Published : 03 Dec 2016 12:13 PM
Last Updated : 03 Dec 2016 12:13 PM

கியூபா நிகழ்த்திய மருத்துவப் புரட்சி

கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடெல் காஸ்ட்ரோவின் மறைவு ஈடுகட்ட முடியாத இழப்பு என்று பலரால் கருதப்படுகிறது. அவருடைய அனைத்துச் செயல்பாடுகளும் போற்றப்படாவிட்டாலும், அனைவருக்கும் கட்டாயக் கல்வி, இலவச மருத்துவ வசதி ஆகிய இரண்டிலும் கியூபா நிகழ்த்திய மகத்தான சாதனைகளுக்கு அவர் முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார்; மிக மோசமான பொருளாதார, அரசியல் தடைகளுக்கு இடையே இந்தச் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

1868-78-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சுதந்திரப் போரில் ஸ்பெயினிடமிருந்து கியூபா விடுதலை பெற்றாலும், 1952 முதல் 1958 வரை அந்த நாடு பாதிஸ்தா ஜல்திபார் என்ற சர்வாதிகாரியின் பிடியில் சிக்கியிருந்தது. 1959 புத்தாண்டு நாளில் ஃபிடெல் காஸ்ட்ரோவின் கெரில்லா படையும், படைத் தளபதியான எர்னெஸ்டோ சே குவேராவும் பாதிஸ்தாவைத் தோற்கடித்த பிறகு, ஃபிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் தலைவரானார். படைத்தலைவரான சே குவேராவே, ஃபிடெல் காஸ்ட்ரோவின் மருத்துவப் புரட்சிக்கு வழிகோலியவர், தலைமையேற்று வழிநடத்தியவர். அடிப்படையில் மருத்துவரான சே குவேரா அர்ஜெண்டினாவில் பிறந்தவராக இருந்தாலும், கியூபாவின் வளர்ச்சிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்.

ஏழைகளுக்கு மருத்துவக் கல்வி

காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபாவின் மருத்துவத் துறை வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டபோது, சேகுவேராவின் வயது 30 தான். மருத்துவத்தின் மனிதாபிமான இலக்கையும் ஒரு நியாயமான மனித சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தையும் இணைக்க வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தனர். மருத்துவப் படிப்புச் செலவை ஏற்க வசதியுள்ள மாணவர்களுக்குப் பதிலாக ஏழ்மையான, கிராமப்புற / பழங்குடி மாணவர்கள் மருத்துவக் கல்வி பெற்றால், தங்களுடைய ஏழைச் சகோதரச் சகோதரிகளுக்குத் தயக்கமற்ற உற்சாகத்துடன் அவர்கள் உதவுவார்கள் என்று அவர்கள் இருவரும் நம்பினர். அது மட்டுமல்லாமல் தங்களுடைய சகோதரர்களிடம் தொடக்கத்திலிருந்தே ஒருமைப்பாட்டை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த உணர்வை இரண்டு புரட்சியாளர்களும் பெற்றிருந்தார்கள்.

தங்கள் நாட்டின் மருத்துவத் துறையை மிகவும் சிறப்பாக வளர்த்தெடுப்பதற்கும், தம்மைப் போன்ற இதர நாடுகளுடன் கூட்டு சேர்ந்து மக்கள் சார்ந்த உடல்நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், புதிய மருத்துவ அமைப்பைக் கட்டமைப்பதற்கும் கியூபாவுக்கு இருந்த திறன் என்பது 1959 புரட்சிக்குப் பிந்தைய ஒரு சில பத்தாண்டுகளுக்குள்தான் உருவாக்கப்பட்டது. சிறிய, ஏழ்மையான நாடான கியூபா, இந்த ஈடுபாட்டை எப்படிப் பெற முடிந்தது? அதற்கு முக்கியக் காரணம், ஃபிடெல் காஸ்ட்ரோவும் சே குவேராவும்தான். புரட்சி வென்ற பின்பு கியூபா தன்னுடைய மருத்துவர்களில் பாதி பேரை இழந்தது. ஏனென்றால், அங்கிருந்த 6,000 மருத்துவர்களில் 3,000 பேர் கியூபாவை விட்டு வேறு நாடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

