கருப்பைவாய் புற்றுநோயை வெல்ல உதவும் ‘90-70-90’ 

கருப்பைவாய் புற்றுநோயை வெல்ல உதவும் ‘90-70-90’ 
Updated on
2 min read

“ஒரு நோயை இல்லாமல் செய்துவிட்டால், அதைப் பற்றியும் அதைக் குணப்படுத்தும் முறைகள் பற்றியும் நாம் கவலைப்படத் தேவை யில்லை!’’ நுண்ணுயிரியலின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் லூயி பஸ்தேரின் வரிகள் இவை!
‘திருடனே இல்லாத ஊரில் பூட்டு எதற்கு?’ என்பதைப் போலத்தான் இது. அம்மை, போலியோ போன்ற தொற்றுநோய்களை முற்றிலும் ஒழித்த பிறகு, அதைப் பற்றிய கவலையே இல்லாமல் நாம் இப்போது இருப்பதைப் போல, புற்றுநோயிலும் இந்த நிலையை நாம் அடையவேண்டும் என்று சொல்லும் உலக சுகாதார அமைப்பு, அதற்காக முதலில் ஹெச்பிவி வைரஸையும் அதனால் உருவாகும் கருப்பைவாய் புற்றுநோயையும் கையில் எடுத்துள்ளது.

ஹெச்பிவி வைரஸ்: ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்' எனும் இந்த ஹெச்பிவி வைரஸ் ஆரம்பத்தில் ஒரு தொற்றாக உள்நுழைந்து, உடலுக்குள் இருப்பதே தெரியாமல் தங்கியிருந்து, பின்பு புற்றுநோயாக வெளிப்படும். அதிலும் குறிப்பாக, இந்த ஹெச்பிவி வைரஸின் 16, 18ஆம் வகைகள் உடலுறவுக்குப் பின் ஆண் பெண் இருவருக்குமே தொற்றுகிறது என்றாலும் பெரும்பாலானவர்களில் இது எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.

ஆனால், நோயெதிர்ப்புத் திறன் குறைந்த நூற்றில் ஓரிருவருக்கு மட்டும் காய்ச்சல், உடல் சோர்வு, பிறப்புறுப்புகளில் புண் அல்லது மருக்கள் போன்ற ஆரம்ப அறிகுறிகளை ஏற்படுத்தும். இந்த ஹெச்பிவி வைரஸ் உடலைவிட்டு எங்கும் போகாமல் அவர்களுக்குள்ளேயே தங்கி, அணுக்கள் வரை பாதித்துப் பல ஆண்டுகள் கழித்து வெளித்தெரியும்போது, குணப்படுத்த முடியாத புற்றுநோயாக வெளிப்படும்.

இந்தப் புற்றுநோய் ஆண்களையும் பெண்களையும் ஆசனவாய், பிறப்புறுப்பு, தொண்டை ஆகிய இடங்களில் பொதுவாகப் பாதிக்கிறது என்றாலும், இது பரவலாகப் பெண்களின் செர்வைகல் கேன்சர் எனும் கருப்பைவாய் புற்றுநோயாகவே ஏற்படுகிறது. நமது நாட்டில் மட்டுமே ஆண்டுக்கு ஒன்றேகால் லட்சம் பெண்களை இது பாதிக்கிறது. அறிகுறியே வெளிப்படுத்தாமல் இருந்து, அது வெளியே தெரியும்போதே சிகிச்சை யளிக்க முடியாத 3 அல்லது 4-வது நிலையில் இருப்பதால் பெரும் பான்மைப் பெண்களை (70,000) நாம் இழக்கவும் நேரிடுகிறது.

எப்படித் தவிர்ப்பது? - தொற்றுநோய் தடுப்பே இதைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி. பிரைமரி, செகன்டரி, டெர்சியரி எனும் இந்த நோய்த்தடுப்பு முறைகளில் நோய் வராமலே தவிர்க்க உதவும் தடுப்பூசிகளே முதன்மையானது மட்டுமல்ல; முக்கியமானதும்கூட.
9-14 வயதிற்குள்ளிருக்கும் பெண்களுக்கு 0, 6 என இரண்டு முறையும், 15-24 வயதில் 0, 2, 6 என மூன்று முறையும் போடப்படும் ஹெச்பிவி தடுப்பூசிகள் நிச்சயம் ஹெச்பிவி தொற்றையும், கருப்பைவாய் புற்றையும் தவிர்க்கிறது.

