தயிர் சாதமா? பிரியாணியா?

தயிர் சாதமா? பிரியாணியா?
Updated on
1 min read

உலகம் முழுவதும் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு நோய்களின் தன்மைக்கேற்ப சில உணவுக் கட்டுப்பாடுகளை அறிவுறுத்திவருகின்றனர்.

இந்த உணவுக் கட்டுப்பாடுகளில் மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுப் பொருட்கள் நமக்குச் சுவையிலோ அல்லது வேறு வகையிலோ பிடிக்காமல் போய்விட்டால், அதற்கு இணையான அல்லது சம அளவு சத்துக்களைக் கொண்ட, நமக்குப் பிடித்த மாற்று உணவு ஏதும் இருக்காதா என்ற ஏக்கத்துடன் பிற உணவுப் பொருட்களைத் தேடத் தொடங்குகிறோம்.

உதாரணத்துக்கு மருத்துவர் தயிர் சாதம் சாப்பிடச் சொன்னால், மனது பிரியாணியின் பின்னால் செல்லும். மருத்துவர் பரிந்துரைத்த உணவுப் பொருளில் என்னென்ன சத்துக்கள் உள்ளன - நமக்குப் பிடித்த உணவுப் பொருளில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்று ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகிறோம். நம் தேடலை எளிதாக்குகிறது ஓர் இணையதளம்.

ஒப்பிட்டு அறியலாம்

இந்த இணையதளத்தில் இரண்டு காலிப் பெட்டிகள் இருக்கின்றன. ஒரு காலிப் பெட்டியில் மருத்துவர் பரிந்துரைத்த உணவுப் பொருளின் பெயரை உள்ளீடு செய்துகொள்ளலாம். அடுத்த காலிப் பெட்டியில் நமக்குப் பிடித்தமான உணவுப் பொருளை உள்ளீடு செய்யலாம்.

அதன் பிறகு கீழுள்ள ஒப்பிடு (Compare) என்னும் பெட்டியை க்ளிக் செய்தால், புதிய பக்கம் ஒன்று பார்வைக்குக் கிடைக்கிறது. இப்பக்கத்தில் நாம் உள்ளீடு செய்த இரண்டு உணவுப் பொருட்களின் சத்துப் பொருட்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் பரிமாறப்படும் அளவு (Serving) மற்றும் அந்த அளவுக்கேற்ப உணவுப் பொருளிலுள்ள கலோரிகள் (Calories), மாவுச் சத்து (Carbohydrates), கொழுப்புச் சத்து (Fat), புரதச் சத்து (Protein) போன்ற அளவுகள் நமக்குக் கிடைக்கும்.

இதன் கீழ்ப்பகுதியில் குறிப்பிட்ட உணவுப் பொருளின் வேறு சில வகைகளும் அவற்றின் கலோரி அளவும் கொடுக்கப்பட்டிருக்கும்.

உங்களுக்குப் பிடித்த இரண்டு உணவுப் பொருட்களின் சத்துக்களை ஒப்பிட்டு அறிந்துகொள்ள விரும்பினால் >http://www.twofoods.com/ என்னும் இணைய முகவரிக்குச் செல்லலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in