உலகெங்கும் சேவை

எஞ்சியிருந்த மருத்துவர்களை ஃபிடெல் காஸ்ட்ரோவும் சே குவேராவும் இரண்டு பிரிவுகளாகப் பிரித்தனர். ஒரு பிரிவு மருத்துவர்கள் கியூபாவில் தங்கியிருந்து மருத்துவச் சேவையைச் செய்வது முதன்மை பணி. அதேநேரம் தேவைப்படும்போது, மற்ற நாடுகளில் நிகழும் இயற்கைப் பேரிடர்களின்போது, தன்னார்வத் தொண்டர்களாகச் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த மருத்துவப் பிரிவு `அமைதிப்படை’, `மருத்துவப் புரட்சி படை’ என்று அழைக்கப்பட்டது. இந்தப் பிரிவுகளில் மிக முக்கியமானது ஹென்றி ரீவ் படை. ஹென்றி ரீவ் கியூப விடுதலைப் போரின்போது (1868-78) கால்களை இழந்த நிலையிலும் குதிரையோடு உலோகப் பிணைப்பு செய்துகொண்டு தளபதியாகச் செயல்பட்டு வீர மரணம் அடைந்தவர்.

இரண்டாவது மருத்துவப் பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள், இதர நாடுகளின் ஆரம்பச் சுகாதாரச் சேவை அமைப்பை (Primary health care system) வளர்த்தெடுக்க அந்நாடுகளில் இரண்டு ஆண்டுகளுக்குத் தங்க வேண்டும். அந்த நாட்டு மருத்துவர்களோடு இணைந்து மருத்துவச் சேவையை மேற்கொள்ள வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கியூப மருத்துவர்கள், அவர்களுக்குப் பதிலாகச் செல்வார்கள்.

இப்படி ஃபிடெல் காஸ்ட்ரோ, சே குவேராவின் தீவிர முயற்சியால் 1960-ஆம் ஆண்டு தொடங்கிக் கியூபா மருத்துவம், மக்களுக்கான சுகாதாரச் சேவை, மேற்கூறப்பட்ட இரண்டு மருத்துவப் பிரிவுகள் போன்றவை தனித்தன்மையுடனும், முற்றிலும் புதிய வழிகளிலும் திட்டமிட்டு வளர்ச்சியடைந்தன. இதன் தொடர்ச்சியாகக் கியூபாவில் மட்டுமின்றி, கியூபாவின் உதவியைப் பெற்ற 36 லத்தீன் அமெரிக்க கரீபிய நாடுகளிலும் மருத்துவச் சேவை அமைப்பு நன்கு வளர்ச்சியடைந்தது. 1961-2008-க்கு இடைப்பட்ட காலத்தில் 1,85,000 மருத்துவ நிபுணர்களை உலகின் 103 நாடுகளில் சேவை செய்யக் கியூபா அனுப்பியுள்ளது. எடுத்துக்காட்டாக, வெனிசூலா மட்டும் 2004 முதல் 2010 வரை 14,000 கியூபா மருத்துவர்களையும் 20,000 மருத்துவப் பணியாளர்களையும் (Paramedical staff) பயன்படுத்திக் கொண்டுள்ளது.

வருமுன் காக்க முன்னுரிமை

1960-ம் ஆண்டுக்குப் பிறகு மருத்துவச் சேவை வழங்கப்படும் வழிமுறைகளில் ஃபிடெல் காஸ்ட்ரோ பல புரட்சிகர மாற்றங்களைக் கொண்டுவந்தார். நோயைக் குணப்படுத்துவதைவிட நோய் வராமல் தடுப்பதற்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுக்க வழியமைத்தார். இதற்காக மருத்துவக் கல்வி முறையையும், மருத்துவ மாணவர்கள் / மருத்துவர்களுக்கான பயிற்சியையும் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றினார். சமுதாய வாழ்க்கையில், குடும்ப மருத்துவ நலத்தை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை ஊக்குவித்தார். குடும்ப மருத்துவப் பிரிவுக்கு (Family Medicine) குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொடுத்தார்.

