

நடுத்தர வயதினரிடையே மாரடைப்பால் திடீரென்று நேரும் மரணங்கள் அதிர்ச்சியளிக்கும் அளவில் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் பல பிரபலங்கள் மாரடைப்பால் மரணமடைந்தது தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
நடிகர் விவேக், புனித் ராஜ்குமார், பாடகர் கே.கே, மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.ரா.திருமகன் என நீளும் அந்த மறைவுப் பட்டியலில் சில நாட்களுக்கு முன்னர் நடிகர் மயில்சாமி இணைந்திருக்கிறார்.
மாரடைப்பால் மறைந்த இந்தப் பிரபலங்கள் எவருக்கும் மரணிக்கும் வயது கிடையாது. இறப்பதற்குச் சில நிமிடங் களுக்கு முன்பு வரை இவர்கள் அனைவரும் நம்மிடையே சகஜமாகப் புழங்கினார்கள். உயர்தர சிகிச்சையை அணுகும் வசதி வாய்ப்பு இருந்தபோதும், இவர்களுக்கு மரணம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மாரடைப்புக் குறித்தும், அதன் ஆபத்துகள் குறித்தும், அதைத் தடுக்கும் வழிகள் குறித்தும் சென்னையைச் சேர்ந்த பிரபல மருத்துவர் எம். அருணாசலம் அளிக்கும் ஆலோசனைகள்:
மாரடைப்பு என்பது என்ன? - மாரடைப்பு என்பது இதயத் தசைகளுக்கு ரத்தத்தை வழங்கும் இதயத் தமனிகளில் ஏற்படும் அடைப்பு. நம் உடலில் அபரிமிதமாகத் தேங்கும் கொழுப்பு இதயத் தமனிகளில் பாசியைப் போன்று படிவதால் அதன் பாதை சுருங்கி, ரத்தவோட்டத்தின் வேகம் வெகுவாகக் குறைகிறது.
காற்றுபட்டால்தான் ரத்தம் உறையும் என்றாலும், தமனியினுள் படிந்திருக்கும் கொழுப்பினால் ரத்தவோட்டத்தில் ஏற்படும் வேக குறைவு காரணமாகவும் தமனியில் ரத்த உறைவு ஏற்படும். இந்த ரத்த உறைவினால் ஏற்படும் அடைப்பே மாரடைப்பு எனப்படுகிறது. இத்தகைய அடைப்பின் அளவு, அதாவது ரத்த உறைவின் (clot) அளவு அதிகரிக்க, அதிகரிக்க அது மாரடைப்பின் தீவிரத்தைக் கடுமையாக்கும்.
மாரடைப்பு என்பது சிலவகை புற்றுநோய் போன்று சமாளிக்க முடியாத ஒன்றோ, மீள முடியாத ஒன்றோ அல்ல. மாரடைப்புக்கான காரணங்களை மருத்துவ அறிவியல் தெளிவாகப் பட்டியலிட்டுள்ளது. அந்தக் காரணங்களைத் தவிர்ப்பது கடினமானதும் கிடையாது. தனி மனித ஒழுக்கம், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, சத்தான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி போன்றவை இருந்தால்போதும், மாரடைப்பு ஏற்படுவதை நம்மால் தடுத்துவிட முடியும்.
அதையும் மீறி ஏற்பட்டால், உயிரிழப்பு ஏற்படாமல் தவிர்க்கும் அளவுக்கு மருத்துவ அறிவியல் வளர்ந்துள்ளது. அதற்கு மாரடைப்புக்கான அறிகுறிகளை நாம் தெரிந்துவைத்திருக்க வேண்டும்; உணரும் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் இருக்க வேண்டும்.
தீவிர மாரடைப்பு (Massive heart attack): மாரடைப்பால் ஏற்படும் மரணங்களில் பெரும்பாலானவை தீவிர மாரடைப்பால் மட்டுமே நிகழ்கின்றன. இதயத் தமனிகளில் ஏற்படும் மிகப் பெரிய அளவிலான ரத்த உறைவு தமனி வழியாக இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை முழுமையாகத் தடுக்கும்போது, இதயம் தன் செயல்பாட்டை நிறுத்திவிடும். ரத்த உறைவின் காரணமாக இதயம் முற்றிலும் செயலிழக்கும் நிலையே தீவிர மாரடைப்பு.
