

அரங்கம் நிரம்பி வழிகிறது. இருள் சூழ்ந்த மேடை. திடீரென அதன் நடுவில் ஓர் ஒளிவட்டம் தோன்றுகிறது. அதன் கீழ் நீளமான கருப்பு அங்கியும் நீண்ட தொப்பியும் அணிந்த ஒருவர் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். அவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் அப்பாவித்தனமாக அவருக்கு முன் உட்கார்ந்திருக்கிறார்.
அங்கி அணிந்தவர் ஓர் ஒளிச்சுடரை அவருக்குக் காட்டுகிறார். “இதையே உற்றுப் பார், மனதை அலைபாய விடாதே” என்று தாழ்ந்த குரலில் கட்டளையிடுகிறார். பின்னர், “என் விரலைச் சொடுக்கும்போது உன் கைகள் மரத்துப்போகும்” என்று தாழ்ந்த குரலில் கூறுகிறார். அடுத்து, “இப்போது உன் கையை உயர்த்த முடியாது... ஒன்று, இரண்டு, மூன்று, எங்கே கையை உயர்த்து பார்க்கலாம்” என்று விரலை மீண்டும் சொடுக்குகிறார்.
அமர்ந்திருந்தவர் கையை உயர்த்த எத்தனிக்கிறார். ஆனால், கையை அசைக்க முடியாமல் தடுமாறுகிறார். பார்வையாளர்கள் ஒரு கணம் வியப்பில் ஆழ்ந்துபோகிறார்கள். பின் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள். இம்மாதிரியான காட்சிகளை மேடைகளிலும், திரைப்படங்களிலும் நீங்கள் பார்த்திருக்கக்கூடும். இதுதான் ஹிப்னாடிசம் என்று பலர் நம்புகிறார்கள். இது வெறும் நாடகம் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இங்கே ‘அவர்கள்’ என்பதில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும் அடக்கம்.
உண்மை என்னவென்றால், உளவியல் கூறும் ஹிப்னாடிசம் என்பது முற்றிலும் வேறானது. ஆங்கிலத்தில் ஹிப்னாடிசம் என்றும் தமிழில் அறிதுயில் என்றும் அறியப்படும் இந்த செய்முறை, உண்மையான உளவியல் அடிப்படைகளைக் கொண்டது; நெடுங்காலமாக அறிவியல் முறைப்படி ஆராயப்பட்டது; முக்கியமாக, நூற்றுக்கணக்கான ஆய்வுகளின் வழியாக அதன் உண்மைத்தன்மை ஐயத்துக்கு இடமின்றி நிறுவப்பட்டுள்ளது.
தன்னுணர்வு: அறிதுயில் நிலை என்ன என்பதை அறிந்துகொள்வதற்கு முன்னர் தன்னுணர்வு (Consciousness) என்றால் என்ன என்று ஓரளவு தெரிந்துகொள்வது அவசியம். நம்மைப் பற்றியும் வெளி உலகைப் பற்றியும் கொண்டிருக்கும் விழிப்பு நிலையே உளவியலிலும் மருத்துவத்திலும் தன்னுணர்வு எனப்படுகிறது.
அதாவது, தற்போது நீங்கள் இதை வாசிக்கும்போது நீங்கள் இருக்கும் இடம், உங்கள் சுற்றுப்புறத்தில் உள்ளவை, இப்போதைய நேரம், இன்றைய தேதி ஆகியவற்றை அறிவீர்கள். அதேபோல பசி, தாகம், உங்கள் எண்ணங்கள், நினைவுகள், உணர்ச்சிகள் ஆகியவற்றையும் உணர்வீர்கள்.
வெளி உலகத்தைப் பற்றியும், உங்கள் அகஉலகத்தைப் பற்றியும் கொண்டுள்ள இந்த விழிப்புணர்வு நிலையே தன்னுணர்வு நிலை எனப்படுகிறது. இந்த தன்னுணர்வு நிலை முற்றாக அற்றுப்போகும்போது அது ஆழ்மயக்க நிலை (Coma) என்று அழைக்கப்படும்.
அறிதுயில் நிலை: தன்னுணர்வைப் பொறுத்தமட்டில் ஒரு தொடர் வரிசையில் ஒரு முனையில் முழுமையான தன்னுணர்வு நிலையும் மறுமுனையில் ஆழ்மயக்க நிலையும் அமைந்துள்ளன. இந்த இரண்டு மனநிலைகளுக்கும் இடையில் பல நிலைகள் உள்ளன. குடிபோதையின்போது ஏற்படும் மயக்க நிலை, பகல் கனவு காணும் நிலை, மெய் மறந்து ஒரு செயலில் ஆழ்ந்து போகும்போது ஏற்படும் உணர்வு நிலை, இசையில் ஒன்றித் தன்னிலை மறந்த மனநிலை போன்றவை இதில் அடக்கம். தன்னுணர்வைப் பொறுத்தவரை முழுமையான தன்னுணர்வு, குறைவான தன்னுணர்வு, மனமயக்கம், ஆழ்மயக்கம் போன்ற பல உணர்வுநிலைகள் உள்ளன. இம்மாதிரியான மனமயக்க நிலைகளில் ஒன்றுதான் அறிதுயில் நிலை.
