

மற்ற ஆண்டுகளைப் போலவே 2016-ம் ஆண்டும் ஆரோக்கியம், உடல்நலப் பிரச்சினைகள் தொடர்பான பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்தது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை:
உயிரைப் பறித்த பணம்
நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு இழப்பு அறிவிக்கப்பட்ட பிறகு, அரசு மருத்துவமனைகளில் மட்டும் குறிப்பிட்ட காலத்துக்குப் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று அறிவிக்கப்பட்டதால் நோயாளிகளும் முதியோரும் சிகிச்சை பெற முடியாமலும், மருந்துகளை வாங்க முடியாமலும் அவதிப்பட்டனர். டிசம்பர் 2-வது வார நிலவரப்படி 82 பேருக்கும் மேற்பட்டோர் பண மதிப்பு இழப்பு விவகாரத்தால் உயிரிழந்தனர். இவர்களில் மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்டவர்களும் அடங்குவார்கள்.
மீண்டும் மர்மக் காய்ச்சல்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்த ஆண்டும் பரவலாக இருந்தது சர்ச்சைக்குள்ளானது. ‘மர்மக் காய்ச்சல்’ என்று கூறியதுடன், போதிய முன்னேற்பாட்டு வசதிகளை அரசு செய்யாதது கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது. திருச்சி, திருவள்ளூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் டெங்கு காய்ச்சலால் கடுமையாகப் பாதிக்கப் பட்டன. ஆயிரக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலுக்காகச் சிகிச்சை பெற்றனர்.
கடுமையான காசநோய்
உலக அளவில் இறப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கும் முதன்மை நோய்களில் ஒன்று காசநோய். ஹெச்.ஐ.வி., மலேரியாவைவிட அதிகமானோர் இந்த நோய்க்கு ஆண்டுதோறும் பலியாகி வருகின்றனர். உலக அளவில் காசநோயாளிகள் அதிகமுள்ள நாடு இந்தியா. இந்தியாவில் 2014-2015 ஆண்டுகளுக்கு இடையே காசநோயாளிகள் எண்ணிக்கை 6 லட்சம் அதிகரித்தது. அதேபோல, அந்த ஆண்டுகளில் காசநோயால் நாடு முழுக்க இறந்தவர்கள் எண்ணிக்கை 2.63 லட்சம் அதிகரித்தது.
ஆன்ட்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ்
ஆன்ட்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ் எனப்படும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளுக்கு நோய்க்கிருமிகள் கட்டுப்படாத தன்மை தேசிய அளவில் அதிகரித்து வருகிறது. உடல்நலக் கோளாறுகள், வைரஸ் காய்ச்சல், தொண்டை நோய்த்தொற்று, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தீவிரமற்ற நோய் நிலைகளுக்கு ஆன்ட்டிபயாட்டிக் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை மருத்துவர்கள் அதிகம் பரிந்துரைப்பதும், நோயாளிகளே ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதுமே இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம். அது மட்டுமில்லாமல் பிராய்லர் கோழி போன்ற பண்ணை உயிரினங்களை வளர்ப்பதற்கு ஆன்ட்டிபயாட்டிக் வாரியிறைக்கப்படுவதும், இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்று புதுடெல்லி அறிவியல் சுற்றுச்சூழல் மையம் குற்றஞ்சாட்டுகிறது.
பின்தொடர்தல் எனும் பாலியல் குற்றம்
மென்பொறியாளர் சுவாதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் மிகப் பெரிய சர்ச்சைக்குள்ளானது. அதேநேரம் இந்தப் பிரச்சினைக்குப் பிறகு, பெண்களை இளைஞர்கள் பின்தொடர்வது தொடர்பான பிரச்சினை கவனத்துக்கு வந்தது. இது ஒரு பாலியல் குற்றமாகவும் கருதப்பட ஆரம்பித்தது.
கொல்லும் காற்று மாசுபாடு
காற்று மாசுபாட்டால் ஏற்படும் நோய்களால் இந்தியாவில் 6.21 லட்சம் பேர் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர். இவர்களில் 39,914 குழந்தைகள். காற்று மாசுபாட்டால் அதிகம் தாக்கக்கூடிய நோய் Ischemic heart disease எனும் இதய நோய். பி.எம். 2.5 எனும் நுண்துகள் கணக்கீட்டில், உலகச் சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள பாதுகாப்பு அளவைவிட 4.4 மடங்கு அதிகக் காற்று மாசுபாட்டை சென்னை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விடாது குடிநோய்
தொடர்ந்து மது குடிப்பதாலும் குடி நோய் தாக்குவதாலும், இதய நோய், புற்றுநோய், கல்லீரல் சுருக்கம், தெரிந்தோ-தெரியாமலோ காயமடைவது, வாகனங்களை ஏற்றிச் சாலையில் போவோர்-வருவோர், வசிப்பவர்களைக் கொல்வது போன்றவை அதிகரிக்கின்றன என்று உலகச் சுகாதார நிறுவன ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற 2016-ல் குடிநோயும் மது குடிக்கும் பிரச்சினையும் தேர்தல் பிரச்சினையாகப் பரவலாக விவாதிக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ்
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. ஆம்புலன்ஸ் செல்ல முடியாத குறுகிய சாலைகள், சந்துகள், தெருக்களுக்கு எளிதாகச் செல்லவும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்கவும் வசதியாக, இந்தச் சேவை தொடங்கப்பட்டது. இதன்மூலம் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வீட்டுக்கே வந்து சிகிச்சை அளிக்கும் நடைமுறை தொடங்கியது.
குழந்தைகளைத் தாக்கிய ஜிகா
ஜிகா வைரஸ் - இந்த ஆண்டில் உலகெங்கும் பீதியுடன் உச்சரிக்கப் பட்ட நோயின் பெயராக இருந்தது. ரியோவில் ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் மாதம் நடக்க இருந்த நிலையில், பிப்ரவரி மாதம் பிரேசிலில் பரவிய ஜிகா வைரஸால் பெரும் பரபரப்பு உண்டானது. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஜிகா வைரஸ் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தை சிறிய தலையுடன் பிறக்கும் சாத்தியம் அதிகம். இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி தடைபடும். பிரேசிலில் இப்படிப் பல குழந்தைகள் பிறந்தன. ஜிகா வைரஸ் கொசுக்கள் மூலம் பரவக்கூடியது. கொசுக்களின் ராஜ்ஜியம் நடக்கும் இந்தியா, ஜிகா தாக்குதலிலிருந்து நல்ல வேளையாகத் தப்பிவிட்டது.
எபோலா பயங்கரத்துக்கு முற்றுப்புள்ளி
உடல் திரவங்கள் மூலம் ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு நேரடியாகக் கடத்தப்படும் வைரஸால் எபோலா என்ற பயங்கரமான நோய் தொற்ற ஆரம்பித்தது. இந்த நோய்த்தொற்றால் இறப்பதற்கு உள்ள வாய்ப்பு 90 சதவீதம். மேற்கு ஆப்பிரிக்காவில் லைபீரியா, கினியா, சியாரா லியோன் உள்ளிட்ட நாடுகளில் பரவிய எபோலா வைரஸால் 11,300 பேர் பலியாகினர்.
இதற்கிடையில் கினியாவில் பரிசோதிக்கப்பட்ட எபோலா தடுப்பூசி பலனளித்தது. பெரியம்மை தடுப்பூசி போடப்பட்ட வளையத் தடுப்பூசி முறையிலேயே இதற்கும் தடுப்பூசி போடப்பட்டது. ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்களுக்கு இந்தத் தடுப்பூசி போடப்பட்டது பலன் அளித்தது.