

உணவே அமிர்தம் உணவே மருந்து
சி.எஸ்.தேவ்நாத், சங்கர் பதிப்பகம், தொடர்புக்கு: 044-26502086
உடல் பருமன் ஏன் ஆபத்தானது? துரித உணவை ஏன் தவிர்க்க வேண்டும்? உடம்பின் நீர்மச் சமநிலையை ஏன் பேண வேண்டும் என்பதற்கான காரணங்கள் இந்நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. முக்கிய மாக, மூளைக்கு உணவளிக்க ஏற்ற வழிகளும் முதுமையைத் தள்ளிப் போடும் வழிமுறைகளும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. உடலும் உள்ளமும் உறுதிபட வாழ தேவைப்படும் நலக் குறிப்புகள் இந்த நூலில் செறிவாக இடம்பெற்றுள்ளன.
சிக்மெண்ட் ஃப்ராய்டின் உளவியல் கோட்பாடுகள்
ரவிசுந்தரம், கருப்புப் பிரதிகள், தொடர்புக்கு: 94442 72500
உடலின் இருப்புக்கு மனமும் மனத்தின் இருப்புக்கு உடலும் எப்படி ஒத்திசைந்து பயணிக்கின்றன என்பதை விளக்கியதன் மூலம் மனித வாழ்க்கையின் ரகசியத்தை உணர்த்தியவர் சிக்மண்ட் ஃப்ராய்ட். அவரின் உளவியல் கோட்பாடுகளை உள்வாங்கிக்கொள்வது அவ்வளவு எளிதல்ல. இந்த நூலின் ஆசிரியர் அதை உள்வாங்கிக்கொண்டிருப்பது மட்டுமல்லாமல்; அந்தக் கோட்பாடுகளை எளிதாகப் புரியும் மொழியில் எடுத்தும் சொல்லியிருக்கிறார்.
உச்சி முதல் உள்ளங்கால் வரை இயற்கை மருத்துவம்
மூ.ஆ.அப்பன், பாப்புலர் பப்ளிகேஷன்ஸ், தொடர்புக்கு: +91 9787555182
நாம் உணவில் பயன்படுத்தும் மூலிகைகளின் நன்மைகள், உண்ணா நோன்பின் சிறப்புகள், பத்திய உணவின் பலன்கள், பஞ்சபூதச் சிகிச்சையின் மேன்மைகள் உள்ளிட்டவற்றை இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது. மருத்துவமுறையில் உயர்ந்த இயற்கை மருத்துவத் தத்துவங்களையும், நலவாழ்க்கை விதிகளையும் கடைப்பிடித்து வாழ வேண்டிய அவசியத்தை உணர்த்தும் விதமாக இந்த நூலை அப்பன் எழுதியிருக்கிறார்.
வயோதிகம்
ஜோ.ஜாய்ஸ் திலகம், வெளியீடு: ஆர். பாபுசேனன், +91 98415 55955
முதுமையின் தனிமை, அதை அணுக வேண்டிய முறை, நம்மை நோய்கள் அணு காமல் இருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை வாழ்வியல் பற்றி இந்நூல் விளக்கு கிறது. சிறு சிறு தலைப்புகளில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள நூல், முதியோருக்கு முக்கியத்துவம் தருவதுடன், நலமிக்க சமுதாயத்துக்கான வழிமுறையையும் தெரிவிக்கிறது.
வாழ்க்கைக் குறியீடு - மரபணுவியல் புரட்சி
மோகன் சுந்தரராஜன், நேஷனல் புக் டிரஸ்ட், 044 2825 2663
மரபணுவிய லின் வியத்தகு கண்டுபிடிப்புகளை அறிமுகப் படுத்தும் இந்நூல் 12 தலைப்புகளில் கட்டமைக் கப்பட்டு உள்ளது. மரபணுவின் அபார ஆற்றலை விளக்குவதன் மூலம் இந்நூல், வாழ்வின் புதிர் களை விடுவித்து, அறிவியலின் உண்மைகளுக்குள் நம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறது.
முதியோர் நலம்
டாக்டர் விஎஸ். நடராஜன், முதியோர் நல அறக்கட்டளை, தொடர்புக்கு: +91 81221 02173
முதுமையின் தொடக்கம், அதன் அறிகுறிகள், சந்திக்கும் நோய்கள், தூக்கத்தின் தேவை, உடற்பயிற்சியின் அவசியம் போன்றவை குறித்த கட்டுரைகள் முதுமை குறித்த அச்சத்தைக் களையும் விதமாக இந்நூலில் எழுதப்பட்டுள்ளது. இறுதி மாதவிடாய், சிறுநீர்த் தொற்று, சிறுநீர்க் கசிவு போன்றவை குறித்த கட்டுரைகள் வயதான பெண்களுக்குப் பயனளிக்கும்.
