

தமிழகத்தில் சமீப காலமாக மழை அதிகமாகப் பெய்துவருவதால் சளி, காய்ச்சலுடன் சேர்ந்து மெட்ராஸ் ஐ என்ற கண் நோய் மக்களிடையே பரவிவருகிறது. இந்த நோய் கண்ணில் கன்சங்டிவா (Conjunctiva) என்ற விழி வெண் படலத்தில் ஏற்படும் நோயாகும். இது அடினோ வைரஸ் என்ற கிருமியினால் வருகிறது. முதன்முதலில் சென்னை எழும்பூர் பிராந்திய கண் மருத்துவமனையில் இது கண்டறியப்பட்டதால், இதனை மெட்ராஸ் ஐ என்று அழைக்கிறோம்.
இந்த நோய் வைரஸ் கிருமியினால் வருவதால் இரண்டு வாரங்களில் எளிதில் சிகிச்சை மூலம் சரியாகும் தன்மையைக் கொண்டிருந்தாலும், இது கருவிழி பாதிப்பை ஏற்படுத்தி கண்ணில் கருவிழியில் சிறுசிறு தழும்புகளை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், இதனுடன் சேர்ந்து பாக்டீரியா கிருமி பாதிப்பு வர வாய்ப்புள்ளது. இதனால் கண் மருத்துவரின் தொடர் சிகிச்சை அவசியம்.
கவனமான சிகிச்சை தேவை: கண்ணில் எரிச்சல், கண் வலி, கண் சிவத்தல், கண்ணில் மண் விழுந்ததைப் போல் உறுத்தல், கண் பீளை, நீர் வருதல், காலை எழும்போது கண் ஒட்டிக் கொள்ளுதல், கண்ணில் ரத்தம் கலந்த நீர் வடிதல், கண் மங்கலாகத் தெரிதல் போன்ற அறிகுறிகளுடன் வரும் இந்த கண் நோயானது சளிக் காய்ச்சலுடன் சேர்ந்து வரலாம். மேற்கண்ட அறிகுறிகளுடன் மெட்ராஸ் ஐ இருந்தால் உடனடியாகக் கண் மருத்து வரை அணுக வேண்டும். கண் மருத்துவர் பரிந்துரையின்படி மட்டுமே மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
சுயவைத்தியம் செய்துகொள்வதோ, மாத்திரைப் பரிந்துரை இல்லாமல் மருந்துக் கடைகளில் மருந்து வாங்கி பயன்படுத்தவோ கூடாது. ஏனென்றால், கண்ணில் கருவிழி புண், கிளாகோமா, கண்ணில் தூசி விழுந்து அதனால் ஏற்படும் பாதிப்பு காரணமாகவும் கண் சிவந்து காணப்படலாம். இவற்றை மெட்ராஸ் ஐ என்று நினைத்துக் கொண்டு ஸ்டீராய்டு கலந்த மருந்தை மருந்து கடைக்காரர்கள் கொடுக்க வாய்ப்புள்ளது. இதனைப் பயன்படுத்தும்போது பார்வை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது ஆகவே மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்தைப் பயன்படுத்தக் கூடாது.
மெட்ராஸ் ஐ நோய் வந்தவர்கள் கைக் குட்டையால் கண்களைத் துடைப்பதைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் ஒரு சுத்தமான பாத்திரத்தில் பஞ்சை போட்டு தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் கொதிக்கவிடுங்கள். சூடு குறைந்தவுடன் தண்ணீரை வடிகட்டி பஞ்சை மட்டும் பாத்திரத்தில் வைத்துக்கொண்டு அதனைக் கொண்டு கண்ணைத் துடைத்தவுடன் பஞ்சைக் குப்பையில் போட்டு விட வேண்டும். ஒரு முறை கொதிக்க வைத்த பஞ்சை சிறிது சிறிதாக எடுத்து ஆறு மணி நேரம் வரை பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறையும் பஞ்சை எடுப்பதற்கு முன் கைகளைச் சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும்.
இந்த பாதிப்பு முழுமையாகச் சரியாக 15 நாட்கள் ஆகும். கண் மருத்துவரிடம் குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் கண்களைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மருத்துவர் பெ.ரங்கநாதன் கட்டுரையாளர், கண் மருத்துவ நிபுணர், drranganathansocial@gmail.co
| மெட்ராஸ் ஐ வந்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை: # உங்கள் போர்வை, தலையணை உறை, துண்டு கைக்குட்டை போன்றவற்றைத் தினமும் சுத்தமாகத் துவைத்துப் பயன்படுத்தவும். |