Published : 08 Jul 2014 01:31 PM
Last Updated : 08 Jul 2014 01:31 PM

எலும்புத் தேய்மானத்திற்கு அறுவை சிகிச்சை இல்லாத தீர்வு?

கடந்த 5 வருடங்களாகத் தோல் வறட்சியால் அவதியடைந்து வருகிறேன். மேலும் தோலில் வட்டவட்டமான வளையங்களும், வறட்சித்தன்மையும் உள்ளது. சில நேரங்களில் அதிகமாக அரிப்பும் உள்ளது. இதற்கு சிகிச்சை என்ன?

- சிவபாலாஜி, மின்னஞ்சல்.

தோல் வறண்டு போவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். இதற்குப் பச்சை தேங்காய் எண்ணெயைத் தோலில் தடவிவந்தால் போதுமானது. தினமும் 20 மி.லி. மஹாதிக்தக கிருதம் சாப்பிடவும்.

தற்போது பெரும்பாலோரின் சருமமானது மிகவும் வறட்சியுடன், முதுமைத் தோற்றத்தில் காணப்படுகிறது. மேலும் கடுமையான தட்பவெப்பநிலையால், சருமமானது எளிதில் வறட்சி அடைந்துவிடுகிறது. இதனால் சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் போன்றவை வெளிப்படுகின்றன. தேன் ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசர். இது சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும். பால் சரும செல்களைப் புதுப்பித்து, சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.

எனவே, இவை இரண்டையும் கலந்து சருமத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்துக் கழுவினால் சரும வறட்சியைத் தடுப்பதுடன் சருமத்தின் நிறமும் கூடும். 3 டேபிள் ஸ்பூன் கற்றாழைச் சோற்றில், 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து, நன்கு கிளறிச் சருமத்தில் தடவி வந்தால் சரும வறட்சியைத் தடுக்கலாம்.

வறட்சியான சருமம் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயில் எலுமிச்சைச் சாறு, சிறிது தேன் சேர்த்துக் கலந்து தடவிவந்தால் சருமம் புதுப்பொலிவுடன் வறட்சியின்றி இருக்கும். நெல்லிக்காயை அரைத்துப் பொடி செய்து, அதில் சிறிது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்துக்குத் தடவி 30 நிமிடம் ஊற வைத்துக் கழுவினால், உடனே முகம் பொலிவாகக் காணப்படுவதுடன் சரும செல்களும் புத்துணர்ச்சி பெறும்.

எனக்கு வயது 61. இரண்டு கால் மூட்டுகளும் தேய்மானமடைந்துவிட்டன. சரியாக நடக்க முடிவதில்லை. சாய்ந்து நடக்க வேண்டியுள்ளது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் பயமாக இருக்கிறது. வலியைக் குறைக்கவும், தேய்மானத்தைச் சீர் செய்யவும் ஆயுர்வேத முறையில் சிகிச்சை பெற ஆலோசனை வழங்க முடியுமா?

- ஆபெல், கடலூர்

உடல் எடையைத் தாங்கும் மூட்டுகளில் குருத்தெலும்பு (cartilage) தேய்மானம் அடைவது வழக்கம். வயதாகும்போது, உடல் பருமனாக உள்ளவர்களுக்கும் இது அதிகம் வரும். அதற்காக மூட்டு மாற்று சிகிச்சை பற்றி உடனடி பயம் வேண்டாம். வாதச் சமனமான (வாதத்தைக் குறைக்கின்ற) மருந்துகளை முதலில் சாப்பிட வேண்டும்.

ராஸ்னாசப்தகம் கஷாயம், மஹாராஸ்னாதி கஷாயம், திரயோதசாங்க குக்குலு, சுகுமார லேகியம் போன்றவற்றை அளவுடன் சாப்பிடலாம். பிரபஞ்சனம் குழம்பு என்ற எண்ணெயைத் தினமும் சூடாக்கித் தேய்த்து வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். கொட்டம் சுக்காதி என்ற பொடியை மூட்டில் (பற்று) பத்திடலாம். மூட்டுகளின் திசுக்களாகிய quadriceps, hamstring போன்றவற்றுக்குப் பயிற்சிகள் செய்யலாம். மூட்டில் உறை அணிந்துகொள்ளலாம். எடையைக் குறைப்பதற்கு முயற்சிகள் செய்யலாம். தங்களுடைய எக்ஸ்ரேயை அனுப்பி வைத்தால் மேற்கொண்டு விபரங்களைச் சொல்ல முடியும். அதேநேரம் சர்க்கரை, கொழுப்பு, உப்பு போன்றவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை

பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல்,
நலம் வாழ, தி இந்து,
கஸ்தூரி மையம், 124,
வாலாஜா சாலை, சென்னை - 600 002

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x