உடனடி தீவிர மருத்துவச் சிகிச்சை கிடைக்காவிட்டால் பாதிக்கப்பட்டவரை இது இறப்புக்கு இட்டுச் செல்லும். இங்கே கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், தீவிர மாரடைப்பு என்பது ஒரே நாளில் உருவாகக்கூடிய ஒன்றல்ல. அது அறிகுறிகளை நீண்டகாலத்துக்கு வெளிப்படுத்திக்கொண்டு இருந்திருக்கும். இன்னும் எளிதாகச் சொல்வதென்றால், தீவிர மாரடைப்பு என்பது மூன்றாவது அல்லது அதற்கு மேற்பட்ட மாரடைப்பாகவே இருக்கும். முதல் மாரடைப்பு ஏற்பட்ட உடனே உடல்நலனில் போதிய கவனம் செலுத்தியிருந்தால், நமக்கு இறப்பு ஏற்படும் சாத்தியம் மிகவும் குறைவு.
ஸ்டெண்ட்: மாரடைப்புக்கான சிகிச்சை இன்று கடினமானது அல்ல; ஆபத்தானதும் அல்ல. ஆஞ்சியோ கிராம் மூலம் இதயத் தமனிகளில் ஏற்பட்டிருக்கும் அடைப்பின் அளவை துல்லியமாகவும் எளிதாகவும் மருத்துவர்களால் அறிந்துகொள்ள முடியும். 90 சதவீதத்துக்கு மேல் அடைப்பு உள்ள தமனியே உடனடி சிகிச்சை தேவைப்படும் ஒன்றாக இருக்கும். அந்தத் தமனியின் அடைப்பை ஸ்டெண்ட் மூலம் மருத்துவர்கள் எளிதில் அகற்றிவிட முடியும்.
ஸ்டெண்ட் என்பது தமனியினுள் மெல்லிய கம்பியை நுழைத்து அதன் மூலம் அடைப்பை அகற்றும் வழிமுறை. இலகுவான அடைப்பு என்றால், ஸ்டெண்ட் மூலம் அடைப்பை உடைத்து வெளியே எடுத்துவிடுவார்கள். உடைக்க முடியாத நிலை இருந்தால், ஸ்டெண்ட் மூலம் குடை போன்ற ஸ்பிரிங் ஒன்றைத் தமனியினுள் பொருத்திவிடுவார்கள். அந்தக் குடை தமனியினுள் விரியும்போது, தமனியும் விரிந்துகொள்ளும். இதன் மூலம் அங்கே ரத்தவோட்டம் இயல்புநிலைக்குத் திரும்பும்.
ஸ்டெண்டிங் பைபாஸ்: தமனியின் அடைப்பு இக்கட்டான இடத்திலிருந்தாலோ அல்லது அங்கே ஏற்படும் ரத்த உறைவு இதயத்துக்குச் செல்லும் ரத்தவோட்டத்தைத் தடுக்கும் ஆபத்து இருந்தாலோ அப்போது ஸ்டெண்டிங் பைபாஸ் சிகிச்சை மூலம் ரத்தவோட்டம் சீராக்கப்படும்.
ஸ்டெண்டிங் பைபாஸ் சிகிச்சை என்பது நமது தொடையிலிருந்தோ, மார்பிலிருந்தோ ரத்தக்குழாயை எடுத்து தமனியின் அடைப்பைக் கடந்துசெல்லும் வழிமுறை. இந்த ரத்தக்குழாயின் ஒரு முனை தமனியின் அடைப்புக்கு முன்பாக இணைக்கப்படும்; மறுமுனை அடைப்பைத் தாண்டி பின்னால் இணைக்கப்படும்.