அனைத்துக் குடும்பங்களின் மருத்துவத் தேவைகளைக் கவனிக்கவும் வழிவகைகளை உருவாக்கினார். இந்தப் பணிகளில் வட்டார மனிதவளமும் தன்னார்வத் தொண்டர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். இலவச மருத்துவக் கல்வியும் மருத்துவச் சேவைகளும் `ஒருமைப்பாட்டுக்கான ஆயுதங்களாக’ காஸ்ட்ரோவால் முன்னிறுத்தப்பட்டன. இப்படிச் செய்வது சுயநலத்துக்கு எதிரான ஒருமைப்பாட்டை உருவாக்கும் போராகத் திகழும் என்று அவர் வரையறுத்தார். கியூபத் தலைநகர் ஹவானாவில் உள்ள லத்தீன் அமெரிக்க மருத்துவப் பள்ளியின் (ELAM) வரவேற்பறை சுவரில் அவருடைய இந்தக் கூற்று பொறிக்கப்பட்டுள்ளது.

முதன்மை மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கும் விருப்பத்திலிருந்து கியூபாவும் அதன் தலைவரான ஃபிடெல் காஸ்ட்ரோவும் எந்த இடத்திலும் தடுமாறவே இல்லை. என்றாலும், மிகவும் கடினமான பொருளாதாரச் சூழலில் இருந்த ஒரு வளரும் நாட்டின் வரம்புக்குள் இந்த மருத்துவ அமைப்பு வடிவமைக்கப்பட்டு, கட்டாயமாக்கப்பட வேண்டியிருந்தது. இதற்கிடையே கியூபாவின் புரட்சிகரமான மருத்துவத் திட்டங்களை முறியடிக்க அமெரிக்கா பல முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவந்தது. பொருளாதாரத் தடைகள், இதர நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்துதல், ஊடகத் தாக்கம், கியூப மருத்துவர்களைத் தன் பக்கம் இழுத்தல், உள்நாட்டு கிளர்ச்சிகள் - போராட்டங்களைத் தூண்டுதல் போன்றவை அடங்கும். இந்தத் தடைகளை ஃபிடெல் காஸ்ட்ரோ வெற்றிகரமாகச் சமாளித்தார்.

150 பேருக்கு ஒரு மருத்துவர்

“அனைவருக்கும் சுகாதாரச் சேவை என்ற இலக்கை நோக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டதில் கியூபாவைப் போன்று வேறு எந்த நாடும் நிலையாகவும் தொடர்ச்சியாகவும் செயல்படவில்லை,” என்று உலகச் சுகாதார அமைப்பின் முன்னாள் இயக்குநர் டாக்டர் ஹாஃப்டன் மாலர் கூறியிருப்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தக் கூற்றை நிரூபிப்பது போல் கியூபாவின் குழந்தை இறப்பு விகிதம் பெருமளவு குறைந்தது. மக்களின் ஆயுட்காலம் அதிகரித்தது. இதர உலக நாடுகளைவிட அதிக மருத்துவர்களைக் கியூபா உருவாக்கியுள்ளது. காஸ்ட்ரோவின் ஆட்சிக்கு முன்பு 1958-ல் கியூபாவின் 1,050 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையே இருந்தது. அதே 2009-ம் ஆண்டில் ஒவ்வொரு 150 பேருக்கும் ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் இருந்தனர். 2009-ல் மொத்தம் 74,880 மருத்துவர்கள் உருவாகி இருந்தனர்.

