பெருமூளை வாத சிகிச்சைக்கு உதவும் சித்த மருத்துவம்

பெருமூளை வாத சிகிச்சைக்கு உதவும் சித்த மருத்துவம்
Updated on
2 min read

பெருமூளை வாதம் (Cerebral palsy) / சிரக்கம்ப வாதம் என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் வாத நோய்களில் ஒன்று. இது பிறந்த பின்பு ஏற்படும் குறைபாடு அல்ல. குழந்தை கருவில் இருக்கும்போதே தோன்றலாம் அல்லது மகப்பேற்றின்போதே ஏற்படலாம்.

பெருமூளை வாத நோயால் பாதிக்கப் பட்ட குழந்தையை எளிதாகக் கண்டறிய முடியும். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் வழங்கப்படும் தாய்ப்பால் புகட்டலிலிருந்தே இதை அடையாளம் காணலாம். பாதிக்கப்பட்ட குழந்தையால் இயல்பான குழந்தையைப்போலத் தாய்ப் பாலை உறிஞ்சிக் குடிக்க முடியாது. இரண்டாவது மாதத்தில் தொடங்கும் முகம் பார்த்துச் சிரிப்பது, கழுத்து நிற்பது போன்ற குழந்தை களின் வளர்ச்சி மைல்கற்களும் தாமதப்படும்.

பெருமூளை வாத நிலையை வேறுபடுத்தி அறிவதும், குழந்தைக்கு முறையான மருத்துவச் சிகிச்சை கொடுப்பதும் பாதிக்கப்பட்ட குழந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இந்த பாதிப்புக்கான சிகிச்சைக்குச் சித்த மருத்துவம் பலன் அளிக்கிறது.

காரணங்கள்

# தாய் கருவுற்று இருக்கும்போது மரபணுக்களில் ஏற்படும் மாறுபாடு

# போதிய ஊட்டச்சத்து இன்மை

# தாய்க்கு ஏற்படும் சில நோய்த் தொற்றுகள்

# குழந்தைக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமை

# குறைப் பிரசவம்

# குழந்தையின் எடை இயல்பை விடக் குறைந்த அளவில் இருத்தல்

இவை பரவலான காரணங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இருப்பினும், சித்த மருத்துவம் உணவையும் செயலையும் மட்டுமே பெருமூளை வாதத்துக்கான காரணம் எனக் கூறுகிறது.

தவிர்க்க உதவும் வழிகள்: குழந்தை கருவுறுதலுக்கு முன்பே தம்பதியருக்குக் குறைபாடு இல்லாத குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கான அறிவுரைகளைச் சித்த மருத்துவம் வழங்குகிறது. ‘பாவன பஞ்சாங்குல தைலம்’ எனும் மருந்து தாயின் வயிற்றில் ஏற்படும் கர்ப்பச் சூட்டைக் குறைத்து எந்தவிதமான குறைபாடும் அற்ற மகப்பேற்றுக்கு உதவுகிறது.

பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் போதிய ஊட்டச்சத்தும் ஓய்வும் வழங்க வேண்டும். முறையான மருத்துவப் பரிசோதனை, தகுந்த இடத்தில் மகப்பேறு எய்துதல் போன்றவைப் பாதிப்பு வராமல் தடுக்க உதவும். ஒருவேளை இந்நோயினால் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு உரியக் காலத்தில் சரியான சிகிச்சை மேற்கொள்வதற்கான சாதகமான சூழலையும் அவை அமைத்துக்கொடுக்கும்.

சிகிச்சை: உலகளவில் 1,000 குழந்தைகளில் இரண்டு குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய குழந்தைகள் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அவர்களுக்கு எத்தகைய சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதைக் கணிப்பதே சிகிச்சையின் முதல் படி.

இத்தகைய குழந்தைக்கு என்றே ஊட்டச் சத்து உள்ள உணவினை தேர்ந்தெடுத்து வழங்க வேண்டும். தாமதப்பட்ட வளர்ச்சி மைல்கற்களை அடைவதற்கான பயிற்சி அவர்களுக்குத் தேவைப்படும். பேச்சுப் பயிற்சி, கண், காதுகளின் செயல்படு திறனில் உள்ள கோளாறுகளைச் சரிசெய்தல் போன்ற வற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மருத்துவச் சிகிச்சையை அவர்களுக்கு வழங்க வேண்டும். முக்கியமாக, வீட்டுச்சூழலால் குழந்தை பாதிக்கப்படாத வகையில் உகந்த சூழ்நிலையைப் பெற்றோரும் குடும்ப உறுப்பினர்களும் ஏற்படுத்தித் தர வேண்டும்.