இப்படி முதல்கட்டமாகத் தடுப்பூசி போடத் தவறிய திருமணமான, குழந்தைப்பேறு அடைந்த பெண்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையோ, அவர்களது 35, 45 வயதில் என இரண்டு முறையோ, கருப்பையிலிருந்து பிரத்யேக 'ஹெச்பிவி டிஎன்ஏ' எனும் இந்த இரண்டாம் கட்டப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அப்படி இந்த இரண்டாம் கட்டப் பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டால், அது புற்றுநோயாக மாறாமலிருக்க, ‘கிரையோ, தெர்மல் அப்லேஷன்' உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

‘90-70-90' - இந்த நோய்த்தடுப்பு முறைகளை அடிப்படையாக வைத்துத்தான் 2030க்குள் ‘90-70-90' எனும் நிலையை எட்டுவோம் என அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது உலக சுகாதார அமைப்பு. அதாவது 2030ம் வருடத்திற்குள் பதினைந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 90% தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்; 35, 45 வயதில் ஹெச்பிவி டிஎன்ஏ பரிசோதனையைக் குறைந்தது 70% பெண்களுக்குச் செய்திருக்க வேண்டும்; அப்படி பரிசோதனையில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டால் அவர்களில் 90% பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் இந்த ‘90-70-90' என்பதன் பொருள்.

சென்ற 2020, நவம்பர் 17 அன்று விடுக்கப்பட்ட இந்த 90-70-90 இலக்கை 2030க்குள் உலக நாடுகள் அடைந்துவிட்டால், இன்னும் நூறு ஆண்டுகளில், அதாவது 2120 ஆம் ஆண்டிற்குள் கருப்பைவாய் புற்றுநோயை இல்லாமலே செய்துவிடலாம் என்கிறது இந்த நிறுவனம். கடந்த மூன்றாண்டுகளில் இந்த இலக்கை நோக்கி மேற்கத்திய நாடுகள் முந்தி சென்றுகொண்டிருக்க, இந்தியா இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது என்பதைக் கவனித்த இந்திய அரசு, தற்போது இந்தத் தடுப்பு மருந்தின் விலையை வெகுவாகக் குறைத்து அது எளிய மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செய்திருப்பதுடன், நமது மருத்துவ அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம் மக்களைச் சென்றடையவும் தொடர்ந்து முயன்றுவருகிறது.

நமது பங்களிப்பும் தேவை: 30லிருந்து 69 வயதுக்குட்பட்ட பெண்களில் 16 கோடி பேருக்குக் கருப்பைவாய் புற்று ஏற்படும் சாத்தியமிருக்கும் நமது நாட்டில் இருக்கும்போது, அதைத் தடுக்க அரசாங்கமும் மருத்துவமும் மட்டும் முயன்றால் போதுமா? பொதுமக்களாகிய நமது பங்களிப்பும் இந்தப் போரில் அவசியமல்லவா? பெண்கள் இந்தக் கருப்பைவாய் புற்று, அதைத் தடுக்கும் முறைகள் பற்றித் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

சரியான வயதுகளில் தடுப்பூசிகளையும் பரிசோதனைகளையும் அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதே வேளை, இது பெண்களுக்கான நோய்த்தடுப்புதான் என்றாலும், ஒவ்வொரு ஆணும் தன்னுடைய மகளுக்குச் சரியான வயதில் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளச் செய்வதும், தன்னுடைய மனைவிக்குச் சரியான நேரத்தில் பரிசோதனையை மேற்கொள்வதும் என வீட்டில் இருக்கும் பெண்களின் ஆரோக்கியத்தின் மீது ஒவ்வொருவரும் கவனம் செலுத்தினால் நமது ஒவ்வொருவரின் வாழ்விலும் நிச்சயம் மாற்றங்கள் நிகழும். கருப்பைவாய் புற்று இல்லாத எதிர்கால இந்தியா எனும் நமது கனவும் சாத்தியமாகும்! - மருத்துவர் சசித்ரா தாமோதரன் கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர், sasithra71@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in