காரணமாக மருந்துக் கடையில் மருந்து வாங்கி ஊற்றியதாகவும், ஆனால், வலி குறையவில்லை என்றும் என்னிடம் கூறினார். அவரை பரிசோதித்ததில், அவருடைய கண்ணில் நீர் அழுத்தம் அதிகமாகி வலி ஏற்பட்டது தெரியவந்தது. கண்ணில் அடிப்பட்டால்கூட கண் நீர் அழுத்தம் வருமா டாக்டர் என அவர் கேட்டார். ஆம் என்று பதிலளித்தேன்.
கண் நீர் அழுத்தம் என்றால் என்ன? - நம் கண்ணில் முன் அறை (Anterior chamber), பின் அறை (Posterior Chamber) என்று இரண்டு அறைகள் உண்டு. முன் அறையில் திரவ சுரப்பு (Aqueous Humor) மூலம் ஒரு திரவம் தொடர்ந்து சுரக்கும். அது அங்குள்ள டிரபெகுலார் மெஷ்ஒர்க் (Trabecular Meshwork) என்கிற வடிகால் வழியாகத் தொடர்ந்து வெளியேறும்.
இந்தத் திரவம் மூலம் கண்ணில் ஓர் அழுத்தம் இருக்கும். நம் உடலில் ரத்த அழுத்தம் 120/80 எம்.எம்.ஹெச்.ஜி. உள்ளதைப் போல் நம் கண்ணிலும் நீர் அழுத்தம் 10 எம்.எம்.ஹெச்.ஜி. முதல் 21 எம்.எம்.ஹெச்.ஜி. வரை இருக்கும்.
கண்ணுக்குள் உள்ள திரவ சுரப்பு அதிகமானாலோ அல்லது டிரபெகுலார் மெஷ்ஒர்க் வடிகால் வழியாகத் தொடர்ந்து வெளியேறுவதில் பிரச்சினை இருந்தாலோ கண்ணுக்குள் திரவ அழுத்தம் அதிகமாகி, அது கண் நரம்பை அழுத்தும். இதனால், நரம்பு தொடர்ந்து அழுத்தத்துக்கு உள்ளாகும்போது அது திரும்பச் சரிசெய்ய இயலாத அளவுக்கு நரம்பைப் பாதிக்கும்.
முதலில், இது பக்கவாட்டு பார்வையை (Peripheral Vision) பாதிக்கும். பின் சிறிதுசிறிதாகப் பார்வை நரம்பு (Optic Nerve) முழுவதையும் பாதித்து, பார்வை முழுவதும் பறிபோகும் நிலைக்கு இட்டுச்செல்லும். நமக்கே தெரியாமல் ரகசியமாகக் கண் பார்வையைத் திருடும் இந்தப் பாதிப்பு திரும்பப்பெற முடியாத ஒன்று.
அறிகுறிகள்
* கண் சிவத்தல்
* தலைவலி
* கண் வலி
* பார்க்கும்போது வண்ண வண்ண வளையங்களாகத் தெரிதல்
* திடீரென்று கண் பார்வை மங்கலாகத் தெரிதல்
* வாந்தி
யாருக்கெல்லாம் வரலாம்? - பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் கண் நீர் அழுத்த நோய் வரச் சாத்தியமுள்ளது. குறிப்பாக ஸ்டீராய்டு மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கண்ணாடி அணிந்திருப்பவர்கள், கண்ணில் ஏற்கெனவே அடிப்பட்டவர்கள், கருவிழி தடிமன் குறைவாக உள்ளவர்கள், நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளிட்டவர்களுக்குக் கண் நீர் அழுத்த நோய் வரும் சாத்தியமுள்ளது.
பிறந்த குழந்தைக்கும் கிளாகோமா பாதிப்பு வரச் சாத்தியமுள்ளது. பெரிய கண்கள், கருவிழி வெள்ளையாகக் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகக் கண் மருத்துவரை அணுக வேண்டும்.
குடும்பத்தில் கிளாகோமா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருந்தால் சம்பந்தப்பட்ட ரத்த உறவுகள் அனைவரும் கிளாகோமா பரிசோதனையை ஆண்டுக்கு ஒரு முறை செய்துகொள்ள வேண்டும். முக்கியமாக, கண்ணில் அடிபட்டவர்களின் கண்ணில் கண் நீர் அழுத்தம் அதிகமாகும் சாத்தியம் வாழ்நாள் முழுவதுமே உண்டு. எனவே, அவர்களுக்கு ஆண்டு முழுவதும் முறையான பரிசோதனை அவசியம்.
கண்டறிவதற்கான பரிசோதனைகள்
* கண் நீர் அழுத்தத்தை அளத்தல்
* கண்ணுள் நீர் வடியும் பாதையை ஆய்வுசெய்தல்
* கண்ணில் நரம்பு பாதிப்பு உள்ளதா எனக் கண்டறிதல்
* கண்ணை நேராகப் பார்க்கச் சொல்லி பக்கவாட்டு பார்வையைப் பரிசோதனை செய்தல்
* கருவிழி தடிமன் பரிசோதனை
* கண் நரம்பு ஆரம்பநிலை பாதிப்பைத் துல்லியமாகக் கணினி உதவியுடன் கண்டறியும் பரிசோதனை.
நோய்க்கான சிகிச்சை: நம் கண்ணில் நீர் அழுத்தம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டால் அதற்குக் கண் மருத்துவர்கள் கண் நரம்பின் பாதிப்பு எவ்வளவு உள்ளது என்பதைக் கண்டறியக் கண் நரம்பு ஸ்கேன் உதவும்.
பார்வை புல பரிசோதனை, அதாவது உங்கள் பக்கவாட்டு பார்வை உட்பட 360 டிகிரியில் பார்வை எப்படி உள்ளது எனப் பரிசோதனை செய்யும் கண் மருத்துவர், உங்கள் கண்ணுக்கு எவ்வளவு நீர் அழுத்தம் இருக்க வேண்டும் என முடிவுசெய்து அதற்கு சொட்டு மருந்தைக் கொடுப்பார்.
இதனை மருத்துவர் அறிவுரைப்படி வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த நேரிடலாம். அப்போது கண் நீர் அழுத்தம் சரியாக இருந்தாலும் கண் நீர் அழுத்த மருந்தை மருத்துவரின் அறிவுரை இன்றி நிறுத்தக் கூடாது.
இந்தக் கண் நீர் அழுத்த மருந்து கொடுத்தும் கண் நீர் அழுத்தம் குறையாமல் இருந்தாலோ, நரம்பு பாதிப்பு அதிகமாகக் காணப்பட்டாலோ இதனைச் சரிசெய்ய முன் அறையில் உள்ள திரவம் வெளியேற மாற்றுப்பாதை ஒன்றை அறுவை சிகிச்சையின் மூலமோ, Laser Peripheral Iridotomy எனும் லேசர் சிகிச்சையின் மூலமோ ஏற்படுத்தி கிளாகோமா நோயைச் சரிசெய்யலாம்.
கிளாகோமாவால் பார்வை பாதிக்கப் படாமல் இருக்க அனைவரும் கிளாகோமா பற்றியும் அதிலிருந்து எப்படிக் காத்துக் கொள்வது என்பது பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.
- மருத்துவர் பெ.ரங்கநாதன் | கட்டுரையாளர், கண் மருத்துவர்; drranganathansocial@gmail.com