

மனித உடலின் முக்கியமான உள்பாகங்களில் நாளமில்லா சுரப்பி அமைப்பும் ஒன்று. உடலின் சரியான செயல்பாடும் வளர்சிதை மாற்ற விகிதமும் இந்த அமைப்புடன் தொடர்புடைய ஹார்மோன்களால் பாதிக்கப்படுகின்றன.
தைராய்டு சுரப்பி, நாளமில்லா அமைப்பின் மிக முக்கியமான உறுப்பு என்பதால், உடலின் வளர்சிதை மாற்றம், வளர்ச்சி, மேம்பாட்டில் நேரடியான தாக்கத்தை அது ஏற்படுத்துகிறது.
பெண்களிடையே தைராய்டு: தைராய்டு கோளாறுகள் பெண்களிடம் அதிகம் காணப்படுகின்றன. பெண்களைப் பாதிக்கும் பொதுவான தைராய்டு கோளாறுகள் ஹைபோ தைராய்டிசம், ஹைபர் தைராய்டிசம் என இரண்டு வகைப்படும்:
ஹைபோ தைராய்டிசம்: ஹைபோ தைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பு செயலற்றுப் போகும் நிலை. தைராய்டு சுரப்பி போதுமான அளவு தைராய்டு ஹார்மோன் களை உற்பத்தி செய்யாவிட்டால், ஹைபோ தைராய்டிசம் ஏற்படும். வளர்சிதை மாற்றம் உட்பட உடலின் பெரும்பாலான செயல்பாடுகளை இது மெதுவாக மாற்றிவிடுகிறது.
ஹைபோ தைராய்டிசத்தின் அறிகுறிகள்: ஹைபோ தைராய்டிசத்தின் அறிகுறிகள் மெதுவாகவே அதிகரிக்கும். இதை அடையாளம் காண்பதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம். முக்கியமான அறிகுறிகள்:
# சோர்வு
# மலச்சிக்கல்
# குளிரை அதிகமாக உணரும்திறன்
# வறண்ட சருமம்
# மாதவிடாய் ஒழுங்கின்மை (பெண்களுக்கு)
# எடை அதிகரிப்பு
# வீங்கிய முகம்
# கரகரப்பான குரல்
ஹைபர் தைராய்டிசம்: உடலில் அதிக தைராய்டு சுரப்பால் தைராய்டு ஹார்மோன்களான T3 (ட்ரை அயோடோ தைரோனைன்), T4 (தைராக்ஸின்) போன்றவை அதிகமாக உற்பத்தியாவதால் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதால் உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் விரைவுபடுத்தப்படுகிறது. இதனால், உடலில் ஊட்டச்சத்துகளுக்கும், உணவுக்குமான தேவை அதிகரிக்கிறது. போதுமான அளவு உணவு உட்கொள்ளப்படாவிட்டால், அது பலவீனத் துக்கும், எடை இழப்புக்கும் வழிவகுக்கும்.
ஹைபர் தைராய்டிசத்தின் அறிகுறிகள்: அறிகுறிகளை உணர்ந்துகொண்டு ஆய்வுகள் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு ஹைபர் தைராய்டிசத்தைத் தடுக்கலாம். இதற்கான அறிகுறிகள்:
# மற்றவர்கள் வெப்பத்தை உணராதபோது சூடாகவும் அதிக வியர்வையையும் உணர்வது
# எடை இழப்பு
# வயிற்றுப்போக்கு அல்லது இயல்பைவிட அதிகமாக மலம் கழித்தல்
# இயல்பைவிடக் குறைவான அல்லது முழுமையற்ற மாதவிடாய்
# வேகமான இதயத் துடிப்பு
# படபடப்பு, பதற்றம்
# கைகளின் நடுக்கம்
தைராய்டு சுரப்பியைக் காக்கும் வழிகள்
சர்க்கரை, கொழுப்பு குறைந்த உணவு - தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாகப் பராமரிக்கக் குறைந்த அளவு சர்க்கரை கொண்ட உணவு வகைகளை உட்கொள்வது நல்லது. பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான சீஸ், வறுத்த தின்பண்டங்கள், கேக்குகள், பிஸ்கட்கள், உடனடி உணவுகள் ஆகியவை ஹைபோ தைராய்டிசத்தின் நிலையை மோசமாக்கும் என்பதால் அவை தவிர்க்கப்பட வேண்டும்.
சில காய்கறிகளைக் கட்டுப்படுத்தவும்: புரோகோலி, காலிஃபிளவர், முளைவிட்ட தானியம், டர்னிப் ஆகியவற்றை உணவில் குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்தக் காய்கறிகளைச் செரிமானம் செய்யும் நடைமுறையில் தைராய்டின் இயல்பான செயல்பாட்டிற்குத் தேவையான அயோடினைப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தைராய்டு சுரக்கும் திறன் தடுக்கப்படலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை: மன அழுத்தம் ஹைபோ தைராய்டிசத்தின் பொதுவான காரணிகளில் ஒன்று. தைராய்டு ஹார்மோன் உற்பத்தியைத் தடுக்கும் ஆற்றலை மன அழுத்தம் கொண்டுள்ளது. யோகா, தியானம் அல்லது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் பிற உடல்/மன செயல்பாடு போன்ற செயல்களில் ஈடுபடுவது நல்லது.
உடல் எடையைப் பராமரித்தல்: அதிக உடல் எடை இருந்தால் உடல் செயல்பாடுகளைப் பராமரிக்க அதிக அளவு தைராய்டு ஹார்மோன் தேவைப்படுகிறது. இது ஹைபர் தைராய்டிசத்திற்கு வழிவகுக்கும். இதேபோல், குறைந்த உடல் எடைக்குக் குறைந்த அளவு தைராய்டு ஹார்மோன் தேவைப்படுகிறது. இது ஹைபோ தைராய்டிசத்திற்கு வழிவகுக்கும். எனவே, சரியான உடல் எடையைப் பராமரிப்பது மிகமிக முக்கியம்.
பரிசோதனைகள்: குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு நபர் தனது தைராய்டு அளவை பரிசோதிப்பதற்குப் பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் பரிசோதனைகள் அவசியம் தேவை. இப்படிச் செய்வதன் மூலம் அசாதாரணங்களைக் கண்டறியலாம். நிலைமை மோசமாவதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பராமரிப்பு முக்கியம்: கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியமான கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு மருத்துவரிடம் விரிவாக ஆலோசிப்பது மிகவும் அவசியம். ஹைபர் தைராய்டிசம், ஹைபோ தைராய்டிசம் ஆகியவை கருச்சிதைவு, குறைப்பிரசவம், குழந்தையின் குறைந்த பிறப்பு எடை, கர்ப்பத்தால் தூண்டப்பட்ட உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே கருத்தரிப் பதற்கு முன் ஆரோக்கியமான தைராய்டு ஹார் மோன் அளவை பராமரிப்பது மிகமிக முக்கியம்.