ஊருக்குள் நுழையாமல் பைபாஸ் சாலை வழியாகச் செல்லும் வாகனத்தைப் போல, இதயத்துக்குச் செல்லும் ரத்தம் தமனியின் அடைப்பு வழியாகச் செல்லாமல், பைபாஸ் குழாய் வழியாக அடைப்பைக் கடந்து செல்லும். இத்தகைய சிகிச்சைமுறைகளின் மூலம், அடைப்பினால் ஏற்படும் ஆபத்தை முற்றிலும் தவிர்த்துவிட முடியும். இருப்பினும், சிகிச்சைக்குப் பின்னர் புதிதாக அடைப்பு ஏற்படாமல் தடுப்பது நமது கையில்தான் உள்ளது.
புதிய அடைப்பைத் தடுப்பது அவசியம்: ஆஞ்சியோ கிராம் மூலம் எத்தனை அடைப்புகள் உள்ளன, அவை எங்கெங்கு உள்ளன என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும். இந்த அடைப்புகளில் எது மிகவும் ஆபத்தான நிலையில் (90%) உள்ளதோ அதற்கு மட்டுமே மருத்துவர் ஸ்டெண்டிங் சிகிச்சையளித்து இருப்பார். 90 சதவீதத்துக்குக் கீழ் உள்ள மற்ற அடைப்புகள் நம் தமனிகளில் அப்படியேதான் இருக்கும்.
ஸ்டெண்டிங் சிகிச்சைக்குப் பின்னர் அளவான உணவு, முறையான உடற்பயிற்சி, போதுமான தூக்கம் உள்ளிட்ட ஆரோக்கியமான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தவறினால், விரைவில் தமனிகளில் உள்ள மற்ற அடைப்புகள் வளர்ந்து 90 சதவீத அளவைத் தாண்டிவிடும். இதனால், ஏற்படும் மாரடைப்பு ஆபத்தானதாகவும் இருக்கும்.
உடல்நலனில் கவனம்: பொதுவாக, 40 வயதைத் தாண்டிவிட்டாலே, நம் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வயிற்றில் தொப்பை விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; சாப்பிடும் உணவின் அளவைக் குறைக்கத் தொடங்க வேண்டும்; தினமும் தேவையான அளவு உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்; போதுமான அளவு தூங்க வேண்டும்; எக்காரணத்தைக் கொண்டும் தூக்கத்தின் அளவைக் குறைக்கக் கூடாது. இயல்பானவர்களுக்கே இவை கட்டாயம் எனும்போது, ஸ்டெண்டிங் சிகிச்சை பெற்றவர்களுக்கு இது எவ்வளவு அவசியம் என்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
ஜப்பானியர்கள் காட்டும் வழி: ஜப்பானியர்கள் சிறுவயதிலிருந்தே முக்கால் வயிறுக்குச் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக, அவர்களின் உடலில் கொழுப்பு தங்குவதில்லை; உடல் எடை குறைகிறது; ஆயுளும் அதிகரிக்கிறது. நமது முன்னோர் பழமொழி இதற்கு ஒரு படி மேலே சென்று ‘அரை வயிறுக்குச் சாப்பிடு’ என்று சொல்கிறது.
இத்தகைய வழிமுறையைச் சிறுவயதிலிருந்து பின்பற்றவில்லை என்றாலும் குறைந்தபட்சம் 40 வயதுக்கு மேலாவது பின்பற்றத் தொடங்கலாம். சாப்பிடும் உணவின் அளவை 40 வயதுக்குப் பின்னர் குறைப்பது இதயப் பாதுகாப்பை உறுதிசெய்யக் கண்டிப்பாக உதவும்.
இருப்பினும், இதயப் பாதுகாப்பு என்பது அவ்வப்போது எடுக்கும் முயற்சிகளைப் பொறுத்துக் கிடைக்கும் ஒன்றல்ல; வாழ்நாள் முழுவதும் மேற்கொள்ளும் / பின்பற்றும் முயற்சிகளைச் சார்ந்து கிடைக்கும் உத்தரவாதம் அது. வாழ்நாள் முழுவதும் பின்பற்றப்படும் இத்தகைய நன்முயற்சிகளே நமது நலத்தை மேம்படுத்தும்; ஆயுளையும் நீட்டிக்கும்.
- தொகுப்பு: முகமது ஹுசைன்
டாக்டர் அருணாசலம் தொடர்புக்கு: minskdr92@yahoo.com