

பகல், இரவு என்கிற சுழற்சியில் பகல் உடல் உழைப்புக்கானது; இரவு மூளையின் ஓய்வுக் கானது, அதாவது தூக்கத்துக் கானது. தூக்கமே மனிதர்கள் உயிர் வாழத் தேவைப்படும் ஓய்வைக் கொடுக்கிறது. இருள் சூழ்ந்த கும்மிருட்டில் மெலடோனின் (Melatonin) என்ற வேதிப்பொருள் மூளையில் உற்பத்தியாகும். இந்த வேதிப் பொருளே தூக்கத்தைத் தூண்டுகிறது. அதுவே மூளைக்கும் உடலுக்கும் முழு ஓய்வையும் அளிக்கிறது.
தூங்குதல், விழித்தல் ஆகிய இரண்டும் சீராகச் சரியான கால அளவில் இருக்கிறதா என்பது மூளையால் தொடர்ந்து கணிக்கப்படு கிறது. இதன் மூலம் தூக்கத்தின் தேவையை பூர்த்திசெய்வதுடன், மூளை தன்னையும் செப்பனிட்டுக் கொள்கிறது. தூங்கும் நேரத் தில் உடல் உறுப்புகளும் ஓய்வுக்கேற்ற பணியைச் சீரான அளவில் செய்தபடியே ஓய்வெடுத்துக்கொள்கின்றன.
சர்கேடியன் தாளம்
உடல் உறுப்புக்கள் பகலையும் இரவையும் நுண்ணறிவால் உணர்ந்து செயல்படுவதற்கு ’சர்கேடியன் தாளம்’ (circadian rhythm) உதவுகிறது. சர்கேடியன் என்றால், ஒளி வெள்ளம் பாய்ந்த பகலையும், ஒளியற்ற இருளையும் ஆராய்ந்து, பகல், இரவை அடையாளம் கண்டு, அதற்கேற்ப தன் கடமையைத் துல்லியமாகச் செய்துமுடிக்கும் மூளையின் திறன். இதன் காரணமாகவே, மூளை ‘உயிரியல் கடிகாரம்’ (Biological Clock) எனப்படுகிறது.
தைராய்டு ஹார்மோனும், வளர்ச்சி ஹார்மோனும் இரவில் மட்டுமே சுரக்கும் தன்மை கொண்டவை. உயிரியல் கடிகாரம் அவற்றைக் கண் காணித்து, அதற்கான கட்டளையைப் பிறப்பித்து, உடலையும் மூளையையும் செயல்பட வைக்கிறது. உயிரியல் கடிகாரத்தின் இந்தச் செயல்பாட்டுக்கு மூளையின் சமிக்ஞை உதவுகிறது.
தூக்கத்தின் தேவையை அறிந்தவுடன் மூளை உடலுக்குச் சமிக்ஞை கொடுத்துவிடும். இந்த சமிக்ஞையை உதாசீனப்படுத்தி மூளையையும் உடலையும், பணிச் சுமைக்கு ஆளாக்கினால், உயிரியல் கடிகாரத்தின் செயல்பாடு சீர்கெடும். முடிவில் தூக்கமின்மை, தூக்கக் குறைவு, தூங்கு வதில் சிக்கல் போன்ற நிலைகள் உருவாகும்.
தூக்கத்தின் வகைகள்
மிதமான தூக்கம் (Non Rapid Eye Movement Sleep), ஆழ்நிலைத் தூக்கம் (Rapid Eye Movement Sleep) எனத் தூக்கம் இரண்டு வகைப்படும். 80 சதவீதம் மிதமான தூக்கமும், 20 சதவீதம் ஆழ்நிலைத் தூக்கமும் இணைந்ததே முழுமையான தூக்கம்.
20 சதவீத ஆழ்நிலைத் தூக்கத்தின்போது பிரக்ஞையற்ற நிலை ஏற்படும். இந்நிலை தூக்கத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலை. இந்த நிலையில் தூக்கத்திலிருக்கும் நபரை எளிதில் விழிப்படையச் செய்திட முடியாது. தூக்கத்தின் இந்தப் பகுதியில்தான் கனவுகள் நிகழ்கின்றன.
