

அந்தச் சிறுமிக்கு 17 வயது. மோசமான எடையிழப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஒரு மாத காலமாக இருப்பதாக என்னிடம் கூறினாள். ரத்தப் பரிசோதனை மூலம் அவளது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது தெரியவந்தது. கூடுதல் பரிசோதனைகளில் டைப்-1 நீரிழிவு நோய் இருப்பது உறுதியானது. தினமும் இன்சுலின் எடுக்க வேண்டும் என அவளிடம் கூறினேன். வாழ்நாள் முழுவதும் இன்சுலின் எடுத்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும், உடலுக்குக் கேடு விளையும் என்பன போன்ற கற்பிதங்களால் இன்சுலின் எடுக்க அவளது குடும்பம் தயங்கியது. இன்சுலின் மட்டுமே சிகிச்சை என நான் வலியுறுத்தியதால், வேறு வழியின்றி அவர்கள் ஒப்புக்கொண்டனர். தினமும் இன்சுலின் எடுக்கத் தொடங்கிய பின்னர் அறிகுறிகள் மறைந்து, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினாள்.
ஒரு மாதத்துக்குப் பின்னர், பள்ளித் தோழி ஒருவரின் அறிவுரைப்படி இன்சுலின் எடுப்பதை அவள் நிறுத்திவிட்டாள். சில நாட்களில் அவளுக்கு வயிற்று வலி, கடுமையான வாந்தி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு ஐசியுவில் சேர்க்கப்பட்டாள். அவளது ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்தது. கடுமையான நீரிழிவு கீட்டோஅசிடோசிஸ் (DKA) இருப்பதும் கண்டறியப்பட்டது. சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்திலேயே அவள் உயிரிழந்தார். அவளுக்கு டைப்-1 நீரிழிவு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, தகுந்த சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டு, தவறான அறிவுரை காரணமாக அவளுக்கு மரணம் ஏற்பட்டது. டைப்-1 நீரிழிவு நோய் என்பது ஓர் ஆபத்தான நோய். இன்சுலின் சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால் அது உயிரிழப்புக்கு இட்டுச் செல்லும்.
இன்சுலின் செயல்பாடு: இன்சுலின் என்பது ஒரு ஹார்மோன். அது கணையத்தில் உள்ள பீட்டா செல்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. கார்போஹைட்ரேட்டிலிருந்து உடலுக்குக் கிடைக்கும் குளுக்கோஸின் அளவை உணரும் பீட்டா செல்கள், அதற்கேற்ப இன்சுலினை வெளியிட்டு, குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தப்பட்ட வரம்பிற்குள் பராமரிக்கின்றன. ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை (குளுக்கோஸ்) செல்களுக்குள் நகர்த்த இன்சுலின் தேவைப்படுகிறது. இவ்வாறு செல்களுக்குள் நகர்த்தப்படும் குளுக்கோஸ்தான் உடலுக்குத் தேவைப்படும் ஆற்றலாக மாற்றப்படுகிறது.
டைப் 1 நீரிழிவு நோய்: ஒப்பீட்டளவில் டைப் 1 நீரிழிவு நோய் ஆபத்தானது. டைப் 1 நீரிழிவு நோயில், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு கணையத்தில் உள்ள பீட்டா செல்களை அழிக்கும். பீட்டா செல்களின் அழிக்கப்படுவதால், உடலில் இன்சுலின் பற்றாக்குறை ஏற்படும். இன்சுலின் பற்றாக்குறையால், குளுக்கோஸானது செல்களுக்குள் செல்வதற்குப் பதிலாக ரத்தத்தில் அதிகரித்துக்கொண்டே செல்லும். இதனால், உடலானது தனக்குத் தேவைப்படும் ஆற்றலுக்கு குளுக்கோஸைப் பயன்படுத்தாமல், கொழுப்பை எரிபொருளாகப் பயன் படுத்தும் நிலைக்குத் தள்ளப்படும். கொழுப்பிலிருந்து ஆற்றலைப் பெறும்போது கீட்டோன்கள் உற்பத்தியாகும். இந்த கீட்டோன்கள் உடலில் அமிலத்தன்மையை அதிகரித்து நீரிழிவு கீட்டோஅசிட்டோசிஸ் (DKA) நிலைக்கு இட்டுச் செல்லும். அதிக எடையிழப்பு, அதீதச் சோர்வு, மயக்கம் உள்ளிட்ட டைப்-1 நீரிழிவு நோயின் அறிகுறிகள் இதன் காரணமாகவே ஏற்படுகின்றன.
பாதிப்புகள்
டைப்-1 நீரிழிவு நோய்க்கு முறையான சிகிச்சை எடுத்து, ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், நாளடைவில் பார்வையிழப்பு, சிறுநீரக பாதிப்பு, இதய நோய், பக்கவாதம், நரம்பு பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படலாம்.
டைப்-1 நீரிழிவு நோய் பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலும் இளம் பருவத்திலுமே அதிகம் ஏற்படுகிறது. இருப்பினும், எந்த வயதிலும் ஏற்படும் சாத்தியம் உண்டு.
