

நவீன வாழ்க்கையில் அன்றாடம் உண்ணும் உணவிலும், உபயோகிக்கும் பொருட்களிலும் வேதிப்பொருட்கள் கலந்திருக்கச் சாத்தியமுள்ளன. நீர், காற்று, ஆரோக்கியம் - அழகு சாதனப்பொருட்களில் உள்ள வேதிக்கலவைகள் கருவுறுதலைப் பல வழிகளில் பாதிக்கின்றன, அவை நீண்ட காலத்தில் ஒரு பெண்ணுக்குத் தீங்கு விளைவிக்கலாம்.
நாளமில்லா சுரப்பு நீர்களை (எண்டோ கிரைன்) சீர்குலைக்கும் குறிப்பிட்ட சில வேதிப்பொருள்கள் (EDCs) குழந்தையின் நீண்டகால ஆரோக்கியம், இனப்பெருக்க செல்கள், கருவின் தரம், கருத்தரிக்கும் வாய்ப்பு போன்றவற்றைப் பாதிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெண்ணுக்குத் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள், அவற்றைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து நாம் அறிந்து கொள்வது இன்றைய காலத்தின் தேவை.
பாதரசம்: மின்கலன்கள் முதல் ஃபுளோரசன்ட் விளக்குகள் வரை பாதரசம் பயன்படுத்தப் படுகிறது. கடுமையான மலட்டுத்தன்மை, கருச்சிதைவு ஆகியவற்றுடன் பாதரசம் தொடர்புடையது. கடலிலும், நிலத்தடியிலும், நிலத்தடி நீரிலும் பாதரசம் கலந்திருப்பதால், அன்றாட வாழ்க்கை நடைமுறைகளில் அதிக நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது. நீர் மாசுபடுவதால், மீன்கள் அதிக அளவு பாதரசத்தை உட்கொள்வதற்கு வாய்ப்புள்ளது. மீன்கள் வழியாக மனிதர்களுக்கும் பாதரசம் கடத்தப்படும்.
எப்படித் தவிர்க்கலாம்? - குறைந்த அளவிலான VOC (எளிதில் தீப்பற்றக்கூடிய கரிம வேதிப்பொருட்கள்) கொண்ட வண்ணப்பூச்சு, கரைப்பான்களைப் பயன்படுத்துவது, உடலில் பாதரசம் கிரகிக்கப்படுவதைக் குறைக்க உதவும்.
பிஸ்பீனால்-ஏ (BPA) - பிஸ்பீனால் ஏ என்பது நாளமில்லாச் சுரப்பியைச் சீர்குலைக்கும் வேதிப்பொருள். இது ஹார்மோன் உற்பத்திக்கு இடையூறு விளைவிக்கும். சினை முட்டைகள் முதிர்ச்சி யடைவதையும் சரியாக வெளியிடுவதையும் தடுக்கும். பிஸ்பீனால் ஏவின் வெளிப்பாடு முதிர்ந்த முட்டைகளில் வளர்ச்சிக் குறைபாட்டை ஏற்படுத்தலாம், இதன் விளைவாகக் கருச்சிதைவு அல்லது பிறப்பு குறைபாடுகள் ஏற்படலாம். அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் ஞெகிழி பொருட்களில் இந்த வேதிப்பொருள்கள் இருக்கச் சாத்தியமுள்ளது.
எப்படித் தவிர்க்கலாம்? - நாளமில்லா சுரப்பி நீர்களைச் சீர்குலைக்கும் வேதிப்பொருட்கள் உணவில் கசிவதைத் தடுக்க பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், வீடுகளில் பிஸ்பீனால் ஏ உள்ள ஞெகிழி பயன்பாட்டைக் குறைக்கவும், ஞெகிழிக் கலன்களில் வைத்து மைக்ரோவேவில் உணவைச் சூடுபடுத்துவதைத் தவிர்க்கவும்.