கைகொடுக்கும் சித்த மருத்துவம்: குழந்தை பிறப்பதற்கு முன் நோயின்றி பிறக்க ஆலோசனை சொல்வதுபோல, குறைபாடு ஏற்பட்டுள்ள குழந்தையைச் சீராக்கவும் சித்த மருத்துவம் பல வழிமுறை களைப் பரிந்துரைக்கிறது.

# பஞ்சமுட்டிக் கஞ்சி - உடல் நலிவடைந்த குழந்தைக்கு ஊட்டமளிக்கும்

# புற மருத்துவ முறைகள் - தொக்கணம், தப்பளம், பொடிதிமிர்தல், ஒற்றடம் போன்ற புற மருத்துவ முறைகள் வளர்ச்சி மைல் கற்கள் தாமதம் ஏற்பட்டுள்ள குழந்தைக்கு, அவற்றை அடையும் பொருட்டு தசைகளின் விறைப்பு தன்மையைக் குறைக்கும்.

# உள் மருந்துகள் - நெய் மருந்துகள், பற்ப மருந்துகள் போன்ற உள் மருந்துகள் மூளைத்திசுக்களில் செயல்பட்டு மூளையின் குறைபாட்டை மட்டுப்படுத்த உதவும்.

# தைல மருத்துகள் - பேச்சு பயிற்சியுடன் சேர்த்து தைல மருத்துகளைக் கொடுப்பது, குழந்தைகளுக்குப் பேசுவதில் ஏற்பட்ட சிரமத்தைப் போக்க உதவும்

# வர்ம மருத்துவம் - பிரத்யேகமான வர்ம சிகிச்சை குழந்தையின் வளர்ச்சி மைல்கற்களின் தாமதத்தைச் சரிசெய்வதில் முக்கிய பங்காற்றும்.

மேலே கூறப்பட்டுள்ள மருத்துவ முறைகளின் மூலம் குழந்தையை முழுவதுமாக குணப்படுத்த முடியாது என்றாலும், குழந்தையின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்தை அடைவதற்கு அவை உதவும். இதன் மூலம், இயல்பான குழந்தையைப் போல தங்களுக்கு வேண்டிய செயல்களை சுயமாக நிறைவேற்றிக் கொள்ளும் திறனை அவர்கள் பெறுவார்கள். பாதிக்கப்பட்ட குழந்தைகளை மேலும் சிரமப்படுத்தாத வகையிலான தீர்வை சித்த மருத்துவம் அளிக்கிறது.

அறிகுறிகள்:

# குழந்தையின் உடல் முழுவதும் ஏற்படும் பாதிப்பு
# ஒரு கால் (அ) இரு கால்களும் (அ) வலது /இடது என ஒருபகுதி முழுவதும் செயல்படுத்த முடியாமை அல்லது செயல்படுத்துவதில் சிரமம் ஏற்படுதல்
# கை, கால்களில் உள்ள தசைகளை விறைப்பாக வைத்திருத்தல்,
# படுத்திருக்கும்போதும் நடக்கும்போதும் கத்தரிக்கோல் போலப் பின்னலாகவே கால்களை வைத்தல்
# பேசுவதில் சிரமம்
# உணவை மென்று உண்பதில் சிரமம்
# வாயிலிருந்து உமிழ்நீர் வடிந்துகொண்டே இருத்தல்
# கண், காதுகளின் செயல்படுதிறன் பாதிப்பு
# சில குழந்தைகளுக்கு வலிப்பும் ஏற்படலாம்

பெருமூளை வாதம் அனைவருக்கும் ஒரே விதமான அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் அது வேறுபடும். பொதுவாக, இயல்பான குழந்தையைவிட வளர்ச்சியில் நலிவடைந்தவராகவே அவர்கள் இருப்பர். இதன் காரணமாக, ஒரு செயலை கற்றுக்கொள்ளவும், மற்றவருடன் பழகவும் அவர்கள் சிரமப்படுவர்.

- காயத்ரி விவேகானந்தன், கட்டுரையாளர், சித்த மருத்துவர், gayathri6vivek@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in