

செயற்கை நுண்ணறிவு பல துறைகளில் வளர்ச்சி அடைந்துவருகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் ரோபாட்களை பேச வைப்பதில், அதிலும் பல விஷயங்களைப் பரிசீலனை செய்து பேசுவதற்குரிய ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. செயற்கை நுண்ணறிவால் செறிவூட்டப்பட்ட ரோபாட்கள் வெளிநாடுகளில் சின்னச்சின்ன வீட்டு வேலைகளைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவிலும் பெரிய உணவு விடுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு உணவினைப் பரிமாறுவதற்கு, சாலைகளில் போக்குவரத்தினை சீரமைப்பதற்கு, விமான நிலையம் போன்ற இடங்களில் பொதுமக்களுக்கு வழிகாட்ட என்று ரோபாட்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட மனிதத் தானியங்கி ரோபாட்டான ‘சோபியா’விற்கு, சவுதி அரேபிய அரசு குடியுரிமை வழங்கியது. இந்த ரோபாட், நாம் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்லும். அத்துடன் 60க்கும் மேற்பட்ட முகபாவனைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் சோபியா உருவாக்கப்பட்டுள்ளது, அதன் சிறப்பம்சம்.
ரோபாட்கள் பேசுவது அதிலும் குறிப்பாக நாம் கேட்கும் கேள்விக்குச் சிந்தித்துச் செயல்படுவது போல் பதில் சொல்வது, செயலுக்கு ஏற்றாற்போன்ற முக பாவனைகளை வெளிப்படுத்துவது போன்ற செயல்கள் அனைத்துக்கும் அடிப்படையாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உள்ளது.
இந்தச் சூழலில், கண் மருத்துவத்திலும் செயற்கை நுண்ணறிவின் தேவை உணரப்பட்டு அதற்கான ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சர்க்கரை நோயினால் கண்ணில் ஏற்படும் விழித்திரை பாதிப்பினைக் கண்டறியும் சோதனை முயற்சி தற்போது முடிவடைந்து, பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் விழித்திரையின் மூலம் மாரடைப்பைக் கண்டறிய முடியும் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
செயற்கை நுண்ணறிவு இயந்திரம்
நீரிழிவு நோய்க்கு முறையாக மருத்துவம் செய்து கொள்ளாவிடில் கண்ணின் விழித்திரை பாதிக்கப்பட்டு பார்வை கடுமையாகப் பாதிக்கப்படும். இந்த விழித்திரைப் பாதிப்பைக் கண்டறிவதற்குக் கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டுவந்தது. அந்த ஆய்வின் விளைவால் உருவான செயற்கை நுண்ணறிவு இயந்திரம் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
சர்க்கரை நோய்க்கு நிரந்தரத் தீர்வு என்கிற ஒன்றில்லை. ஆனால், சர்க்கரைநோயினால் கண்ணில் ஏற்படும் பார்வை பாதிப்பை உறுதியாகத் தடுத்துவிட முடியும். ஆனால், பார்வை பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வேண்டியது முக்கியம். அதற்குத்தான் கூகுளின் ஆய்வு உதவப்போகிறது.
அந்த ஆய்வில் விழித்திரையின் உள்பகுதி அதிநவீன கருவி மூலம் படமாக எடுக்கப்பட்டது. இயல்பான கண்ணின் விழித்திரை முதல் சர்க்கரைநோயால் பாதிக்கப்படும் விழித்திரையின் பல்வேறு நிலைகள் வரை படமாக எடுக்கப்பட்டன. இவ்வாறு உலகின் பல்வேறு கண் மருத்துவமனைகளில் எடுக்கப்பட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்ட படங்கள் கூகுள் வசம் உள்ளன.
இவை விழித்திரைப் பாதிப்பின் முக்கியக் கூறுகளான விழித்திரை நரம்பு பாதிப்பு, வீக்கம், ரத்தக்கசிவு எனப் படிப்படியாக நிலைகள் குறிக்கப்பட்டு பல்வேறு கண் மருத்துவர்களால் ஒருமுறைக்குப் பலமுறை சரிபார்க்கப்பட்டன. இவை தரவுகளாகக் கூகுளின் செயற்கை நுண்ணறிவு இயந்திரத்தின் நினைவகத்தில் சேமிக்கப்பட்டுள்ளன.
கூகுளின் செயற்கை நுண்ணறிவு இயந்திரம் இந்த தரவுகளின் அடிப்படையில் பயனர்களின் விழித்திரை பாதிப்பைக் கண்டறிந்து, வகைப்படுத்துகிறது. இதன் காரணமாக, சர்க்கரை நோயினால் கண்ணில் ஏற்படும் பாதிப்புகளின் பல்வேறு நிலைகளைக் கூகுளின் செயற்கை நுண்ணறிவு இயந்திரத்தால் மிகத் துல்லியமாகக் கண்டறிய முடியும். இந்நிலை யில்தான் விழித்திரை ரத்தக்குழாய் அமைப்பு மூலம் மாரடைப்பைக் கண்டறியலாம் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மாரடைப்பினைத் தெரிவிக்கும் புதிய ஆய்வு
மூளையாகட்டும், வயிறாகட்டும், இதயமாகட்டும் உடலின் எந்த ஒரு உறுப்பையும் ஸ்கேன் செய்து அந்த உறுப்பு இயல்பாக இருக்கிறதா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்று பார்த்து, அதற்கேற்ப சிகிச்சையளிக்க முடியும். இதைப் போன்று கண்ணின் விழித்திரையினையும் ஸ்கேன் செய்து நன்றாக இருக்கிறதா அல்லது ரத்தக் கசிவு ஏதும் இருக்கிறதா என்று ஆய்வு செய்து அதற்கேற்பவே சிகிச்சை வழங்கப்படு கிறது. ஆனால், தற்போதைய புதிய ஆய்வு இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது.
புதிய ஆய்வானது விழித்திரை ரத்தக் குழாய் அமைப்புக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளுக்கும் உள்ள தொடர்பைத் தெரிவிக்கிறது. விழித்திரையினை உள்படம் (Fundus Photo) எடுத்து செயற்கை நுண்ணறிவு மூலம் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய முடியும் என்று அந்த ஆய்வின் முடிவுகள் தெரி விக்கின்றன.
விழித்திரையினை பரிசோதிப்பதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதுடன், இதயம் பற்றிய புரிதல்களையும் மேம்படுத்திக் கொள்ளவும் முடியும் என அந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வழக்கமாகச் செய்யப்படும் கண் பரிசோதனை மூலமாகவே ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற் கான அறிகுறி இருக்கிறதா என்பதைக் கண்டறிய முடியும் என்பதால், இனி வரும் காலத்தில் கண் பரிசோதனை மூலம் மாரடைப்பின் ஆபத்தை வெகுவாக குறைக்கலாம்; உயிரிழப்பையும் தடுத்துக்கொள்ளலாம்.
- மு.வீராசாமி கட்டுரையாளர், அரசு கண் மருத்துவ உதவியாளர், மதுரை; veera.opt@gmail.com