உயிர் வளர்த்தேனே 13: மெத்தென்று சமைக்கும் ரகசியம்

உயிர் வளர்த்தேனே 13: மெத்தென்று சமைக்கும் ரகசியம்
Updated on
2 min read

கேழ்வரகு மாவில் தோசையென்றாலே காய்ந்து போன வறட்டி ஞாபகத்துக்கு வந்து சிலரது பி.பி., சுகர் என அத்தனையையும் ஒருசேர எகிறச் செய்துவிடும். பல வீடுகளில் நோயைக் காட்டிலும் கேழ்வரகு தோசையே பெரும் தண்டனையாகி விடும்.

அப்படிப்பட்டவர்கள் கவனிக்க வேண்டிய எளிய உத்தி ஒரு பிடியளவு வெள்ளை உளுந்தென்றால் இரண்டு மணி நேரம், கூடுதல் சத்தை வழங்கும் கறுப்பு உளுந்தென்றால் நான்கு மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸி சின்ன ஜாரில் இட்டு வெண்ணெயாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் உலர் கேழ்வரகு மாவை தோசைப் பதத்துக்குக் கரைத்து, புளிப்பதற்குச் சிறிதளவு மோர் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிட்டு வார்த்தால் தோசை, `ஜம்’மென்றும் மெத்தென்றும் இருக்கும்.

அதில் விழும் புள்ளிகளே கோலத்துக்கு வைத்த புள்ளிகளைப் போல ‘அம்புட்டு’ அழகாகக் கண்ணைக் கவரும். சட்னி, பொடி எனத் தொட்டுக்க எதுவுமே தேவைப்படாமல், அப்படியே சாப்பிடத் தோன்றும்.

நேரமில்லையென்றால்?

சரி, உளுந்தை ஊற வைப்பதற்கு அவகாசம் இல்லை. `அப்ப என்ன செய்றது, அப்ப என்ன செய்றது?’ ஒன்றும் பிரச்சினை இல்லை. அரை வாழைப் பழத்தையும் அரை மூடித் தேங்காயையும் மிக்ஸி ஜாரில் இட்டு அரைக்க வேண்டியது. இதைக் கேழ்வரகு மாவில் தோசைப் பதத்துக்குக் கலந்து ஊற்றினால் இதுவும் காலைச் சூரியனைப் போல உப்பி எழும்.

கேழ்வரகுப் பலகாரத்தை மெத்தென்று சமைத்தால்தான் சுவை என்ற அடிப்படையைப் புரிந்துகொண்டால், நம்மால் விதவிதமாக அசத்திவிட முடியும்.

தமிழகத்தின் பாரம்பரியமான கேழ்வரகு ரொட்டி, நமக்குத் தெரியும். நாலு சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் பாதி, கறிவேப்பிலைத் தழையைக் கிள்ளிப்போட்டு அல்லது முருங்கை இலையைப் போட்டுப் பிசைந்து தட்டி, தோசைக் கல்லில் சுட்டு எடுப்பார்கள். சடுதியில் தயாராகும் இதைக் காட்டிலும் விரைவான சத்தான உணவை, ஒரு ராக்கெட் பிடித்துத் தேடினாலும் கண்டடைய முடியாது.

இன்னும் எத்தனை நாளைக்கு?

நம் காலத்துக்கேற்ற விரைவு உணவான இந்த ரொட்டி, இன்று அபூர்வமாகி விட்டதற்குக் காரணம் அது மெல்லுவதற்குக் கடினமாக இருப்பதுதான். பல்லால் கடித்து மெல்லும் பழக்கம் அரிதாகிக்கொண்டு வருகிறது. பட்டாணிக் கடையைக் கடக்கும் போதெல்லாம் “இன்னும் எத்தனை நாட்களுக்கு இது நீடிக்கும்” எனும் வலி மிகுந்த கேள்வி, எனக்குள் எழுவது உண்டு.

மெல்லுகிறபோது பல்லும் தாடையும் வலிமையடையும். பல்லும் தாடையும் வலிமையடைந்தால் முகம் பொலிவு பெறும் என்ற எளிய ரகசியம் நமக்குப் புரியவில்லை. முகப் பொலிவில் அக்கறை காட்டுவோர் உணவை நன்றாக அரைத்து உண்ணும் பழக்கத் தைக் கைகொண்டாலே போதும்.

நம் காலத்துப் பிள்ளைகள் கோபத்தில் பற்களை நறநறக்கிறார்கள். அதற்குப் பதிலாக உணவுப் பொருட்களை மென்று உண்பதைப் பழக்கினால், அது பல வகைகளிலும் பலன் தரும்.