கருத்தேற்றம்: அறிதுயில் நிலையில் புற உலகத்தைப் பற்றிய விழிப்புணர்வு மந்தமாகிறது. ஆனால், உணர்வுகள் முற்றாக அற்றுப்போவதில்லை, ஒருவர் சுயகட்டுப்பாட்டை இழப்பதும் இல்லை. ஆனால், அறிதுயில் நிலைக்கு ஆட்பட்ட ஒருவர் அவருக்குக் கூறப்படும் கருத்துகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய தயார் நிலையில் இருப்பார். இது கருத்தேற்றம் (Suggestibility) என்றும் அறியப்படுகிறது.
அதாவது, தன்னுணர்வு மந்தமாக இருக்கும்போது அறிதுயில் ஆழ்த்துநர் கூறும் கட்டளைகளை ஏற்று, அதன்படி நடக்க இணங்குவார்கள். எனவே, ‘உனது கை இப்போது படிப்படியாகச் செயல் இழந்துபோகும்’ என்று கூறப்பட்டால் அதை அவர் முழுமையாக நம்பிவிடுவார். இதன் விளைவாக தன் கைகள் தளர்ந்துபோவது போலவும் கையை அசைக்க முடியாதபடி விரைத்துப் போவதுபோலவும் அவருக்குத் தோன்றும்.
வழிமுறைகள்: ஒருவரை அறிதுயில் நிலைக்கு உட்படுத்த பலவகையான வழிமுறைகள் உள்ளன. இந்த செய்முறை அறிதுயிலுக்கு ஆளாக்குதல் (Hypnotic induction) என்று அழைக்கப்படுகிறது. மனதை ஒருநிலைப்படுத்தி கவனத்தை ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது மனதில் தோன்றும் ஒரு பிம்பத்தின்மீது குவியப்படுத்துவதே (focused attention) இதில் முக்கியமானது.
கவனத்தை எதன் மீது குவித்து மனதை ஒருநிலைப்படுத்துகிறோம் என்பது முக்கியமல்ல. அது ஒரு சித்திரமாகவோ, ஒரு கோட்டு வடிவமாகவோ அல்லது அறிதுயில் ஆழ்த்துநரின் கையசைவுகளாகவோ இருக்கலாம்; அல்லது மனதில் தாமாக உருவாக்கிக்கொண்ட ஒரு குறிப்பிட்ட பிம்பமாகவும் இருக்கலாம்.
உடலில் ஏற்படும் உணர்ச்சிகளில் கவனம் செலுத்தும் வழிமுறையையே இன்றைய அறிதுயில் ஆழ்த்துநர்கள் பயன்படுத்துகிறார்கள். உதாரணத்துக்கு, மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து அதை மெதுவாக வெளியே விடும்போது ஏற்படும் உணர்வை ஆழ்ந்து உணரச் சொல்லுவார்கள்.
அல்லது அவரது கை அசைவுகளைக் கூர்ந்து நோக்கி அதில் முழுக் கவனத்தையும் செலுத்துமாறு பணிப்பார்கள். மேடையில் நடத்தப்படும் அறிதுயில் நிகழ்ச்சிகளில் ஒளி வட்டங்கள், சுடர்கள் அல்லது கை அசைவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது வழக்கம்.
அடிபணிய மறுக்கும் ஆற்றல்: ஹிப்னாடிசம் மூலம் நினைத்த மாத்திரத்தில் தனக்கு முன்னால் இருக்கும் ஒருவரை அறிதுயில் ஆழ்த்துநர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்று பலர் நம்புகிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்து. அறிதுயில் நிலையில் உள்ள ஒருவர் தான் என்ன செய்கிறோம் என்பதைப் பெருமளவு அறிவார். எனவே, ஹிப்னாடிச நிலையில் அவரின் உடைகளைக் களையச் சொல்லிக் கட்டளையிட்டால் (அது அவர் விருப்பத்துக்கு மாறாக இருக்கும்பட்சத்தில்) அவர் அந்த செய்கையில் ஈடுபட மாட்டார்.
ஹிப்னாடிசம் மூலம் அறிதுயில் ஆழ்த்துநர் ஒருவர், மற்றவரை அவருடைய விருப்பத்துக்கு மாறான செயல்களில் ஈடுபட வைக்க முடியாது. அறிதுயில் நிலையின்போது, “இப்போது உன்னையறியாமலே உன் வலது கை உயரும்” என்று கட்டளையிடப்பட்டால், ஒருவரால் அதைப் புறக்கணிக்க முடியும்.
அதாவது, அந்தக் கருத்தேற்றத்துக்கு அடிபணிய மறுக்கும் ஆற்றலை அவர் இழப்பதில்லை. முக்கியமாக, சிலரை அறிதுயில் நிலைக்கு உட்படுத்த இயலாது. மக்கள்தொகையில் 25 சதவீதத்தினரை அறிதுயில் நிலைக்கு உட்படுத்த முடியாது என்று ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.
- டாக்டர் எம்.எஸ். தம்பிராஜா கட்டுரையாளர், மனநல மருத்துவர், முன்னாள் பேராசிரியர்; ibmaht@hotmail.com