1984-ம் ஆண்டில் ஃபிடெல் காஸ்ட்ரோ ஆற்றிய ஓர் உரையில் 2000-ம் ஆண்டில் கியூபா 75,000 மருத்துவர்களை உருவாக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் 2009-ல் மேற்கு ஐரோப்பாவில் மக்கள்: மருத்துவர் விகிதம் 330:1 ஆகவும், அமெரிக்காவில் இந்த விகிதம் 417:1 ஆகவும் இருந்ததை நாம் கவனிக்க வேண்டும்.

குடிசையில் மருத்துவர்கள்

உலகின் எந்தப் பகுதியில் மருத்துவர்கள் இல்லையோ அங்கெல்லாம் மருத்துவச் சேவை செய்ய வேண்டும் என்பது காஸ்ட்ரோவின் கனவாக இருந்தது. கியூபாவின் அனைத்து மருத்துவப் பள்ளிகளிலும் கியூப மாணவர்களுக்கு இணையாக, வெளிநாட்டு மாணவர்களும் படித்தனர். கியூபாவின் இந்தச் சுவரற்ற பல்கலைக்கழகங்கள் மூலம் 'நடமாடும் மருத்துவர்களை' உருவாக்கும் திட்டத்திலிருந்து, சமுதாய மருத்துவத்துக்குக் கியூப அரசு கொடுத்த முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.

மருத்துவக் கல்வியைப் போலவே, மருந்துகளின் விலையை ஃபிடெல் காஸ்ட்ரோ முதலில் குறைத்தார். பின்பு படிப்படியாக அவற்றை முற்றிலும் இலவசமாக மாற்றினார். மற்றொருபுறம் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் விழிப்புணர்வு கல்வித் திட்டமும் மருத்துவக் கல்விச் சேவையும் பரவலாக்கப்பட்டது. உலகில் முதன்முதலாக மக்களின் குடிசைகளில் மருத்துவர்கள் கியூபாவில் வாழ்ந்தனர். கிராமச் சமுதாயங்களுடனும் குடும்பங்களுடனும் அவர்கள் ஒன்றாக இணைந்தனர். வீடுகளுக்கே சென்று மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றினர். 1970-ம் ஆண்டில் கியூபாவில் பல்துறை மருத்துவமனைகள் நிறுவப்பட்டன.

அதே ஆண்டில் கல்வித் துறைக்குப் பதிலாக மருத்துவக் கல்வியைக் கையாளும் பணி, மக்கள் நலவாழ்வுத் துறைக்கு மாற்றப்பட்டது. 1978-ல் உலகச் சுகாதார அமைப்பின் அல்மா-அட்டா (Alma-Ata) பிரகடனத்தின் தொலைநோக்கு மருத்துவப் பார்வையைத் தீவிரமாகச் செயல்படுத்தவும் ஃபிடெல் காஸ்ட்ரோ வழிவகை செய்தார்.

இப்படியாக மருத்துவத்தில் கியூபா நிகழ்த்திய புரட்சியை வேறு எந்த நாடும் செய்யவில்லை என்பது உலக மருத்துவத் துறையைக் கவனித்துவரும் அறிஞர்களின் கருத்தாக இருக்கிறது. உலகம் முழுவதும் கட்டாயமாகத் தன்னைத் திணித்துக்கொள்ள நினைக்கும் முட்டாள்தனம், காட்டுமிராண்டித்தனம், வலுவானவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் சட்டம் என்பனவற்றுக்கு மாறாக, இன்னொரு உலகம் சாத்தியம்தான். உண்மையில் அப்படி உலகமயமாக்கப்பட வேண்டியவை பன்னாட்டு ஒருமைப்பாடு, அமைதி, ஒற்றுமை, மக்கள் உடல்நலம், அனைவருக்கும் கல்வி, பண்பாடு போன்றவைதான் என்பதைக் கியூபா நிரூபித்தது என்றால், அதற்கு முக்கியக் காரணம் ஃபிடெல் காஸ்ட்ரோதான்.

- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற பேராசிரியர் மற்றும் அறிவியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x