

எனக்கு வயது 35. நீரிழிவோ, உயர் ரத்த அழுத்தமோ இல்லை. லாமினெக்டோமி, டைசெக்டோமி சிகிச்சைகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன் செய்துகொண்டேன். அறுவைசிகிச்சைக்குப் பிறகு எனக்கு மலச்சிக்கல், சிறுநீர் கட்டுப்பாடு இழப்பு, ஆணுறுப்பு விறைப்புத்தன்மை இல்லாமை ஆகியவற்றுடன் வயிற்றுக்குக் கீழே முழங்கால்வரை மரத்துப்போன நிலையும் காணப்பட்டது. இப்போது சிறுநீர் கட்டுப்பாடு இழப்பு இல்லை. ஆணுறுப்புப் பிரச்சினையும் பரவாயில்லை. உடலின் வலது பக்கம் மட்டும் மரத்துப்போன தன்மை காணப்படுகிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு எந்தச் சிகிச்சையையும் நான் எடுத்துக்கொள்ளவில்லை. இந்தப் பிரச்சினைகளில் இருந்து விடுபட நான் என்ன செய்ய வேண்டும்?
- விஜயராகவன், மின்னஞ்சல்
இந்த வாரக் கேள்விக்குப் பதில் அளிப்பவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் டாக்டருமான சு. முத்துச்செல்லக்குமார்:
எந்த முதுகெலும்புப் பகுதியில் உங்களுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது, எதற்காக இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது என்பது போன்ற விவரங்களை நீங்கள் கூறவில்லை.
ஆனால், உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொந்தரவுகளைப் பார்க்கும்போது கீழ் முதுகெலும்புகளுக்கு இடையிலுள்ள சவ்வுத்தட்டு பிதுங்கல் அல்லது கிழிதல் போன்ற பாதிப்பால் (lumbar disc herniation /rupture) ஏற்பட்ட கீழ் முதுகுவலியின் காரணமாகத்தான், இந்த அறுவைசிகிச்சையைச் செய்திருப்பார்கள்.
உங்களது கீழ் முதுகெலும்புகளுக்கு இடையிலுள்ள மெல்லிய சவ்வுத்தட்டும், அதனுடன் முதுகெலும்பின் சிறு பட்டை போன்ற பகுதியும் நீக்கப்பட்டு (Lumbar discectomy+ laminectomy) உங்களுக்கு முதுகெலும்பில் பிணைப்பு செய்யப்பட்டிருக்குமெனக் கருதுகிறேன். (Fusion - surgery). சில வேளைகளில், முதுகெலும்புக்கு பலம் கொடுக்க உலோகத் தண்டுகளைப் பயன்படுத்துவதும் உண்டு.
நவீனத் தொழில்நுட்பத்தில், இந்த அறுவைச் சிகிச்சை சிறப்பாகச் செய்யப்படுகிறது. 95 % பேருக்குப் பெரிதாக எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொந்தரவுகளைப் பார்க்கும் போது கீழ் முதுகெலும்புத் தண்டு, அதிலிருந்து வெளிப்படும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் (Neurologic injury) என்று தோன்றுகிறது.
பொதுவாகப் பத்தாயிரம் பேரில் ஒருவருக்கு இது போன்ற பாதிப்பு ஏற்படலாம். அதேநேரம் அந்தத் தொந்தரவுகள் குறைந்துவருவது நல்ல அறிகுறி. பாதிப்பு பெரிதாக இல்லை என்பதையே இது காட்டுகிறது.
இந்த விஷயத்தில் உங்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவரையும், நரம்பியல் நிபுணரையும் பார்த்து மருத்துவ ஆலோசனை பெறுவதே நல்லது.
‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். வாசகர்கள் தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை அனுப்பலாம். மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002 |