மனிதவள மேம்பாட்டுக் கூறுகள்
மூளையின் வளர்ச்சி செயல்பாடுகளும், அதன் இணைப்புகளின் செயல்பாடுகளும் ஆழ்நிலைத் தூக்கத்தில் புதுப்பிக்கப்படுகின்றன. மூளையில் புதிய இணைப்புகளும், உற்பத்திகளும் வலது புற, இடது புற முளைகளுக்கு இடையில் புத்தாக்கம் செய்து புதுப்பிக்கப்படுகின்றன. அதனால்தான் கனவுகள் நினைவாற்றல் மையத்தில் சேமிக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே தூக்கம் கலைந்த பின்னும் கனவுகளை நம்மால் நினைவுகூர முடிகின்றது.
கனவு வந்திருந்தால் மட்டுமே 20 சதவீத ஆழ்நிலைத் தூக்கத்தை அடைந்ததாகப் பொருள்; இல்லையென்றால், 80 சதவீத மிதமான தூக்கத்தில் மட்டுமே மனிதர்கள் தம் இரவைக் கழித்திருப்பார்கள்; தரம் வாய்ந்த 20 சதவீத ஆழ்நிலைத் தூக்கத்தைப் பெறத் தவறியிருப்பார்கள்.
ஆழ்நிலைத் தூக்கத்தில் மட்டுமே, சிந்திக்கும் திறன், நினைவாற்றல், கற்கும் திறன், கூர்நோக்குதல், கவனம், கேட்கும் திறன் ஆகிய அறிவுத்திறன்கள் ஒருங்கிணைந்து மனிதவள மேம்பாட்டுக் கூறுகளைப் பெருக்கும். இதன் காரணமாக, மென்திறன் மேம்படும்; நேர்மறை உணர்ச்சிகள் சீர்ப்படும். பகலில் அரங்கேறும் நிகழ்வுகளை, இரவில் தூக்கத்தில் ஹிப்போகேம்பஸ் (Hippocampus) என்கிற மூளையின் சேமிப்பு கிடங்கில் சேமிக்க 20 சதவீத ஆழ்நிலைத் தூக்கம் அவசியம்.
தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள்:
l உடல் சோர்வு, மனச் சோர்வு
l பசியின்மை, உடல் இளைத்தல்
l கற்கும் திறன், ஞாபக சக்தி குறைவு,
l எரிச்சல் மனநிலை
l செயல்திறன் குறைபாடு
இறுதியில், மன நோய்க்கும் தூக்கமின்மை வழிவகுக்கும். அதிகாலையில் ஏற்படும் சாலை விபத்துகளுக்கு உயிரியல் கடிகார உத்தரவை மதிக்காமல் தூக்கத்தை மீறி வாகனத்தை ஓட்டும் ஓட்டுநர்கள் முக்கியக் காரணமாக இருக்கின்றனர் என்பதி லிருந்து தூக்கமின்மையின் ஆபத்தைப் புரிந்து கொள்ளலாம்.
ஆழ்நிலைத் தூக்கம்: என்ன செய்ய வேண்டும்?
l உயிர்ச்சத்து நிறைந்த ஊட்ட உணவு
l ஆரோக்கியமான சுற்றுச்சூழல்
l நல்ல படுக்கை
l ஒளி, ஒலியற்ற படுக்கையறை
l படுக்கும்போது கைப்பேசியைத் தவிர்த்தல்
l குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்லுதல், விழித்தல்
l தூக்க உணர்வை அலட்சியப்படுத்தாமல் இருப்பது
l மூச்சுப் பயிற்சி
l தியானப் பயிற்சி
l பகலில் மேற்கொள்ளும் உடல் உழைப்பு
l நடைப் பயிற்சி
l நேர்மறை எண்ணத்தை வளர்த்தெடுப்பது
l மன அழுத்தத்தைத் தவிர்ப்பது
l பகல் நேர உறக்கத்தைக் குறைப்பது
l போதைப் பழக்கத்தை முற்றிலும் தவிர்ப்பது
l இனிமையான மெல்லிசை கேட்கும் பழக்கம்
உயிர் வாழ நமக்கு உதவும் உன்னதமான உடலியல் செயல்பாடு தூக்கம்! நம் வாழ் நாளில் மூன்றில் ஒரு பங்கு தூங்குவது உடல் நலத்தையும் மனநலத்தையும் பேண உதவும்.
கட்டுரையாளர், முதியோர் நல மருத்துவர்