எவ்வாறு கண்டறியப்படுகிறது? - டைப் 1 நீரிழிவு நோய் இருப்பதாக மருத்துவர் கருதினால், அவர் ‘ஆட்டோ ஆன்டிபாடிகள்’ பரிசோதனையைப் பரிந்துரைப்பார். அந்தப் பரிசோதனை ‘தன் தடுப்பாற்றல்’ (Autoimmune) நோய் உள்ளதா என்பதைக் கண்டறிய உதவும். ‘ஆட்டோ ஆன்டிபாடிகள்’ ரத்தத்திலிருந்தால், உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நீரிழிவுப் பாதிப்பு பெரும்பாலும் டைப்-1 பாதிப்பாகவே இருக்கும். கீட்டோன்களுக்கான சிறுநீர் அல்லது ரத்தப் பரிசோதனை மூலமும் டைப்-1 நீரிழிவை மருத்துவர் கண்டறிய முடியும்.
உயிர் காக்கும் சிகிச்சை: 100 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது இன்சுலின் கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்புவரை, டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட எவரும் மரணத்திலி ருந்து தப்பவில்லை. இன்சுலின் பயன்பாட்டிற்கு வந்ததிலிருந்துதான், டைப்-1 நீரிழிவு நோயாளிகளால் உயிர் வாழ முடிகிறது. இன்சுலின் நமது இரைப்பையில் அழிக்கப்பட்டுவிடும் என்பதால், இன்சுலினை மாத்திரையாக எடுத்துக் கொள்ள முடியாது. ஊசியாக மட்டுமே உடலில் செலுத்த முடியும். டைப்-1 நீரிழிவு நோய்க்கு இன்சுலின் ஊசி மட்டுமே உயிர் காக்கும் சிகிச்சை. இந்தப் பாதிப்புக்கு ஒரு நாளைக்கு நான்கு முறை இன்சுலின் ஊசி தேவைப்படும். டைப்-1 நீரிழிவுக்கான இன்சுலின் சிகிச்சை, டைப்-2 நீரிழிவுக்கான சிகிச்சையிலிருந்து மாறுபட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேன்நிலவு கட்டம்: இன்சுலின் சிகிச்சைக்குப் பிறகு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சில நோயாளிகள் ‘தேன்நிலவுக் கட்ட’த்தில் நுழைவார்கள். அப்போது கணையத்தில் எஞ்சியிருக்கும் பீட்டா செல்களின் செயல்பாடு ஓரளவு மீட்கப்படும். இதன் காரணமாக அவர்களுக்கு வழங்கப்படும் இன்சுலின் அளவு குறைக்கப்படும். அப்போது சிலர் ரத்தச் சர்க்கரை குறைவால் ஏற்படும் பாதிப்புகளையும் அனுபவிக்க நேரிடும். அது அவர்களுக்கு இன்சுலின் தேவையில்லை என்கிற தவறான உணர்வை ஏற்படுத்தும். ஆனால், இந்தத் ‘தேன்நிலவுக் கட்டம்’ சில மாதங்கள் முதல் அதிகபட்சம் ஒராண்டு வரையே நீடிக்கும். இதன் காரணமாக, இன்சுலின் எடுப்பதை நிறுத்திவிட்ட நோயாளிகள் டிகேஏ பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். எனவே, தொடர்ந்து ரத்தச் சர்க்கரையைக் கண்காணிக்க வேண்டும்.
நீரிழிவு கீட்டோஅசிட்டோசிஸ் (DKA): டைப்-1 நீரிழிவு நோயாளிகள் ஒரு டோஸ் அல்லது இரண்டு டோஸ் இன்சுலின் எடுக்கத் தவறினால்கூட அவர்களுக்கு டிகேஏ ஏற்படும் சாத்தியம் உண்டு. டிகேஏ என்பது ஒரு தீவிர மருத்துவ அவசரநிலை. உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அது உயிருக்கு ஆபத்தாக முடியும். உடல்நலக்குறைவு காரணமாக இன்சுலின் அளவைச் சுயமாகக் குறைப்பதும் அல்லது தவிர்ப்பதும் டிகேஏ நிலைக்கு இட்டுச் செல்லக்கூடும்.
குணப்படுத்த முடியுமா? - டைப் 1 நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது; வராமல் தடுக்க முடியாது. இதற்கான புதிய சிகிச்சைகள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. மிகக் குறைவான வலியை ஏற்படுத்தும் ஸ்மார்ட் இன்சுலின் பேனாக்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இன்சுலின் பம்புகள் ஊசியால் ஏற்படும் வலியை முற்றிலும் தவிர்க்க உதவும். நிபுணரிடம் தொடர் சிகிச்சை, நல்ல குடும்ப ஆதரவு, மனநல மருத்துவரின் ஆலோசனை ஆகியவற்றின் மூலம் டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து வயதினரும் வாழ்நாள் முழுவதும் அந்த நோயுடன் முழுமையான ஆரோக்கியத்துடன் வாழ முடியும். - கட்டுரையாளர், மருத்துவர், நாளமில்லாச் சுரப்பியியல் நிபுணர், நீரிழிவு சிகிச்சை சிறப்பு நிபுணர், டாக்டர் சிவப்பிரகாஷ், sivaprakash.endo@gmail.com