பெர்ஃபுளூரோஆல்கைல் அமிலங்கள்: இந்த அமிலங்கள் டெப்லான் பாத்திரங்கள், நான்-ஸ்டிக் பொருட்களில் உள்ளன. இந்த நான்-ஸ்டிக் பாத்திரங்களின் மேற்புறம் சிதைவது, உடைவது, உரியும்போது இந்த அமிலம் உணவுடன் சேர்கிறது. இது சேர்ந்த உணவை உட்கொள்வதால் பெண்களுக்கு இனப்பெருக்க பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியங்கள் அதிகரிக்கும்.
எப்படித் தவிர்க்கலாம்? - பழைய நான்-ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது, நான்-ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது, உணவகங்கள் - துரித உணவகங்களில் உணவை உட்கொள்வதைக் குறைத்துக்கொள்வது நல்லது.
அழகுசாதனப் பொருள்கள்: மருந்துப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்களில் பாரபென்ஸ் எனப்படும் வேதிக்கலவை உள்ளது. இந்த அமிலம் குழந்தையின் எடை ஏற்றத்தைப் பாதிக்கும், உடலில் உள்ள ஹார்மோன்களைச் சீர்குலைக்கும். கருவுறுதலைப் பாதித்து பிறவிக் குறைபாடுகளையும் ஏற்படுத்தலாம், இந்த வேதிக்கலவை பெண்களின் தைராய்டு ஹார்மோன் அளவையும் பாதிக்கலாம்.
ஒரு பொருளின் தயாரிப்பில் பயன்படுத்தப் பட்டுள்ள வேதிப்பொருள்களைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வதன் மூலம் பாராபென் கொண்ட தயாரிப்புகளைத் தவிர்க்கலாம்.
பசுமை மாற்றுப் பொருள்கள்: சோப்பு, கை சுத்திகரிப்பான், துப்புரவுக்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு வீட்டுப் பொருட்களில் பெண் களின் ஹார்மோன்களைப் பாதிக்கும் வேதிப்பொருட்கள் உள்ளன. சில பசைகள், வண்ணப்பூச்சுகளில் தீங்கு விளைவிக்கும் நாளமில்லா சுரப்பி நீர்களைத் தொந்தரவு செய்யும் வேதிப்பொருட்கள் உள்ளன. அவற்றைக் குறைத்துக்கொள்வதன் மூலமோ, அவற்றுக்குப் பதிலாக வேறு பொருட்களை மாற்றுவதன் மூலமோ மட்டுமே தவிர்க்க முடியும். வினிகர், பேக்கிங் சோடா போன்ற அடிப்படை துப்புரவுப் பொருட்களையும், மேற்கண்ட வேதிப்பொருள்கள் இல்லாத தயாரிப்புகளையும் பயன்படுத்த முயல வேண்டும்.
வேதிப்பொருள்கள் உடலுக்குள் செல்வதைத் தடுக்க அடிக்கடி கைகளைக் கழுவுதல், குறைந்தபட்ச பேக்கேஜிங்குடன் வரும் பதப்படுத்தப்படாத உணவைத் தேர்ந்தெடுப்பது, இயற்கைப் பொருட்களுக்கு மாற்றுவது, பொருட்களைக் கழுவுதல் அல்லது பூச்சிக்கொல்லி மாசுபாடு உடலுக்குள் செல்வதைத் தடுக்க காய்கறி, பழங்களின் தோலை அகற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். கூடுதல் வாசனைத் திரவியங்கள் இல்லாத பொருட்களைத் தேர்ந்தெடுப்பது, ஞெகிழி கொள்கலன்களில் உணவைச் சேமிப்பதைத் தவிர்ப்பது, கண்ணாடி அல்லது துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்களில் உணவைச் சேமிப்பது போன்றவையும் உதவும். இவற்றைக் கவனமாகச் செய்துவந்தால் கருவுறுதலுக்குத் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம். - கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்