

இந்த வாரக் கேள்விக்குப் பதில் அளிப்பவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் டாக்டருமான சு. முத்துச்செல்லக்குமார்:
எனக்கு வயது 59. எட்டு ஆண்டுகளாக நீரிழிவு நோய் உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன், Posthitis என்று ஆங்கில மருத்துவத்தில் சொல்லப்படும் சிறுநீர்ப் புற வழியில் புண் வந்து குணமடைந்தது. மறுபடியும் தற்போது அதே இடத்தில் புண் வந்து ஆறுகிறது. ஆங்கில மருத்துவர்கள், இதற்குத் தனியாக மருந்து எதுவும் இல்லை என்றும், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தால், தானாகவே சரியாகிவிடுமென்றும் கூறுகிறார்கள். தங்களின் ஆலோசனையை அறிய விரும்புகிறேன். நீரிழிவுக்கும் சரியான மருத்துவத்தை அறிய விரும்புகிறேன்.
நீங்கள் குறிப்பிட்டது போல உங்களுக்கு ஆணுறுப்பின் மொட்டுத் தோலழற்சி (Posthitis) ஏற்பட்டுள்ளது. இது ஆணுறுப்பின் மொட்டுப் பகுதியையும் பாதிக்கலாம் (Balanitis). பெரும்பாலும் இவை இரண்டும் சேர்ந்தே ஏற்படும் (Balanoposthitis).
இந்தப் பாதிப்பு பல்வேறு தொற்றுநோய்க் கிருமிகளால் ஏற்படலாம் (பால்வினை நோய்க் கிருமிகள் உட்பட). சிலருக்கு ஒவ்வாமையாலும், மூட்டுவாத நோய்களாலும், தோல் நோய்களாலும், சில மருந்துகளாலும்கூட ஏற்படலாம்.
உங்களுக்கு எட்டு வருடங்களாக நீரிழிவு இருப்பதுடன், அது கட்டுப்பாட்டிலும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, அப்பகுதியில் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட இது வழிவகுக்கிறது.
எனவே, நல்ல நீரிழிவு சிறப்பு மருத்துவரிடம் காண்பித்து ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் கொண்டுவரவும். தங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி, நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி அழற்சியையும் அதனால் ஏற்படும் தொந்தரவுகளையும் குறைக்கவும்.
ஆணுறுப்பின் மொட்டுத் தோல் பகுதியில் நீரிழிவால் பாதிக்கப்பட்ட வர்களின் சிறுநீர் சேருவதே, இத்தகைய அழற்சிக்குக் காரணமாகிறது. எனவே, இப்பகுதியைச் சோப்பால் லேசாகக் கழுவி, சுத்தமாக, உலர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தேவைப்பட்டால் சிலருக்கு முன்பகுதித் தோலை அறுவை சிகிச்சை செய்து (Male circumcision) குணப்படுத்த வேண்டிவரும்.
‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். வாசகர்கள் தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை அனுப்பலாம். மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002 |