

சமீப காலமாக ஏதோ ஒரு சூழ்நிலையில் அனைவரும் உணரக்கூடிய ஒன்றாக முதுகுவலி உள்ளது. பொதுவாக முதியவர்களை மட்டுமே பாதிக்கக்கூடியதாக இருந்துவந்த இந்த வலி, வாழ்க்கை முறை மாற்றத்தினால் இளைஞர்களும் உணரக்கூடிய வலியாக மாறியுள்ளது. முதுகுவலி பொதுவாக மேல்பகுதி, கீழ்ப்பகுதி என வலி உணரும் இடத்தை வைத்து வகைப்படுத்தப்படுகிறது.
முதுகு வலிக்கான காரணங்கள்
# அதிக எடையைத் தூக்குதல் (அ) இழுத்தல்
# உட்காரும் இருக்கை சரியான வகையில் இல்லாதிருத்தல்
# வெகுநேரம் ஒரே மாதிரியான உட்காரும் நிலை
# இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்து போதல் / இறுக்கமடைதல் / வலுவிழத்தல்
# இடுப்பு பகுதியில் உள்ள தண்டுவட எலும்புகளின் தேய்மானம்
# தண்டுவட பகுதியில் ஏற்படும் அதீத அழுத்தம்
# தண்டுவட பகுதியில் எலும்புகளுக்கு இடையே உள்ள சவ்வு விலகுதல்
# பிற காரணங்கள்: உடல்ரீதியான அமைப்பு, முதுகு தண்டுவட பாதிப்புகள், முதுகு தண்டுவட கிருமித்தொற்று, புற்றுநோய் போன்றவற்றாலும் முதுகுவலி ஏற்படக்கூடும். வயிறு, இரைப்பை, சிறுநீரகம், குடல் பிரச்சினைகளாலும் ஒரு விதமான முதுகுவலி ஏற்படும் சாத்தியம் உண்டு.
பொதுவான அறிகுறிகள்
# குனிந்து நிமிர்ந்து செய்யும் பணிகளின்போது நடுமுதுகில் ஏற்படும் வலி
# இடுப்பு பகுதியில் உள்ள தண்டுவடப் பகுதியின் நடுவேயும் அதன் இரண்டு பக்கங்களிலும் ஏற்படும் ஒருவித வலி
# இடுப்பு பிட்டங்களில் ஏற்படும் வலி
# இடுப்பு பகுதியிலிருந்து பாதம்வரை ஒரு பக்கமோ, இரண்டு பக்கக் கால்களிலுமோ இழுப்பது போன்ற உணர்வு
# இடுப்பிலும் அதனைச் சுற்றி உள்ள பகுதியிலும் ஏற்படும் மரத்துப் போனது போன்ற உணர்வு. சில சமயங்களில் கால்களிலும் மரத்துப் போனது போன்ற உணர்வு
# கால் விரல்களில், பாதங்களில் குத்துவது போன்ற வலி
# இடுப்பு, முதுகு பகுதித் தசைகள் இறுக்கமடைவது
எவ்வாறு கண்டறிவது?
# கதிரியக்கத்தின் (எக்ஸ்ரே) மூலம் இடுப்பு தண்டுவட எலும்புகளின் தேய்மானம், அதன் நிலை, வீக்கம், எலும்புகளின் தன்மை போன்றவற்றைக் கண்டறிய முடியும்
# காந்த அதிர்வு அலை வரைவின் (எம்.ஆர்.ஐ ஸ்கேன்) மூலம் நாள்பட்ட இடுப்புத் தண்டுவட எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், அதன் நடுவே உள்ள சவ்வு போன்ற பகுதியின் விலகல், அழற்சியைக் கண்டறிய முடியும்
# ரத்தப் பரிசோதனையின் மூலம் வைட்டமின் -சி, வைட்டமின் - டி அளவையும், புரதத்தின் அளவையும் கண்டறியலாம்.
சிகிச்சை
இயன்முறை மருத்துவச் சிகிச்சையில் (பிசியோதெரபி) - சில உடல் பரிசோதனைகள் மூலமும் சிறப்புப் பரிசோதனை மூலமும் முதுகு வலியின் நிலையை இயன்முறை பயிற்சியாளரால் உணரமுடியும். சில இயன்முறை மருத்துவச் சிகிச்சைகளைத் தொடர்ந்து எடுப்பதன் மூலம் ஆரம்பக்கட்ட முதுகு வலியினை முழுவதும் குணப்படுத்த இயலும். சில எளிய பயிற்சியின் மூலம் முதுகு வலியினை விரட்டவும், வராமல் தடுக்கவும் இயலும்
அடி முதுகுத் தசைகளை இழுத்து நீட்ட உதவும் பயிற்சிகள், வயிற்றுத் தசைகளை உறுதியாக்கும் பயிற்சிகளை இயன்முறை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் செய்வதன் மூலம் முதுகு வலியிலிருந்து முதுகைப் பாதுகாக்கலாம்.
பயிற்சிகள்
# கால்களை மடித்துப் பாதங்கள் தரையில் படுமாறு முதுகு பக்கமாகப் படுத்துக்கொண்டு இடுப்பு பகுதியைச் சற்று மேலே தூக்கி கீழே வைத்தல்
# கைகள் மற்றும் முழங்காலினால் குனிந்து நின்றுகொண்டு இடுப்பு பகுதியை முதுகு பகுதியோடு மேலும் கீழும் மெதுவாக அசைத்தல்
# ஒவ்வொரு பயிற்சியையும் 5 முதல் 10 தடவை செய்வதே போதுமானது. ஒவ்வொரு பயிற்சியின் நடுவேயும் சீரான இடைவெளி அவசியம். இந்தப் பயிற்சிகள் முதுகு வலி வராமல் தடுப்பதற்கு உதவும் என்றாலும், அதிகமான (அ) நாள்பட்ட முதுகு வலி இருப்பின் இயன்முறை பயிற்சியாளரின் ஆலோசனையின் பேரில் கேட்டுச் செய்வது நல்லது.
- மு.செல்வகுமார் கட்டுரையாளர், இயன்முறை பயிற்சியாளர்; sada.kark@gmail.com