தமிழர் மருத்துவம் மருத்துவர் மைக்கேல் செயராசு உடன் ஓர் உரையாடல்
தயாளன் - ஏ. சண்முகானந்தம், உயிர் பதிப்பகம், தொடர்புக்கு: 98403 64783
உலகத் தமிழ் மருத்துவக் கழக நிறுவனர், தலைவர், மருத்துவர் பாவநாசன் மைக்கேல் செயராசுவுடனான நேர்காணல் நூலாகியுள்ளது. தாவரங்கள், மொழி, பழமொழி, மக்களின் தொன்மையான அறிவு எனப் பல தளங்களில் விரிந்திருக்கும் உரையாடல், இன்றைய காலகட்டத்துக்கு அவசியமான ஒன்று. " தாவர வளம் அதிகமா இருக்கிற இடத்துல தோன்றின மொழியில, அதிகச் சொல் வளம் இருந்திருக்கு" என்பது போன்ற கருத்துகள் அர்த்தம் பொதிந்தவையாக இருக்கின்றன.
புரட்சிகர மருத்துவர்கள்
ஸ்டீவ் புரோவர், தமிழில்: கு.வி. கிருஷ்ண மூர்த்தி, அடையாளம் வெளியீடு, தொடர்புக்கு: 04332- 273444
ஏழை மக்களுக்குப் பலனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வெனிசுலாவின் புதுமையான உடல்நலப் பராமரிப்புத் திட்டத்துக்கு கியூபா எப்படி உதவியது என்பதைத் தன் நீண்ட காலக் களப்பணியிலிருந்தும், ஆழமான ஆய்விலிருந்தும் கிடைத்த தகவல்களின் உதவியுடன் ஸ்டீவ் புரோவர் விளக்கியிருக்கிறார். வெனிசுலா மக்கள் இப்போது எவ்வாறு இருக்கிறார்கள் என்பதை விவரித்துள்ள விதம், மருத்துவத்திலும் மருத்துவப் பயிற்சியிலும் கியூபா ஏன் உலகுக்கு முன்னோடியாக விளங்குகிறது என்பதற்கான பதிலை நமக்கு உணர்த்துகிறது.
மனநல ஆற்றுப்படுத்துதல் கையேடு
தொகுப்பு: டாக்டர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன், அசிசி பதிப்பகம், தொடர்புக்கு: 04652 -224051
மனநல ஆற்றுப்படுத்துதலில் முறையான பயிற்சி, மிகுந்த அனுபவம் கொண்ட 20 உளநல ஆற்றுப்படுத்துநர்களைக்கொண்டு நடத்தப்பட்ட 100 மணிநேரப் பயிலரங்க வகுப்புகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். மனநலப் பிரச்சினைகள் ஏற்படும் விதம், அவற்றின் பாதிப்புகள், அவற்றிலிருந்து மீள்வதற்கான வழிகள், அவை ஏற்படாமல் தவிர்க்க உதவும் தடுப்பு முறைகளை இக்கையேடு விளக்குகிறது.
நடைப்பயிற்சி, எண்ணெய்க் குளியல்,
விக்ரம்குமார், நன்செய் பிரசுரம், +91 95663 31195
உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில், நடைப்பயிற்சி எவ்வளவு அத்தியாவசியமானது என்பதை ’நடைப்பயிற்சி’ நூல் உணர்த்துகிறது. எண்ணெய் தேய்த்துக் குளித்தல் தொடர்பான ஐயங்களை ’எண்ணெய்க்குளியல்’ நூல் களைகிறது. எண்ணெய்க் குளியலாலும் நடைப்பயிற்சி யாலும் விளையும் நன்மைகளை இச்சிறு நூல்களில் டாக்டர் விக்ரம்குமார் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
| ‘இந்து தமிழ் திசை’ வெளியீடு நலக் கண்ணாடி |
எந்த ஒரு தொழில்நுட்பமும் நம் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டுமே தவிர, நாம் காலங்காலமாகப் பின்பற்றும் ஆரோக்கிய வழிமுறைகளைத் தூக்கியெறிவதற்கான காரணமாக மாறிவிடக்கூடாது என்பதை இந்நூலின் மூலம் ஆசிரியர் எடுத்துரைக்கிறார். கிராம வாழ்க்கையின் மேன்மைகள், இயற்கை உணவு வகைகள், மருந்துகளுக்குள் மறைந்திருக்கும் அரசியல், குழந்தைகளையும் விட்டுவைக்காத மனஅழுத்தம் என இந்நூலின் வழியே இன்றைய காலத்தில் நாம் அவசியம் அறிய வேண்டிய உடல்நலம் சார்ந்த தகவல்களைப் பற்றி துறைவாரியாக விரிவாக எடுத்துரைத்திருக்கிறார். |
தொகுப்பு: நிஷா