

பெற்றோரின் பங்களிப்பே குழந்தைகளுக்கு ஆதாரம். குழந்தைகளின் பன்முக வளர்ச்சி பெற்றோரிடமிருந்துதான் பெறப்படுகிறது. குழந்தை கருவுற்றது முதல் பிறப்பு வரை 9 மாதம் குழந்தையைப் பாதுகாப்பது மட்டும் பெற்றோரின் கடமையல்ல; பிறந்தது முதல் 15 வயதுவரை அவர்களை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் நல்ல மனிதராகவும் வளர்க்க வேண்டியதும் பெற்றோர்களின் கடமையே.
இன்றைய நவீனக் காலத்தில், குழந்தைகளைக் கவனிக்கக்கூட நேரமில்லாமல் வாழ்க்கையில் அடுத்தகட்ட நகர்வுக்காக / முன்னேற்றத்திற்காகப் பல பெற்றோர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தச் சூழலில், குழந்தைகள் நலனில் பெற்றோரின் பங்கு என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன் இணைந்து வெளிப்புற விளையாட்டுகள், பாண்டி, கபடி போன்ற உடலுக்கு நலம்தரும் விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்து வளர்ந்தனர். இரவில் சீக்கிரம் தூங்கி காலையில் 6 மணிக்குள் எழுந்து படிக்கவும் குழந்தைகள் பழகியிருந்தனர். இவற்றின் காரணமாக, அந்தக் காலத்தில் குழந்தைகள் மேம்பட்ட உடல் நலத்தோடு, செழிப்பான மனநலத்தையும் பெற்றிருந்தனர்.
தனிமையின் பாதிப்புகள்: இன்று காலச் சூழலால், கூட்டுக் குடும்பங்கள் அரிதாகி, தனிக் குடும்பங்கள் அதிகரித்துவிட்டன. பெற்றோர்கள் வேலை நிமித்தம் கூட்டுக் குடும்ப வாழ்க்கையிலிருந்து விலகி நகர வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். இதனால், குழந்தைகள் தனிமையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
குழந்தைகள் அதிக நேரம் தனியாக இருக்கும் சூழல் ஏற்படுவதால், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலோ, திறன்பேசி விளையாட்டு களிலோ தங்கள் நேரத்தைச் செலவிட நேர்கிறது. இதனைப் பெற்றோர்களும் உரிய நேரத்தில் கவனிக்கத் தவறுவதால், விரைவில் குழந்தைகள் அவற்றுக்கு அடிமையாகும் சாத்தியம் ஏற்படுகிறது.
அத்துடன், பெற்றோரின் அரவணைப்பும் இன்றி, குடும்பத்தினரின் அன்பும், அறிவுரையும் இன்றி தவிப்பதால், குழந்தைகள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
சத்தான உணவே தேவை: நூடுல்ஸ், பீட்சா, கேக், பர்கர், சாக்லெட், ஐஸ்கிரீம், பானிபூரி, அசைவ துரித உணவு வகைகள், பிராய்லர் சிக்கன், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் தின்பண்டங்கள், கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள், பிஸ்கட்டுகள் போன்ற குழந்தைகளின் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய தின்பண்டங்களையே குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர்.
பெற்றோர்களும் இது போன்ற உணவுப்பொருள்களால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் வாங்கித் தருகின்றனர். இதனால் குழந்தைகளின் ஆரோக்கியம் கெட்டுச் சிறுவயதிலேயே பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.
அந்தக் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவு வகைகள் சத்தான உணவாக இருந்தன. இன்றும் அதைப் பின்பற்றுவது குழந்தைகளுக்கு மட்டுமல்ல; பெற்றோர்களுக்கும் நல்லது. உடலுக்கு ஆரோக்கியமான பொரி கடலை, நிலக்கடலை, பட்டாணி, உப்புக் கடலை, பொட்டுக் கடலை, கடலை மிட்டாய், சத்துமாவு உருண்டை, எள்ளுருண்டை போன்றவற்றைக் குழந்தைகள் உண்பதற்குப் பழக்கப்படுத்தலாம்.
முறுக்கு, அதிரசம் போன்ற தின்பண்டங்களை வீட்டிலேயே தயாரித்து குழந்தைகளுக்கு அளிக்கலாம். பனங்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, இலந்தைப்பழம், நாவல் பழம், நுங்கு போன்றவை குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
நோய் போக்கும் சித்த மருத்துவம்: இதுபோன்ற ஆரோக்கிய உணவை உறுதிப் படுத்த வேண்டும். ஒருவேளை நோய் ஏற்பட்டால் சித்த மருத்துவம் கைகொடுக்கும். வைரஸ் காய்ச்சல், சளி, இருமல், ஆஸ்துமா, தொண்டை சதை வளர்ச்சி (டான்சில்), மன அழுத்தம், தூக்கமின்மை, வயிற்றுப் போக்கு, வயிற்றுப் புண், வயிற்றுப் புழுக்கள், மலக்கட்டு, உடல் பருமன், கால்சியம் சத்துக் குறைபாடு போன்றவை குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான நோய்கள்.
இந்த நோய்களுக்குச் சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் இருக்கின்றன. தாளிசாதி சூரணம், உரை மாத்திரை, திரிபலா மாத்திரை, அமுக்கரா மாத்திரை, ஆடாதோடை மணப்பாகு, மாதுளை மணப்பாகு, பாலசஞ்சீவி மாத்திரை, நெல்லிக்காய் லேகியம் போன்றவை இவற்றில் சிறப்பான மருந்துகள்.
காயகற்ப மருந்து: அமுக்கரா சூரணம் மாத்திரை, திரிபலா சூரண மாத்திரை, நெல்லிக்காய் லேகியம் ஆகிய மூன்றும் காயகற்ப மருந்துகளாகக் கருதப்படுகின்றன. காயகற்ப மருந்து என்பது நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் வராமல் தடுக்கும் மருந்து வகைகள்.
இந்த மருந்தை மூன்று வயதுக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட்கொள்ளலாம். இவற்றைச்சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்; ஆயுளையும் நீட்டிக்கும். சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று இவற்றைப் பயன்படுத்துவது அவசியம் என்பதை இங்கே கவனத்தில்கொள்ள வேண்டும்.
இளைய தலைமுறைக்கு உணவு, உடல், பாரம்பரியப் பழக்கவழக்கங்கள், பாரம்பரிய மருத்துவம் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வையும் உறவுகள், நட்புகள் குறித்த புரிதலையும் ஏற்படுத்துவதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். அது குழந்தைகளின் நலனை மட்டுமல்லாமல்; சமூகத்தின் நலனையும் மேம்படுத்தும்.
- மருத்துவர் சா.காமராஜ் | கட்டுரையாளர்: திருச்சி மாவட்டசித்த மருத்துவ; drkaamaraaj@gmail.com