மென்மை ரகசியம்

மென்று உண்ணுதலே சிறந்தது. மெல்லுவதற்குச் சோம்பிக் கேழ்வரகை மறந்துவிட வேண்டாம் என்பதற்காகக் கேழ்வரகு ரொட்டியை மெத்தென்று சமைக்கும் முறையைத் தெரிந்துகொள்வோம். கேழ்வரகு ரொட்டிக்குச் சேர்க்கும் வழக்கமான மூலப் பொருட்களுடன் தேங்காய்ப் பூவையும், வெண்ணெயையும் சேர்த்துப் பிசைந்து தட்டி போட்டால் ரொட்டி மெத்தென்றும் இருக்கும், பிள்ளைகளின் கண்களுக்குக் கவர்ச்சியான நிறத்திலும் இருக்கும்.

நிறமி என்ன செய்யும்?

உணவுப் பொருள் எப்போதும் கவருகிற நிறத்தில் இருக்க வேண்டும்தான். ஆனால், அது உணவின் மூலப் பண்பைச் சிதைக்காத, இயற்கையான கவர்ச்சியாக இருக்க வேண்டும். மாறாகச் செயற்கை நிறமிகளைச் சேர்த்தால் அவை உள்ளுறுப்புகளைச் சிதைப்பது மட்டுமல்லாமல், நம்முடைய தோலின் நிறத்தையும் சிதைத்துவிடும். தற்காலத்தில் தோல் தொடர்பான நோய்கள் பெருகி வருவதற்கு உணவில் செயற்கை நிறமிகள் பயன்பாடு அதிகரிப்பதும் ஒரு முக்கியமான காரணி.

வணிக உணவில் சேர்ப்பது போக, நிறமிகளின் ஆபத்தை உணராமல் இப்போது பலர் வீட்டுச் சமையலிலும் செயற்கை நிறமிகளைத் தாராளமாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். தேங்காய்ப்பால் அல்லது பசும்பால் ஆகிய இரண்டையும் எந்த உணவுடன் சேர்த்துச் சமைத்தாலும், அந்த உணவுப் பண்டம் கவர்ச்சியான நிறத்தைப் பெற்று விடும். சுவையையும் இதமாக மாற்றி தரும். சரி, கேழ்வரகுக் கதைக்கு வருவோம்.

புட்டை மீட்போம்

கேழ்வரகுப் புட்டு வீட்டுச் சமையல் பட்டியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டு விட்டது. கேழ்வரகு மாவில் இளஞ்சூட்டிலான வெந்நீர் தெளித்து, தேங்காய்ப் பூவைத் தூவி, கொஞ்சமாக வெண்ணெயை உருக்கி ஊற்றிப் பிசறிவிட்டு ஆவியில் வேக வைத்து எடுத்தால், புதிய 2000 ரூபாய் நோட்டைப் போன்ற சிவப்பு நிறத்தில் கமகமவென்ற மணத்துடன் ஆவி பறக்கும் கேழ்வரகுப் புட்டு தயாராகிவிடும்.

கேழ்வரகுப் புட்டை அவ்வப்போது உண்டுவந்தால், வயிற்றிலும் குடலிலும் படித்துள்ள கசடுகளின் ஊடுபாவு நீங்கி, செரிமானத் திறன் அதிகரிக்கும்.

ஒரே விதமான கிரீஸ் போன்ற கொசகொசத்த மாவுப்பண்டங்களில் இருந்து, நமது வயிற்றுக்கும் குடலுக்கும் சற்றே ஓய்வு தரவில்லை என்றால், அவை விரைவில் சோர்ந்துபோகும். செரிமான மண்டலத்தில் ஏற்படும் கேடுதான் அனைத்து நோய்களுக்கும் அச்சாரமாகி விடுகிறது. உணவுப் பொருட்களின் மூலப் பண்பு நஞ்சாகிவிட்ட இந்தக் காலத்தில், உணவுத் தயாரிப்பு முறையிலும் உணவுப் பழக்கத்திலும் மிகப்பெரிய மாற்றங்களை அவசரமாகக் கொண்டுவர வேண்டியிருக்கிறது.

கம்பு, சோளம், தினை, குதிரைவாலி போன்ற தானியங்களில் விரைவான ஆரோக்கிய உணவு வகைகளைச் சமைப்பது எப்படி என்பதை அடுத்த வாரங்களில் பார்ப்போம்.

(அடுத்த வாரம்: கம்பு, சோளம், தினை தின்பண்டங்கள்)
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்தொடர்புக்கு: kavipoppu@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in